உண்மை ஏற்பாய்
எத்தனை நாட்கள் இன்னும்
இப்படி இருப்பாய் உன்றன்
நித்திய வாழ்வில் மாற்றம்
நிகழ்ந்திட வேண்டும் சும்மா
கத்தியைத் தீட்டி இங்கே
காரியம் நடக்கா! இன்றே
சத்தியம் செய்வாய் நல்ல
சாதனை படைப்பேன் என்று.
வாய்ப்புகள் உன்னை தேடி
வந்திடும் என்றே நீயும்
கூப்பிய கை களோடு
குந்தியே இருந்தால், வாயில்
சூப்பிடும் விரலில் பாலும்
சுரந்திடும் என்றே நம்பி
ஏங்கியே குழந்தை யாவாய்
இதை நீ உணர வேண்டும்
அலைகடல் ஓய்ந்த பின்னே
அதில்மீன் பிடிப்பே னென்றும்
மலையது தலையை சாய்த்தால்
மகிழ்வுடன் ஏறுவே னென்றும்
தொலைவான் இறங்கி வந்தால்
துள்ளியே கடப்பே னென்றும்
நிலமதில் நீயும் சொன்னால்
நினைத்துனை சிரிப்பர் தானே
செய்தொழில் தன்னை நீயும்
சிறப்புடன் செய்தல் வேண்டும்
பொய்களை மூட்டைக் கட்டி
புறத்தினில் எறிய வேண்டும்
கைகளை நம்பி நீயும்
கடமையை ஆற்ற வேண்டும்
உய்திட இதுவழி என்றே
உரைக்கிறேன் உண்மை ஏற்பாய்
***************************************************************************************
எத்தனை முறைகள் உன்னை
எழுப்பியே விட்ட போதும்
பத்தினில் ஒன்றை யேனும்
பற்றியே எழுந்தா யில்லை
அத்தனை தூக்கம்! உன்றன்
அழிவையே கொண்டுச் சேர்க்கும்
எத்தனை கால மின்னும்
இப்படி தூங்கி நிற்பாய்?
ஓடுகிற காலம் கொஞ்சம்
உனக்கென நின்றா பார்க்கும்?
தேடுகிற பணத்தை யெல்லாம்
தேய்த்தனை குடியும் கூத்தும்
வாடுகிற குடும்பந் தன்னை
வளம்பெறச் செய்யா கோழை
காடுதான் உன்னை ஏற்கும்
கடுந்தவம் செய்யப் போயேன்
பானையுள் குதிரை ஓட்டும்
பாமரத் தனத்தை விட்டு
வானையே பிளப்பே னென்று
வக்கிரத் தெழுந்து நின்றால்
ஆணைகள் இட்டு நம்மை
அடிமையாய் ஆக்கும் கூட்டம்
பூனையாய் அடங்கிப் போகும்
புரிந்துகொள் தமிழா இஃதை
ஏழைகள் என்று நம்மை
இனியொருவர் சொல்ல வேண்டாம்
வாழையாய் தலையைத் தந்து
வாழ்ந்தது போது மென்பேன்
நாளைய சமூகம் உன்னை
நம்பியே உய்ய வேண்டும்
வேளையி துவென்றே நீயும்
வேகமாய் செயலைக் காட்டு
ஏணியாய் உன்னை வைத்து
ஏறியே போனா ரெல்லாம்
‘ஏணியை உதைத்து விட்டார்’
எனும்கதை பேசல் வேண்டா
கூனியே குறுகி நின்று
கும்பிட போடல் விட்டு
ஏணியாய் உழைப்பை வைத்து
இருபதில் இடத்தை தேடு