கவிதைப் பெண்
செங்கதிரும் ஆழ்கடலும் சேருகின்றநேரம்
தித்திக்கும் ‘பா’கேட்டேன் செந்தமிழின் சாரம்
பொங்கிவரும் கடலிடையே பூமடந்தைப் பெண்ணாள்
பொருதிவந்தாள் வீணையோடு காவிபடர் கண்ணாள்!
குங்குமத்து நிறமுடையாள் குமரியவள் வீணை
கூட்டிவரும் கிறுகிறுப்பால் கூறிவிட்டேன் ஆணை!
எங்கடிநீ கற்றுவந்தாய் இத்தனையு மென்னை
விஞ்சியது தழுவிடடி ஏந்நெஞ்சு தன்னை
நெஞ்சினிக்கக் கருத்துணர்த்தும் நெரிழையாள் பேச்சு
நாளெல்லாம் கேட்டிருப்ப தென்வேலை ஆச்சு
கொஞ்சுதமிழ் நற்கவிதை கூறுமுறை கண்டேன்
கூறுமொழி கேட்டஅன்றே குலஉறவு கொண்டேன்!
அஞ்சலில்லை செங்கதிரோன் ஆழ்கடலில் மாய்ந்து
அடையுமிருள் கவ்விடினும் அறிவொளியிற் பாய்ந்து
வஞ்சமற்ற நீதியூட்டும் பைந்தமிழை யாத்து
வளர்கதமிழ் மக்களென வாழ்த்திடுவோம்
வாழ்ந்து!