மரபு தூறலின் மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபு தூறலின் மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிச்சுடர் பெருங்குளம் ஹாஜா


 

பண்ணை மலைநாடு

வண்டு மலரூத வசந்தம் மருவிட
            வானத்து வட்டநிலா
வளர்ந்து கவின்கூட்ட வைரமணித் தாரகைகள்
            வார்க்கும் தண்ணொளி

குண்டு மலர்மல்லி குழல்விரித்த நறுமணம்
            குழைந்தே இதழ்காட்ட
கொவ்வைக் கனியமுது கோலக் கருமுகில்
            கூவும் குயிலினத்தைக்

கண்டு விளையாடும் நீலக் கடலொலியில்
            கலைகூட்டும் கயலினம்
      கதிர்வீசும் பவளநிறக் கதிரவன் கீழ்உதயக்
            காட்சி சேர்வைகை

பண்டு சரிதையைப் பரத்தும் பொன்னோடு
            பண்பாடும் புலமையிலே
      பளிச்சிடும் தங்கவயல் பால்ஊற்று ரப்பர், ஈயம்
             பண்ணை மலைநாடு!

*****************************************************************************************
மனச்சிறகுகள்

வானில் சிறகுகள் விரிக்கிறது – மனம்
வட்ட நிலாவில் குளிக்கிறது!
வேனில் கூதல் காய்கிறது – ஒரு
விதையில் விருட்சம் காண்கிறது!
 
உலகம் சுற்றச் செல்கிறது – மனம்
உறவைப் பெருக்கிக் கொள்கிறது!
அழகை நாடிப் போகிறது – அதில்
ஆழம் காட்ட மறுக்கிறது!
 
தடைகள் கடந்தும் நிள்கிறது – மனம்
தாளம் போட்டுக் குதிக்கிறது!
விடைகள் கேட்டுத் தெளிகிறது – பெரும்
வெள்ளம் போலப் பாய்கிறது!

புதுமை நோக்கி நடக்கிறது – மனம்
பொக்கிஷ மாக இருக்கிறது!
பொதுமை தேடித் துடிக்கிறது – மதுப்
புகழில் இன்பம் காண்கிறது!
 
கட்டுப் பாடுகள் உடைக்கிறது – மனம்
கவிதை பாடிக் களிக்கிறது!
எட்டும் வரைகள் இல்லாமல் – அந்த
எட்டாக் கோள்களில் நுழைகிறது!

கவிஞர் எஸ்.முஹம்மது மைதீன்


 

விரைந்தெழுந்தே வாராய்!
 
அச்சமின்றி அவனியிலே ஆண்மையுடன் வாழ்ந்த
      அரும்பேற்றை இழந்துழலும் ஆய்தமிழா! உன்னில்
அச்சமெலாம் குடிகொண்(டு) ஆட்சிசெய்வ தேனோ?
      ஆய்ந்திடுங்கால் உண்மையினை ஆங்குணர்ந்து கொள்வாய்!
இச்சகங்கள் பலபேசி இனபேதம் சொன்ன
        இதயமில்லா இழிஞருடன் இணைந்ததனா லன்றோ?
ஒச்சமிலா ஓரினமாய் உயர்ந்தோங்கி நின்ற
      உன்பேற்றை இழந்திட்டாய்! உளம்நலிந்து விட்டாய்!
 
சாத்திரங்கள் சொன்னதெலாம் சரியென்று நம்பிச்
      சாதியினச் சகதிக்குள் சாய்ந்திட்டாய்; வாழ்வில்
சாத்தியம்சேர் செயலுக்கும் சகுனங்கள் பார்த்துத்
    தன்னம்பிக் கையற்றே தளர்ந்திட்டாய்; உண்மை
நேத்திரமாம் ஆறறிவால் நீளுலகைக் காணா
      நிலையாலே மாட்சியெலாம் நீயிழந்தே, ஓட்டைப்
பாத்திரம்போல் தரமற்றுப் பாழாகிப் பாரோர்
      பரிதாபக் கூற்றுக்கும் பலியாகி விட்டாய்!
 
உடல்நோக உழைத்திட்டாய்! ஊதியமும் பெற்றாய்!
      உற்றதொரு குறைநீக்க உவந்தென்ன செய்தாய்?
உடலோ(டு) உய்யவரும் உளத்தையும் தாக்கி
      உயிர்மாய்க்கும் கள்ளுக்கே உன்செல்வம் ஈந்தாய்!
கடல்தாண்டி அறம்வளர்த்த கருமமெலாம் இன்று
    கடலாடும் துரும்பேபோல் காணுதடா தோழா!
தொடர்ந்திட்ட மடமையினைத் தூரத்தே ஓட்டத்
      துணிந்திலையோ? தமிழா, உன் தொல்வீரம் எங்கே?
 
அஞ்ஞான ஆழியிலே அமிழ்ந்திருந்தோ ரெல்லாம்
      அறிவொளிரும் சாதனையால் அணிபெற்றார்; அன்றே
மெய்ஞ்ஞான நெறிபிறழா மேன்மையுடன் நின்று
      விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்ட நாமோ
எஞ்ஞான்றும் விடிவில்லா இழிமையிலே மூழ்கி
      எதிர்கண்டார் நகைப்பிற்கும் இலக்காகி விட்டோம்
நெஞ்சாரக் கணமேனும் நினைத்திட்டால் உள்ளம்
      நெருப்பாகிக் குமையுதடா நேயமிகு தோழா!
 
ஆண்டஇனம் என்றுதினம் ஆர்ப்பரித்தால் மட்டும்
      ஆகிவரா தெச்செயலும், ஆதலினால் தோழா
ஈண்டுநமைச் சூழ்ந்துறையும் இருளகற்ற ஒன்றாய்
      இணைந்திடுவாய் மொழியின்கீழ் இன்தோழா! வாழ்வை
வீரமிகு செந்தமிழா வினையாற்ற உன்னை
    வேண்டுகிறேன்; குலங்காக்க விரைந்திடுவாய்! கொண்ட
வேதனைகள் போதுமினி விரைந்தெழுந்தே வாராய்!

சமுதாயக் கவிஞர் ம.அ. சந்திரன், தாசேக்கு குளுகோர்


 

வாசிப்போம் நேசிப்போம்!
 
பத்திரிகை வாசிப்போம்! தமிழினவீ ரத்தை
    பறைசாற்றும் கவிதைகள் நேசிப்போம்! ஏற்ற
புத்தகங்கள் வாசிப்போம்! பழுதுறாமல் மின்னும்
    பொற்றமிழை உயிராக நேசிப்போம்! புதுமைச்
சித்திரத்தை வாசிப்போம்! அறியாமை கொன்றெம்
    சீருயர்த்தும் பகுத்தறிவை நேசிப்போம்! குறளை
பற்றுடனே வாசிப்போம்! அறிவுக்கு நல்ல
    பாதையிடும் அறிவியலை நேசிப்போம்! வாரீர்!
 
புகழ்வானை நேசிப்போம்! பொழுதெல்லா மங்கே
    பூக்கின்ற கவிதைகளை வாசிப்போம்! காதல்
அகத்தாளை நேசிப்போம்! புதிராகப் பேசி
    ஆடுகிற மழலைகளை வாசிப்போம்! நட்பு
முகத்தானை நேசிப்போம்! மூடத்தைக் கொல்லும்
    முற்போக்கு நடப்புகளை வாசிப்போம்! நேர்மை
சகவாசம் நேசிப்போம் விழிப்புணர்வை ஊட்டும்
    சத்தான மீட்சிகளை வாசிப்போம்! வாரீர்!
 
 
வாசிப்போம்! வாசிப்போம்! தமிழன்னை வாரி
    வழங்குகிற புதுமைகளை சோம்பலன்றி நாளும்!
நேசிப்போம்! நேசிப்போம்! காதல்தரும் மங்கை
    நீள்விழியில் மலர்கின்ற அன்பென்னும் பூவை!
வாசிப்போம்! வாசிப்போம்! இயற்கையென்னும் கைகள்
    வரைகின்ற காட்சிகளை மிகுவிருப்பங் கொண்டு!
நேசிப்போம்! நேசிப்போம்! மனிதநேயம் காட்டும்
    நெஞ்சத்தை நெஞ்சிருக்கும் வரைவாழ்த்தி! வாரீர்!

****************************************************************************************

கருப்புச் சட்டை

கருப்புச் சட்டை பதவிச் சண்டைக்
      கத்தியால் கிழிந்ததே! – கண்டு
குருட்டு மடமைக் கூட்டம் கையைக்
      கொட்டிச் சிரிக்குதே!
 
சடங்கும் சாதியும் சுனாமி போல
      தலைவிரித் தெம்புதே! – இதை
அடக்கப் பாயும் கைகள் வலிமை
      யற்றுத் தொங்குதே!
 
திருந்திய தமிழ்மணம் புரியும் வழக்கம்
      தேய்பிறை யாச்சுதே! – இந்தக்
குறையினைப் போக்கும் பகுத்தறி வாளர்
      கொள்கை தூங்குதே?
 
போலிச் சாமியார் கொட்டம் வான்போல்
      போகுது நீண்டுதான்! -  இதுக்கு
வேலி போடு வார்கள் வல்லமை
      வீழ்ந்ததே ஈங்குதான்!
 
ஆரிய தந்திர மந்திர ஆளுமை
      அகல மானதே! – இதை
வீரிய உணர்வால் வீழ்த்துவார் பேச்சு
      வேகம் போனதே!
 
மூட இராணுவம் வீட்டைச் சுற்றி
      முற்றுகை இட்டதே! – இதை
ஓட விரட்டி உதைத்திடும் கால்கள்
      ஒடிந்து நொண்டுதே!
 
மடமை விளம்பரம் ஊடக மெங்கும
      மல்கித் துள்ளுதே! -  இதை
உடைக்க எழுதுகோல் தூக்கும் கூட்டம்
      ஒடுங்கிப் பம்முதே.!
 
புரட்சி யாளர்கள் முகத்தை மறந்ததே
      புதிய தலைமுறை! – இந்த
வறட்சிப் போக்கை மாற்றணும் பெரியார்
       வளர்த்த பரம்பரை!

பாவலர் மணி பொன் நிலவன்


 

எத்தனை கூட்டம்

வளைந்தும் நெளிந்தும்
குழைந்தும் பிறரால்
வாழ்வது சிறுமையடா – தினம்
அலைந்தும் திரிந்தும்
உழைத்தே வாழ்ந்தால்
அதுவே பெருமையடா
 
இறக்கும் வரைக்கும்
அறிவில் லாமல்
இருப்பதும் அவலமடா – உன்
செருக்கும் சிறப்பும்
அழிந்திடும் போது
சிரிக்கும் உலகமடா
 
இரவல் உயிரைத்
தனக்குள் தாங்கி
இத்தனை ஆட்டமடா – நீ
இரவில் படுத்தே
எழாமல் விடிந்தால்
எத்தனை கூட்டமடா!

*******************************************************************************************

அனைத்தும் பொய்யடா!
 
நாலு காசு கையில் வந்தால்
      நட்பை மறக்கிறான் – தம்பி
நாலுபேரு உடனிருந்தால்
      நாலும் மறக்கிறான்.
 
ஆளுபேரு பதவியென்றே
      ஆளாய்ப் பறக்குறான் – தம்பி
நாளை நமது கையிலுண்டா?
      நடப்பை மறக்குறான்.
 
பாசம்நேசம் பற்றையெல்லாம்
      தூசு காண்கிறான் – தம்பி
மோசம்போகும் பாதையைத்தான்
      மோட்சம் என்கிறான்.
 
வேசம்போடும் மனிதரைத்தான்
      வெளிச்சம் என்கிறான் - தம்பி
கோசம்போடும் கூட்டத்தைதான்
      கூவியழைக்கிறான்.
 
ஆறடியில் அடங்கிவிட்டால்
      அனைத்தும் பொய்யடா – தம்பி
பேரிடிக்கு முன்னேநல்ல
      பெயரை நெய்யடா
 
சீரடியாம் குறளடியைச்
      செவியில் கொள்ளடா – தம்பி
சீரழிவைக் கொண்டுவரும்
       செயலைத் தள்ளடா!

கவிஞர் எம்.ஆர் தனசேகரன், இரவாங்கு


 

என் தந்தை
 
என்அன்புத் தந்தையவர் எளிமையெனில் மகிழ்ந்திடுவார்!
இன்முகத்தால் அனைவரையும் ஈர்த்திழுக்க முனைந்திடுவார்!
துன்பத்தைக் காட்டாமல் துயரத்தைச் சொல்லாமல்;
இன்பத்தை மட்டிலுமே ங்களுக்காய்ச் சேர்த்திடுவார்!
 
அன்னைமுகம் வாடாமல் அன்பொழுகக் காத்திடுவார்!
சின்னவலி என்றாலும் சிந்திக்கத் தவறிடுவார்!
என்னவிது என்போர்க்கும் ஏற்றபதில் உரைத்திடுவார்;
என்மனைவி என்னுயிரில் என்னில்பா தியென்பாரே!
 
நன்றாக நாவினிக்க நற்சமையல் சமைத்திடுவார்!
ஒன்றாக அமரவைத்தே உணவருந்தச் செய்திடுவார்!
முன்னாலே அவரிருந்தால் முழுஉலகம் என்னதுபோல்;
தன்னாலே உணர்ந்திடுவேன் தலைநிமிர்ந்து நடந்திடுவேன்!

*********************************************************************************

வாழும் வரலாறு

நாதியுற்று நம்மக்கள் நடுத்தெருவில் நின்றிருக்க
நானிருக்க பயமேனே எம்மக்கான் என்றணைத்து
விதியொன்று செய்திடுவோம் விரைவினில் வாருங்கள்
விரக்தியினை விரட்டிடுவோம் வீறுநடைப் போடுங்கள்
 
உழைப்பவர்கள் நினைத்தால்தான் உலகையே ஆட்டிடலாம்
உண்மையை உணர்த்திவிட்டே ஒன்றிணைந்து காட்டிடலாம்
பிழைப்புக்கு வழியின்றேல் புலம்புவதால் தீர்ந்திடுமோ
பிரச்னைகள் தீர்ந்துவிட அதுவழியா கூறுங்கள்?
 
ஒன்றுபட்டால் உண்டுவாழ்(வு) என்பதனை செயல்படுத்தி
ஒற்றுமையின் பலத்தாலோ எத்துயரும் வெல்வதற்கு
தோன்றிட்ட ஒருதலைவர் சீலர்ஞான சம்பந்தர்
தோற்காத நெஞ்சரவர் தொழிலாளர் துணைவரவர்!
 
பத்துபத்தாய் சேர்த்தனைப் பாங்குடனே சொத்தாக்கி
பத்திரமாய் கரைசேர்த்து பைந்தமிழர் வாழ்வினிலே
சத்தமின்றிப் புதுசகாப்தம் செய்திட்ட தங்கமகன்
சங்கநதி தந்தசெல்வம் சம்பந்தர் தானன்றே?
 
நாட்டைச்சுற்றி வலம்வந்து நல்லதையே எடுத்துரைத்தார்
நாளைநம தெங்குணர்ந்து நன்மக்கள் விழித்தெழுந்தார்
பாட்டாளித் தோட்டமென்று சுங்கைபிலேச் சுருதிமீட்ட
பாரெல்லாம் புகழ்மணக்க பண்புடையார் மனம்நிறைந்தார்!
 
மண்ணுலகம் உள்ளவரை மைந்தரவர் புகழ்பாடி
மறவரவர் மாண்புக்கு மறவாது கவிபாடி
விண்ணுலகம் சென்றிடினும் வான்புகழ் வல்லவரின்
வாழும்புகழ் என்றென்றும் வரலாறாய் நிலைத்திடுமே!

தமிழ்மணி சி. வடிவேலு, செகுடாய்


 

இலக்கியக் காட்சி
 
செவ்வாயில் வந்திடுவேன் செங்கதிரோன் சாயுமுன்னே
    சொல்லிவிட்டுத் தலைவனவன் சென்றானே; திரும்பிவந்து
கொவ்வையிதழ் சிவக்கும்படி கொடுத்திடுவேன் முத்தமென
    கோலமயில் தலைவிக்குக் கொடுத்தானே வாக்குறுதி!
                             
போனவனை எண்ணியெண்ணி பொன்மயிலாள் வாடுகிறாள்
    பொற்கொடியாள் துடிக்கின்ற புழுவாக ஆகிவிட்டாள்
கானமழை எங்கிருந்தோ காதலின்ப உணர்வூட்ட
    கட்டிலிலே படுத்தவள்தான் கனவுலகம் சென்றனளே!
 
அன்றொருநாள் தலைவனோடு அழகுமலர்க் காட்டினிலே
    அசைந்தாடும் தென்றலுடன் ஆம்பலுமே இணைந்தாற்போல்
மன்னவனாம் காதலனும் மங்கையரின் உடலணைத்த
      மயக்கமுறு சந்திப்பைக் கனவினிலே கண்டனளே!
 
சோலைவனக் குயிலொன்று சுகராக கானத்தால்
      சேர்ந்திருந்த காதலர்கள் வாழையடி வாழ்கவென
கோலமுடன் இசையாலே வாழ்த்தியதாய் அக்காட்சி
    கோதையவள் மனதுக்குள் கோடியின்பம் தந்ததுவாம்!
 
குற்றாலக் குறவஞ்சி  கவிராயர் இராசப்பர்
        குரங்குகளின் பேரன்பைப் பாடியவர்; பிறந்துவந்து
பொற்றாள இசைக்கூட்டி  பொன்றமிழில் பாவெழுதி
          பாடுவாரா இவ்விணையர் பேரின்பக் காதலைதான்?
 
அள்ளிடுமாம் உள்ளத்தை அழகொளிரும் ஓவியமாய்
    அகத்திணையில் வருகின்ற இலக்கியத்தின் காட்சிகளோ
சொல்லிடுமாம் தமிழர்களின் சுவையூட்டும் களவியலை
    சொக்கிடுவோம்  சுடர்மிகுந்த தமிழமுதைப் பருகையிலே!

*********************************************************************************************

மழையின் மாட்சி
 
வானின்று வருகின்ற மழையின் அருளால்
      வாழ்கின்ற பல்லுயிர்கள் உலகில் கோடி
தேனென்றும் அமுதென்றும் மழையை சொல்வர்
      தெய்வத்தின் அருளாலே வாய்த்த செல்வம்
ஊனுக்குள் உயிர்தங்க உதவும் மழையால்
      உலகத்தின் செழிப்பெல்லாம் ஓங்கும் என்றும்
கானுக்குள் பசுமையெனும் காட்சி துலங்கும்
      கவினார்ந்த பறவைகளும் களித்து சிலிர்க்கும்!
 
பயிருக்குள் விழுகின்ற மழையின் நீரால்
      பசியென்ற நெருப்பணைந்து உயிர்கள் வாழும்
வெயிலுக்குள் நின்றுகொண்டு வேலை செய்வோர்
      வாராதோ மழையென்று வானம் பார்ப்பர்
மயிலுக்கும் ஆனந்த உணர்வு தோன்றும்
      மழைமேகம் கண்டுவிட்டால் தோகை விரிக்கும்
குயிலுக்கும்கொண்டாட்டம் குலவும் உடலில்
      குரலெடுத்துக் கூவிடுமே கிளையில் அமர்ந்து!
 
ஆலயத்தில் பூசனைகள் நின்று போகும்
      அகிலத்தில் வான்மழையும் பொய்த்து விட்டால்
சோலைவனம் தண்னெழிலில் திரிந்து வாடும்
      சலசலக்கும் அருவிகூட வறட்சி கொள்ளும்
ஏழைமக்கள் உழவர்கள் ஏங்கி நிற்பர்
      இடியிடிக்கும் ஒலிகேட்டு இதயம் மகிழ்வர்
வேளையிலே வருகின்ற மழையின் தயவால்
      வேளாண்மை செழித்திருக்க வாழும் உலகம்!
 
வளத்திற்கே ஆதாரம் மழைதான் மண்ணில்
      வண்ணங்கள் பூப்பதுவும் அதனால் தானே
நலமெல்லாம் நானிலத்தில் நடனம் ஆடும்
      நற்பயிர்கள் விளைச்சலினால் வயிறு நிரம்பும்
புலனுக்குள் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டு
      புவிகாக்கும் மழைக்கென்றும்நன்றி சொல்வோம்
உளங்கொள்ளும் உலகமறை உயர்த்திப் போற்றும்
      உயிர்கொடுக்கும் மழைநீரும் இறைமை என்றே!

பாவலர் மா. தமிழன்பன், சித்தியவான்


 

மின்னிதழ் ஆளுமை கொள்ளும்

வளிபொரு மின்னொடு வாய்திடு மழுததம்
      மழையென பொழிதல் மன்னுயிர்க் குயிர்ப்பே
விழிபடும் மின்னிதழ் மேவிடு வோர்கள்
      விழைவுறும் பயனால் மேன்மை அடைவர்!
வலிபெற மரபின் வழிமுறை யறிந்து
      மன்னிய கவிதை மறுவிலா தளிப்போர் !
அளிதரும் பொன்னென அழகுற மின்னி
      அகத்திடை நாளும் ஆளுமை யுறுமே! 
 
புகழ்படா தோரையும் புவனம் போற்ற
      பூந்தமிழ்ப் புலவரால் பெற்றிமை பெறவே!
திகழ்வுறு மரபின் சிறப்பினையோர்ந்து
      தோயுறு மனத்தே செந்தமிழ்க் கவியோ !
இகழ்படா தொளிரும் ஏற்கும் மனத்தே!
      ஈதறி யாதார் எள்ளுறும் படியே
மிகநலம் நாடி வீழரு வியென
      மேன்மை விருதால் விளங்குதல்  நகைப்பே
 
போலிமை புகழால்  பீற்று வோர்கள்
      புதுக்கிய மரபொடு பிழைபடா தெழுதி
ஆளுமை பெறவே ஆன மட்டும்
      அழகொளிர் மின்னிதழ் அகத்திடை கொள்வீர்
நீளுறும் மரபினை நேர்பட  வொழுகின்
      நெஞ்சினில் கவிமலர் நீங்கா திருக்கும்
பாழுறும் மணத்தே பாநலம் மேவப்
    பணிந்தே உரைப்பேன் பற்றுக மரபே!

***********************************************************************************

கவிதையாய் நிலைத்த கவிஞருக்கு
 
நெஞ்சத்தே பூக்கின்ற  தாமரைக்கே வொப்பாம்
      நிதம்பூக்கும் கவிமலர்கள் எண்ணிலடங் காது!
விஞ்சத்தான் செய்கின்ற கவித்திறத்தால் நாளும்
      வியப்பூட்டும் கவிமலரை  விளக்கமுறத் தந்த
பஞ்சைத்தான் நேர்கொண்ட மென்மையுள னன்றோ!
      பார்போற்றும் பாவலனாம் எம்.கே.ஞா. சேகர்
துஞ்சத்தான் முடியாமல் அவரளித்தக் கவியின்
      சுவைமாந்திக் களித்திட்ட  நாள்பலவும் உண்டாம்
 
மண்ணழகைக் காட்டுவது மரமென்று சொன்னால்
      மரபழகைக் காட்டுவது பாவினமே என்போம்
பண்ணழகில் சொல்வார்த்தும் உவமைநலஞ் சேர்த்தும்
      பளபளக்கும் முத்தான எழுத்தினால் நித்தம்
கன்னலையும் மிஞ்சுகின்ற கருத்தான  படைப்பால்
      காலத்தை வென்றிருக்கும் நினைவலையோ நீங்கா
விண்ணழகை உலகுக்கே அளிக்கின்ற நிலவாய்
      வியனுலகில் கவிஞர்தம் புகழ்மறையா தினிதே

செந்துறைக் கவிஞர் ஞான. இராயப்பன், கடாரம்


 

பெண்
 
மண்ணென்றும் விளைவிக்கும் மங்கையரும் விளைநிலமே!
பெண்ணென்றால் பிள்ளைகளைப் பெறுவதனால் பெறுமையுண்டு!
பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெரியவராய் ஆக்குதற்குள்!
உற்றதுன்பம் எதுவாயினும் உயிர்கொடுத்தம் காத்திடுவாள்
தன்னுடன் பின் செங்குருதி தக்கதொரு பாலாகும்!ள
என்னவிலை கொடுத்தாலும் ஈடாமோ தாய்ப்பாலும்!
அன்னையென அவதரித்தாள் ஆற்றெலெனும் பெண்தெய்வம்!
தன்னலந்தான் இல்லாதாள் சால்பு!

***************************************************************************************

வாழ்வில் வசந்தம் வரும்

உன்னைநா‌ன் பார்த்ததுமே உள்ளம் பறிகொடுத்தேன்!
என்னையுன் கண்கள் இதமாய் வரித்ததும் ‌!
முன்னம் நமக்குள்ள முற்பிறவி பந்தம்தான்!
இந்நாள் இணைத்தது‌ம் என்னுயிரில் ஒன்றியதும்!
 
சாதிகுலங் கோத்திரமு‌ந் சா‌ர்ந்தசமயமும்!
மோதியெழுங் காதல்முன் மூச்சே விடுவதில்லை!
முப்போதும் நம்மனங்கள் முத்தக் கனவுகளில்!
தப்பேதும் செய்யாமல் தான்தவித்து வாடுவதை!
 
எப்படியோ என்தாயார் எல்லாமுந் தானறிந்து!
இப்போதே பெண்கேட்க உன்னில்லம் வந்தவரை!
"சாதியில் தாழ்ந்தவளே சம்பந்தி ஆவதா?
வீதியில் ஓடடி; விரட்டினார் நின்தந்தை!

காதலர் கண்கள்தாம் காண்பதெல்லாம் அன்பொன்றே!
சாதலே தான்வரினும் சத்தியமாய் ஏற்போம்'வா,
வாழ்த்துவரும் பின்னாளில் வாழ்ந்துநாம் காண்பிப்போம்!
வாழ்வில் வசந்தம் வரும்!

செந்துறைக் கவிஞர் சோலை முருகன்


 

திருமுருகன் மணம் வீசும்
 
உள்ளமதில் நிறைந்தோனே! ஓங்காரத் தத்துவனே!
தெள்ளமுதாம் செந்தமிழைத் திகட்டாமல் தந்தோனே!
வள்ளியம்மை தெய்வானை! வடிவேலன் இருபுறமே!
துள்ளியெழும் மயில்தாங்க! துணையாக  வந்தருளே! 
 
நெற்றிக்கண் உதித்தோனே! நெஞ்சத்தில் உறைந்தோனே
குற்றஞ்சூழ் சூரனையே குலைநடுங்கச் செய்தோனே
நற்றமிழ்த்தாய் ஒளவையிடம் ஞானமொழி கேட்டோனே!
 வெற்றிதரும்  வேல்பெற்றோய்  திருச்செந்தூர் சிதைத்தோனே!   
                                           
ஆறுபடை உம்வீடு  அனைத்தும்உன் புகழ்பாடும்! 
காருண்ய மூர்த்திநீ  கனகமயில்  வாகனன்நீ!
வேறுதுணை எனக்கில்லை வேலவனே நீமுல்லை!
தேருலாவும் தைப்பூசம்!  திருமுருகன் மணம்வீசும்! 

*********************************************************************************************

சுதந்திரம்

அந்நியர்கள் மலைநாட்டை  ஆண்ட கோலம் 
    அச்சத்தின் உச்சமதாய்  அடிமை  கொண்டார்
சொந்தமெனும் பிறந்தகத்தில் சோக முற்றோம்
    சொல்லொண்ணா வேதனையில் துடிக்க  லானோம்
எந்தையர்கள் தனையழித்தே தியாகம்  செய்தார் 
    எழுகதிராய் மூவினமும்  எழுச்சி கொண்டோம்
தங்கமனத் துங்குவந்தே தலைமை ஏற்றார்
    தணியாத சுதந்திரத்தின் தாகம் தீர்த்தார் !
 
மண்ணகமும் மலர்தூவ  மணமும் சூழும்
    மரபோடு குணமேவ  மகிமை கூடும் 
எண்ணமது விண்ணேறி வீறு கொள்ளும்
    இழிவான பழிநீங்கி இன்பம் துள்ளும்
உண்ணிடவும்  உறங்கிடவும் அமைதி காணும்
    உலகோரைச்  சோதரராய் உறவாய்ப் பேணும் 
பொன்னொளிரும் சுதந்திரத்தால்  புதுமை  நல்கும்
    புத்துலகு நமதாக்கம் சரிதை சொல்லும்!
 
பேரரசர் ஆளுகையாம் பெரியோன்  காப்பாம்
    புலனைந்தும் பூரிப்பால்  புலரும் யாவும்
போரறியாப் பெருவீரம் புயலாம் தோள்கள்
    பொருள்தேடி  வருவோர்க்கும் புதையல் காட்டும்
மாரியென  மழைபொழிய வளமை கூட்டும்.
    மகத்தான ஒற்றுமையே பெருமை சேர்க்கும்
வேரெனவே  வித்தெனவே அரணாய் நிற்போம்
    வெற்றிமிகுக் குமுகாயம் நமதாய்க் காண்போம் !

கவிஞர் திருமாமணி, பினாங்கு


 

பாட்டு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
    உலகம் எனக்கொரு பாட்டு!
ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணமும்
    உணர்த்தும் பற்பல பாட்டு!
 
ஒவ்வொரு நாளும் பாடம் புகட்டும்
    உலகம் எனக்கொரு பாட்டு!
ஒவ்வொரு மனிதர் உள்ளத் தினிலும்
    உறங்குவ திந்தப் பாட்டு!
 
என்னுள் எங்கோ இருந்து வெளியே
    எழுவது தானே பாட்டு!
கண்ணீர் போல கனன்று பாய்ந்து
    கருத்தை நனைப்பது பாட்டு!
 
புலவர் எழுதிப் புலவர் வியக்கப்
    புனைவது அல்ல பாட்டு!
உலக மக்கள் மனங்களில் எளிதாய்
    ஓடிக் கலப்பது பாட்டு!
 
நாக்கினில் உதிரும் நறுக்கு வசனம்
     நவிலுதல் அல்ல பாட்டு!
பூக்களைத் தொடுப்பது போலது சரமாய்ப்
    புணர்ந்து வருவது பாட்டு!
 
ஆயிர மாயிர ஆண்டுகள் முன்னம்
    ஆனதாம் நமது பாட்டு!
போயதை இன்று புதுவர வோடு
    பொருத்துவ தல்ல பாட்டு!
 
உலகம் செழிக்க உதவும் வழியை
    உரைப்பது நல்ல பாட்டு!
பழகும் தமிழில் பதமிட் டறிவுப்
    பசியைத் தீர்ப்பது பாட்டு!
 
உணர்வும் ஓசையும் உயரிய கருத்தும்
    ஒன்றாய்க் கலந்தது பாட்டு!
உணர்வே இல்லா மனிதரைக் கூட
    உணரச் செய்வது பாட்டு!
 
நூறடிப் பாட்டுள் நுண்ணிய புலமை
    நுவலுதல் அல்ல பாட்டு
ஈரடிக் குள்ளே இனிய கருத்தை
    இருக்கச் செய்வதும் பாட்டு
 
ஒருவர் புகழை ஊரார் கேட்க
       உரைப்பது அல்ல பாட்டு!
ஒருவரை ஒருவர் சம்மாய்ப் பழக
    ஊக்கம் தருவது பாட்டு!
 
எதுதான் பாட்டு என்பவர் தமக்கும்
    இருக்குது நல்ல பாட்டு!
அதுதான் எங்கள் பாரதிப் புலவன்
    அழகிய செந்தமிழ்ப் பாட்டு!

**************************************************************************************

திருக்குறளும் இணையமும் ஒன்றா?
 
எல்லாப் பொருளும் இதன்பால் உளதால்
இணையம் திருக்குறள் இரண்டும் ஒன்றாம்!
என்றொரு வாதம் இங்கே வந்தது.
நமக்கேன் வம்பென நழுவி விடாமல்
எண்ணிய கருத்தை எழுதிடத் துணிந்தேன்!
எங்கோ தொலைவில் இருப்பதை நம்முடன்
இணைப்பது இணையம்; மனைக்குள் இருந்தே
உலகைச்  சுற்றி வலம்வர ஏலும்
மின்னலை மிஞ்சும் மின்னியல் வேகம்.
அள்ளக் குறையா அமுத சுரபியாய்
நாடிய பொருளைத் தேடியே எடுக்கும்.
திகைக்க வைக்கும் திருக்குறள் போல
அகப்புறத் தகவல் அனைத்தும் கொண்டது.
நல்லன தீயன எல்லாம் உள்ளது.
நிறைகுறை செய்திகள் நிறையவே கொண்டது.
எல்லாப் பொருளும் இதன்பால் உள்ளதாய்
இனிய குறளை இயம்புதல் காலை
சீப்பு சோப்பு செருப்பு கண்ணாடி
எக்கு தகரம் இரும்புகள் என்பன
எல்லாம் உள்ளதாய் எண்ணுதல் தவறு
‘எல்லாப் பொருளும்’ என்பது யாதெனின்
மனிதன் என்றும் மனிதனாய் வாழ
எல்லாக் கருத்தும் இருப்பதே ஆகும்!
பொய்யாக் குறளும் புதுவிஞ் ஞான
இணையத் தளமும் ஒன்றா
என்பதை எண்ணிப் பார்த்திடு வாயே!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...