யானை படுகொலை
ஐயகோ! என்சொல்லி ஆற்றுவேன் என்னெஞ்சை?
துய்யவிலங்கு யானை துயர்படக் கொன்றவனை
நையப் புடைத்து நலியவைக்க மாட்டாரோ?
கையை முறித்துக் கழுவாயும் தேடாரோ?
கள்ளமில்லா ஐந்தறிவு காட்டு விலங்கெனினும்,
அள்ளக் குறையாத அன்பைப் பொழியுமடா!
பிள்ளையார் தெய்வமென்று பேணி வழிபட்டும்
உள்ளம் தெளியா ஒருகொடியன் செய்கைநன்றோ?!
விலங்குவாழ் காடுகளை வீழ்த்திநில மாக்கி,
துலங்கும்வீ டாக்கி, தொழிற்சாலை ஆக்கி,
இலங்கிட வாழ்வமைக்கும் ஈன மனிதன்
கலங்கும் விலங்கின் கதியறிந்தான் இல்லையே!
பயிர்களை நாசப் படுத்திய தென்று
தயவிரக்கம் இன்றித் தறுகண்மை செய்தான்!
உயிர்நேயம் இல்லா உலுத்தனைத் தூக்குக்
கயிற்றினில் ஏற்றிக் கடமையைச் செய்யாரோ?
சினையானை என்று தெரிந்தபின்(பு) அந்தோ!
மனம்வருந்தி நோகுதம்மா! மாய்ந்த உயிரை
இனிமீட்க யாவரே இவ்வுலகில் உள்ளார்?
வனவிலங்கும் தூற்றிட வன்கொடுமை செய்தானே!
தொன்றுதொட்(டு) இன்றும் தொடரும்நம் தொல்லுறவாய்
என்றும்நம் அன்புக் கடிபணிந்து பாடாற்றும்;
வென்று முடிக்க வினைபுரியும்; தோழமையைக்
கொன்ற கொடியவனைக் கூர்வாளால்
கொல்லாரோ?
*****************************************************************************************
கண்ணால் கணைதொடுத்துக் காதல் கனவுகளைப்
பெண்ணே வளர்க்கின்றாய்! பேதைமை செய்கின்றாய்!
பண்ணால் குரலெடுத்துப் பைந்தமிழ்ப் பேச்சாலென்
எண்ணச் சிறகுவிரித்(து) எங்கோ பறக்கவிட்டாய்!
பொன்னைக் கரைத்ததில் பூந்தேனைச் சேர்த்தினிக்கும்
கன்னலின் சாறும் கலந்துயிர் ஊட்டியபொன்
மின்னிடும் மெல்லியுன் மேனிச் சிலையழ(கு)
என்னை வதைக்குதடி! ஏக்கம் பெருக்குதடி!
சுற்றிய சேலையில் தோகை மயிலெனச்
சிற்றிடை தானசையச் செவ்விதழ் தேன்சிந்த!
வெற்றி நடைபோட்டு வேல்விழி யாலென்னை
முற்றிடும் ஆசையில் மூழ்கிடச் செய்கின்றாய்!
கண்டதும் நெஞ்சில் கனிந்தது காதல்!மலர்ச்
செண்டென நீயும் சிலைபோல் எதிர்வந்தாய்!!
வண்டமிழ்ப் பாவாய்! மலர்த்தேன் சிமிழிதழை
உண்டு களித்திருக்க உள்ளம் உருகுதடி!
தனிமையில் உன்றன் தளிர்க்கரம் பற்றிக்
கனியென மின்னுமிரு கன்னங்கள் தொட்டுப்
பனிமலர் தேனைப் பருகிவிட்டால் போதும்!
மனிதப் பிறவி மறுபிறவி வேண்டாமே!
கட்டழகு பாவையே! கட்டி எனையிழுத்துக்
கட்டளையிட் டாலும் கடிவாளம் போட்டாலும்
முட்டாத காளையாய் முன்வந்து நின்றுநீ
இட்டபணி செய்யேனோ? இன்பத்தில் மூழ்கேனோ?
காற்றில் அசையும்உன் கார்கூந்தல் தென்னையின்
கீற்றென ஆடிக் கிளருதடி இன்பத்தை!
போற்றிப் புகழ்ந்துனது பூங்குழலைப் பற்றிமடி
வீற்றிருக்க நெஞ்சம் விழையுதடி பெண்ணணங்கே!
அங்கையைப் பற்றி அரவென உன்னிரு
கொங்கையென் நெஞ்சைக் குழியிட நானணைத்து;
மங்கையுன் தோளை வருடிக் கொடுத்துயிர்
இங்கேயே விட்டாலும் இன்பமடி என்றனுக்கு!
துடுக்குமொழி பேசித் துளைத்தாலும் நெஞ்சம்
கடுக்கவில்லை; இன்பம் கனியுதடி பெண்ணே!
தொடுக்கும் விழியம்பில் தோய்ந்து கிடந்தால்
விடுக்கும்உன் புன்மொழியும் வேய்ங்குழல் ஓசையடி!
பஞ்சுபோல் மேனியைப் பற்றி இழுத்துனது
கொஞ்சு மொழிகேட்கக் கூடுதடி என்னாசை!
விஞ்சுகின்ற ஆசையை வெட்கத்தால் தள்ளிவைத்(து)
அஞ்சி விலகுவது வஞ்சியரின்
நல்லியல்போ?