இங்குமங்கும் பொங்கல் எழில்
நஞ்சைவலம் புஞ்சைவலம் நாட்டுவலம் மாந்தர்வலம்
தஞ்சமாகும் வந்துதிக்கும் தைநாளில் - கொஞ்சிவரும்
வான்கண் பிறந்தநாள் மங்கல பொங்கல்நாள்
ஞானத் தமிழுத்த நாள்!
செங்கரும்பும் மாவிலையும் செவ்வாழை இல்லத்தில்
பொங்கிடும் செய்திதான் பொங்கலாம் - எங்கெங்கும்
தங்கிடும் இன்பம் தமிழர்கள் ஓங்கிட
இங்குமங்கும் பொங்கல் எழில்!
ஆத்திரம் கொண்டோர்க்கே ஆத்திரப் பொங்கலாம்
பூத்துக் குலுங்க புதுப்பொங்கல் - காத்து
இருந்தோர்க்கு கிட்டுவது இன்பமானப் பொங்கல்
பொருத்தமான பொங்லைப் பொங்கு!
குவலயத்தை தீநுண்மி கொள்ளுவதைப் பார்த்தே
இவக்காண் தையாள் எழுந்தாள் - உவாதியைப்
பொங்கி கதிரோன் பொசுக்கியே தொற்றுமாயும்
பொங்கலோ பொங்கியே பொங்கு!
******************************************************************************************
அண்டிவந்த அத்தொற்றால் ஆடிவரும் அன்பரெலாம்
பண்ணமைத்து பாட்டமைத்து பாடுவாரும் பாடலையே
கண்குளிரக் கந்தனது காட்சிகளை காணலையே
வண்ண வடிவேலா வா!
பால்குடமும் காவடியும் பக்தியாலே வேல்வேலாம்
மால்முருகன் மேனி வழிந்தோடும் பால்பாலாம்
வேல்முருகன் ஆடி விளையாடும் நாள்நாளாம்
வேலையாய் வேலவனை வேண்டு!
இச்சைக் கிரியையால் இன்பவள்ளி தெய்வயாணை
பச்சைமயில் மேலமர்ந்தான் பால்முருகன் பூசவிழா
உச்சமாய்ப் பக்தரின் உட்பூசை காணிக்கை
அச்சம் பறந்தோடும் அங்கு!
இடும்பனார் காவடியை ஏந்திவந்தார் அன்னாள்
அடுத்துவந்தோர் தைப்பூசம் ஆக்கினர் இன்னாள்
எடுத்தார்பால் காவடிகள் எங்கும் முருகன்
விடுத்தார்தைப் பூச விழா!
முத்தமிழை வாழவைத்த மூல முருகோனே
வித்தாகக் கீரனுக்கும் விள்ளுதமிழ் ஒளவைக்கும்
கொத்தாய்த் தமிழ்தந்தாய் கோமகனே இம்மண்ணில்
பத்துமலை செந்தமிழைப்
பார்