மூச்சிலும் பேச்சிலும் முதுமொழி தமிழே
வையம் பேசும் மொழிகளிலே
வளமை நிறைந்த வண்டமிழே
பைய நாவை அசைத்தாலும்
பாங்காய் வருவாய்ப் பைந்தமிழே!
மையல் கொண்டு கற்றாலே
மங்காப் புகழைத் தந்திடுவாய்
தையல் உன்னைப் போன்றதொரு
தனித்த மொழியும் இல்லையம்மா
சங்கம் வைத்து வளர்த்தனரே
சாரம் மிகுந்த செம்மொழியை
வங்கக் கடலின் ஆழம்போல்
வளமை பலவும் நிறைந்துள்ள
தங்கத் தமிழைக் கற்றதனால்
தனித்த புகழைப் பெற்றவர்கள்
எங்கும் மக்கள் பலருண்டாம்
என்றே நீயும் அறிவாயா?
மண்ணில் பிறந்த மானிடனே
மங்காப் புகழைப் பெற்றிடவே
விண்ணில் சென்று நீயுந்தான்
வெற்றிக் கொடியை நாட்டிடவே
கண்ணின் மணியாய் நம்தமிழைக்
கருதி நீயும் கற்றிடணும்
எண்ணம் யாவும் எப்போதும்
என்றன் உயிரே என்றிடணும்
********************************************************************************
குடிபுகுந்தாய் என்னில்லம் குன்றாது நிற்க
விடிவெனக்கு நீதந்தாய் விந்தைதான் நாளும்
முடிந்தவரைக் காத்திடவும் முற்றிலுமாய்த் தந்துப்
படியெனவும் வந்திட்டாய்ப் பார்!
பார்மிசை வாழ்த்துகின்றேன் பார்த்தெனைப் புன்னகையால்
வார்த்தைகள் சொல்லுகின்றாய் வர்ணிக்க வார்த்தையில்லை
சேர்த்தெனை முத்தமிட்டாய் சேர்த்துவைத்த சொத்தாக
சீர்பெற வேண்டும்நீர் சீர்!
சீர்பெற்று நானும் சிறந்திட என்னருகில்
பார்போற்ற என்னையும் பார்த்தவர்கள் கண்படவும்
ஊர்விட்டு வந்தெனை ஊரறியச் செய்திட்டாய்
யார்செய்தல் கூடிடுமோ பார்!
யார்வந்து நின்றிடினும் யார்வந்து சொல்லிடினும்
கார்மேகம் போன்றென்னைக் காலத்தில் மாற்றிட்டாய்
மார்தட்டிச் சொல்லிடுவேன் மாதாவே நீதெய்வம்
சீர்பெற்று நின்றிடும் சீர்!
சீலத்தில் நல்லது சீர்த்தமிகு தாயன்பு
ஞாலத்தில் நன்னெறிகள் ஞானத்தா லோங்கிடவும்
காலத்தில் செய்திடுவாய் காரியங்கள் ; நன்மைகளால்
பாலத்தை நல்கும் பறந்து!
மாண்புள்ள சான்றோர்கள் மண்ணுலகில் தாயன்பைக்
காண்கின்ற பாதையைக் கண்ணெதிரே காட்டிவிட்டார்
வேண்டுகின்ற சொத்துகள் வேகமாய்ப் பற்றிடவே
ஆண்டவனும் நல்கிய அன்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக