கவிஞர் ப. முகம்மது அபூபக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் ப. முகம்மது அபூபக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் ப. முகம்மது அபூபக்கர்


 

நிலை என்று மாறும்?

தித்திக்கும் தேனாகத் திகழ்கின்ற நல்ல
    செந்தமிழின் பெருமாண்பு சீர்நிலவு போல
எத்திக்கும் ஒளிவீச இன்னுழைப்பை நல்கி
    இனியபுகழ் சேர்த்திட்ட என்றமிழன் இன்று
தித்திக்கும் தேன்தமிழின் சீர்மைதனை மறந்து
    சிறப்பற்ற வேற்றுமொழித் தோட்டத்தில் மூழ்கி
புத்திக்குப் பொருந்தாத போக்கினிலே ஆழ்ந்து
     பொற்பின்றி வாழ்கின்ற புரைஎன்று மாறும்?
 
இப்பாரில் எங்கணுமே இலங்குகடல் அன்ன
      எத்திசையும் போற்றிடவே எழில்வாழ்வில் மின்னி
ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமே இன்றி
       உலகுதனை ஆண்டிட்ட ஒண்டமிழன் இன்று
செப்பதற்கு முடியாத சீரழிவைப் பெற்றுச்
       சிங்கமெனத் திகழ்ந்திருந்த தீரமெலாம் அற்று
கொப்பற்ற மரம்போலக் கொண்டகளை இழந்து
       கூலிகளாய் வாழ்கின்ற குறைஎன்று மாறும்?
 
நல்லவள மெல்லாமும் நயமாகப் பெற்று
     நலிவேது மில்லாது நன்முகிலைப் போல
அள்ளியள்ளிக் கொடுக்கின்ற அரும்வள்ள லாக
     அவனியிலே வாழ்ந்திருந்த ஆய்தமிழன் இன்று
வல்லமையை இழந்துபெரும் வறுமையினால் இன்ப
     மணமிழந்து, திருவிழந்து, மாண்பிழந்து யாரும்
எள்ளுகின்ற கீழ்நிலையில் எளியோனாய்ச் சற்றும்
    இன்பமின்றி இருக்கின்ற இழிவென்று மாறும்?
 
கண்ணெனவே ஒளிர்கின்ற கல்வியதை நாளும்
     கன்னலது சாறாகக் கருத்தோடு பருகி
மின்னுகின்ற முத்தாக மேதினியில் யார்க்கும்
      மேலாக விளங்கிட்ட மேன்மையுறு தமிழன்
தின்மைதரும் கள்ளருந்தி தேசற்று வாழ்வில்
       தேய்ந்துவிட்ட பித்தளையாய்த் திரிந்துழன்று சற்றும்
வண்மையின்றி, வாய்மையின்றி, மாட்சியின்றி அன்பு
         மனமின்றித் தாழ்ந்திருக்கும் மறுவென்று மாறும்?
 
நாகரிகக் கலைகளது நறுமணத்தை இந்த
     நானிலத்தார் அறியாத நாளினிலே ஞான
சாகரம்போல் தானிருந்த தரணியிலே நல்ல
     சால்புதனை வளர்த்திட்ட தண்டமிழன் இன்று
வாகழிக்கும் தீமைமிகு மடமையிலே ஆழ்ந்த
     மருள்சேர்க்கும் இருளென்னும் வாவியிலே மூழ்கி
நீகமென வெளிஉலகை நினையாதா னாக
     நீர்மையின்றி வாழ்கின்ற நிலைஎன்று மாறும்

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...