அன்னை
அன்புடனே வாஞ்சையுட னழகு செய்வார்
அயலார்’கண்’ பட்டுவிட்டா லய்ந்து போவார்
கண்ணுறங்கத் தாய்மொழியில் கவியி சைத்துக்
கவினழகுத் தாலாட்டால் கற்றுக் கொடுப்பார்
மன்பதையில் அவர்காட்டும் வாஞ்சை யன்பை
மறந்துவிட முடியாது; நிலைத்து நிற்கும்!
தன்சுகத்தைத் துறப்பதற்குத் தயங்கி டாது
தன்னுழைப்பைப் பிறர்க்களிப்போர் அன்னை யன்றோ!
தாய்பிரிந்த பசுக்கன்று தனித்துச் சென்று
தன்தாயின் நிலைபற்றி யெண்ணிப் பார்க்கும்
தாய்பிரிக்கும் மனுக்குலமோ தனியே போகும்!
தரங்கெட்டே அன்னையரைத் தாழ்த்திப் பேசும்!
வாய்வீரம் மிகவுண்டு பயன்தா னில்லை
வளர்த்துவிட்ட தாய்தன்னைப் பழிக்கும் தாழ்த்தும்
தாய்போலும் மாசுகளைச் சகிப்பா ருண்டோ?
சமத்துவத்தைப் புசுட்டுபவர் அன்னை யன்றோ!
நதிபோலும் தாயன்பு நன்றே செய்யும்!
நல்லவராய் வாழவழி நடத்திச் செல்லும்!
மதிபோலும் தாய்ப்பாசம் வளர்ந்து வாழும்
மதிக்காத மக்களையும் மகிழ்ந்து வாழ்த்தும்!
நிதிகொடுக்கும் வாழ்க்கைபோல் நீர்மை வாழ்வு
நிறைசுகமாய் வாழ்வதற்கு நீண்ட ஆயுள்
அதிபதியாய் முன்னின்றே அளித்துக் காக்கும்
ஆதிமுதல் தேவதைநம் அன்னை யன்றோ!
பெற்றெடுத்து நன்முறையில் பேணிக் காத்துப்
பிள்ளையைநல் லறிஞனாக வீர னாக
கற்றநல்ல புலவனாகக் கவிஞ னாக
கலைஞனாகத் தியாகியாக வளர்த்து விட்டே
உற்றார்க்கு மற்றார்க்கும் உதவி செய்தே
ஊர்புகழப் புதினமான வுலகைக் காணும்
விற்பன்னர் போற்சமைத்து விட்டுச் சென்றார்
வெற்றிகொண்டோர் தம்பணியில் அன்னை யன்றோ!