மாண்புமிகு மனைவி
காலைக்குள் பூசைசெய்து கையை வைத்து
கண்ணாளன் எனையெழுப்பி கண்ண டித்து
வேலைக்கு மணியாச்சு விரைக என்பாள்
விழுந்தடித்து தொடங்கிடுவாள் வீட்டு வேலை
சாலைக்கே வந்திடுவாள் 'தாட்டா' காட்ட
சாயங்கள் பூசாத அன்பால் மின்னும்
சோலைப்பூ என்மனைவி சொக்கத் தங்கம்
சொல்லாலே எனைவெல்லும் சொந்தக் காரி!
அஞ்சிநிற்கும் ஆண்மகனால் ஆவ துண்டோ
அச்சமின்றி முயன்றிடுக அன்பே என்பாள்
கொஞ்சிநிற்கும் வேளையிலும் குலைந்தி டாமல்
குடும்பத்தின் நலனொன்றைக் கோரி நிற்பாள்
வஞ்சிநிற்கும் வடிவழகில் வடிவு ரைத்த
வள்ளுவனின் இலக்கணங்கள் வழுவா நிற்கும்
எஞ்சிநிற்கும் நாள்களிலே இவளுக் காக
எனதன்பை கொட்டுதலே இன்ப மாகும்!
தன்னலங்கள் இல்லாத தாயைப் போன்று
தற்பெருமை கொள்ளாத தகைமை ஒன்றால்
அன்னலட்சு மியாம்தெய்வம் அவளின் கையால்
அன்பொழுக உணவருந்த ஆவல் கூடும்
இன்னலில்லை இதுவரைக்கும் இன்னும் உண்ண
எண்ணுகிற தென்நெஞ்சம் இவளுக் காக
என்னலங்கள் விட்டுவிட ஏங்கு கின்றேன்
எனதருமை மனையாளின் இன்பத் திற்கே!
நிலவைப்போல் அவள்பார்க்கும் பார்வை யாலே
நெஞ்சுருக்கும் துயரங்கள் நீற்றுப் போகும்
கலவைப்போல் மனதுள்ளே கலக்கம் வந்தால்
கணக்காக வழிசொல்வாள் கவலை நீங்கும்
குலவைத்தான் இடுகின்றார் கோயில் கட்டி
குலதெய்வம் கும்பிடத்தான் வீட்டில் வாழும்
சிலைவைத்தால் மனதுக்குள் சிலையை வைத்தே
சித்திரமாம் மனைவிக்குச் சிறப்பு செய்வேன் !
**********************************************************************************************
நிறைமொழித் தமிழ்தன் னேரில்லாத
மறைமொழி இதிலே மந்திரம் உண்டென
வாய்மொழி யாலும் மனமொழி யாலும்
தாய்மொழிக் காத்தல் தமிழரின் கடனாம்
செந்தமிழ் அறிந்தார் செம்மைப் பெற்ற
அந்தணர் ஆகி அருந்தமிழ் யாத்ததால்
கற்றுணை பூட்டிக் கடலிற் பாய்ச்சியும்
சொற்றுணை தந்தது தூயத் தமிழாம்
தூயவள் தமிழைத் தொழுதல் நன்றாம்
தாயவள் மகிழ்வாள் தமிழரும் தழைப்பார்
பற்றுகள் கொண்டு பயின்றிடத் தமிழால்
வெற்றிகள் தேடி விரைவில் வந்திடும்
விண்ணவர் அறியும் வியன்மிகு தமிழை
மண்ணிதில் தமிழர் மறுதலிப் பாரெனில்
வையமும் இகழும் வானோர் நகைப்பர்
ஐயமே இல்லை! அவனியில் நம்நிலை
ஒற்றுமை யற்றே வீணாய்ப் போகுமுன்
பற்றுவோம் தமிழைப் பார்வை விரியுமே!
ஓங்கலி டையுதித்(து) ஒளிரும் கதிர்போல்
ஓங்குக தமிழ்ப்புகழ்
உலகில் எங்குமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக