டத்தின் முனைவர் சரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டத்தின் முனைவர் சரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

டத்தின் முனைவர் சரசு, பினாங்கு


 

சின்னஞ்சிறு அழகரசி
 
சின்ன விழியில் சீரேந்திச்
      சிந்தும் சிரிப்பில் அழகேந்திக்
கன்னக் குழியில் கனிவேந்திக்
      கவிதை யாக வந்தவளே
மின்னி வந்து சுடரேந்தி
      மிசையும் நிலவில்  ஒளியேந்தி
என்னைத் தந்தேன் உன்னிடத்தில்
      எழிலே வருவாய் என்னிடத்தே!
 
வண்ண மலரே வடிவழகே
      வறண்ட நிலத்தின் மழைமுகிலே
எண்ண இனிக்கும் கவியமுதே
      ஏக்கம் தீர்க்கும்  நறுமுகையே
மண்ணில் தவழும் முத்தழகே
      மாறாச் சிரிப்பின் நித்திலமே
கண்ணின் பாவை நீயன்றோ
      கன்னித் தமிழே வந்திடுநீ!
 
பாடும் கவியின் பொருளேந்திப்
      பாட்டின் இன்ப இசைகூட்டித்
தேடும் செல்வச் செழிப்பேந்தித்
      தெள்ளு தமிழில் சொல்லேந்தி
நாடும் வளமே நீதானே
       நறுந்தேன் என்றன் கற்கண்டே!
ஆடும் மயிலே அழகரசி
       அன்பே  ஓடி வந்திடுநீ!  

**************************************************************************

வேடந் தாங்கி

திருக்குறள் அழகாய்ப் பேசித்
  தினமொரு அறத்தைக் கூறி
அருந்தமிழ்ப் பணியை ஏற்றே
  அழகிய கவிதை பாடிப்
பெரும்பணி புரிந்தோர் இங்குப்
   பெயர்க்கெனப் புரிவர் சேவை;
அருகினில் செல்லின்; ஐயோ!
  அகமெலாம் அழுக்கு மூட்டை!
 
சுடுமொழி சொல்லில் ஏற்றி
   மடமொழி மாதர் தூற்றிச்
சுடுவிழி கொண்டு நோக்கிச்
 சொல்லினால் இதயம் தாக்கிச்
சிடுமுகம் காட்டி நின்று
  சிந்தையும் வெறுக்கச் செய்வார்;
வெடுக்கென உரைக்கும் நாவால்
  வெந்திடும் வெதும்பி நெஞ்சம்!
 
கடைமகன் பிறப்பின் தன்மை
  கருத்தினில் நிறைந்த போதும்
உடையினில் உருவம் காட்டி
 உயர்ந்தவர் வேடந் தாங்கிப்
படைபலம் கொண்டே நாளும்
  பாவமும் செய்தல் கண்டு
நடையெலாம் தளர்ந்தே நானும்
 நலந்தனை இழந்து  நின்றேன்!
 
நடையதும் ஒருநாள் வீழும்
  நாடியும் அடங்கும் தானாய்!
விடைபெறும் அகவை வந்து
  வீதியில் செல்லும் வேளை
கடையனாய் ஊருங் கண்டு
   கரித்துனைக் கொட்டித் தீர்க்கும்!
இடையினில் செய்த குற்றம்
    இறப்பிலும் விடாதே உன்னை!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...