செம்மைச் சான்றோர்
ஆன்றமை நுண்மாண் நுழைபுலத் தறிஞர்
தேன்தமிழ் பெருமொழி சிக்கற வாய்ந்தோர்
ஆங்கில மிந்தி ஆரியந் தெலுங்கொடு
பாங்குசால் மொழிபல பயின்றுணர் பெற்றியர்
தேவதே தாந்த விரிபொருள் அனைத்தும்
ஓதி யுணர்ந்த ஒல்காப் புகழினர்
வில்வாள் வேலொடு சிலம்பு மல்லகம்
தெள்ளறப் பலகலை தேர்ந்த வித்தகர்
வானூல் புவிநூல் மருத்துவக் கலைநூல்
கோணா லறிந்த குரவருட் குரவர்
அன்பும் அமைதியும் அடக்கமும் அருளும்
என்பும் பிறர்க்கீந் துவந்திடும் பெற்றியும்
சான்றோண் மையொடு சால்பும் ஒழுக்கமும்
வான்றோய் மலையென வாய்ந்த வாய்மையர்
தென்னகம் வடவகம் திருமலைத் திருவகம்
முன்னிய பர்மியம் மீப்புக ழீழம்
இன்னும் பலநா டிருந்திடுந் தமிழர்கள்
பொன்போற் போற்றுபு பொருந்திய தொண்டர்
அறிஞர் புலவர் ஆர்பத மற்றோர்
தெரிஞர் தெரியா ரெவர்க்கு முதவுவோர்
தொண்டர் தமக்கெலாந் தொண்டராய் நிற்போர்
தண்டமிழ்ப் புலமைத் தனிச்சிறப் புடையோர்
செந்தமிழ்ச் செல்வச் சிவராம தாசர்
விந்தைகாண் அவர்தம் மேன்மையுந் திறமும்
அந்தணர்க் கந்தணர் ஆருயிர்க் கிரங்கி
செந்தண்மை ஓம்புஞ் செழுந்தவப் பெரியோர்
நலமிகு இறையடி நாளும் நாளும்
உளமகிழ் வோடு உணர்ந்து போற்றுவோர்
மாமலை நாட்டின் மாண்புறு மாமணி
தேமொழி ராம தாசரெங் குருவே!
வேறு
விண்மிசை இருவரும் உடுத்திர ளிடையே
விளங்கிடு முழுமதி போலும்
எண்ணருங் கலைசால் இலக்கியத் தூடே
இணையிலாத் திருகுறள் போலும்
கண்ணினுஞ் சிறந்த தமிழ்நல மோம்பும்
களிதமிழ்ப் பாவல ரேத்துந்
தண்ணிய குணத்து மாண்புசால் ராம
தாசரென் றுரைத்திடல் சால்பே!