உடற்பயிற்சி விளையாட்டு
எடுப்பு
உடற்பயிற்சி செய்திடவே வேண்டும் – தம்பி
உள்ளத்தை உறுதியாய் வைத்திட வேண்டும்
தொடுப்பு
உடற்பயிற்சி செய்வத னாலே – உன்றன்
உடல்வலு ஓங்கிடும் உறுதியாய் மேன்மேலே
முடிப்பு
உடற்பயிற்சி செய்வதற்கென்று – நீ
ஓடலாம் நடக்கலாம் ஒவ்வொரு நாளும்
கூடலாம் அனைவரும் ஒன்றாய் – கூடி
ஆடலாம் கைகால்கள் அசைத்துமே பாடி
வாடியே இருந்திட வேண்டாம் – அதுவுன்
வாழ்வினை முடக்கிடக் கூடும்
தேடிடும் உடல்நலம் தானே – உன்னைத்
தெளிவுடன் ஒழுகிடச் செய்யும்
கல்வியில் தேறிட வேண்டும் – கற்க
கண்டிப்பாய் உடல் நலம் காத்திட வேண்டும்
உலகத்தில் உயர்ந்திட வேண்டும் – உன்
உள்ளத்தில் தெளிவுடன் உலாவர வேண்டும்
விளையாட்டுத் துறையிலும் அமைவாய் – உன்றன்
வெற்றியை நிலைநாட்ட முயற்சிகள் செய்வாய்
விளையாட்டுத் துறைக்கெனும் அமைச்சில் – உன்றன்
விவரங்கள் அனைத்தையும் சேர்த்திடச் செய்வாய்
விளையாட்டுத் துறை மூலம் வாழ்வில் – இங்கு
உயர்ந்தவர் பலபேர்கள் உண்டு
கல்விக்கும் அதுவொரு பாலம் – அதைக்
கண்டிப்பாய்க் கைக்கொண்டு முன்னேற வேண்டும்
**************************************************************************************
நந்தமிழ அறிஞன்நம் சீனி நைனா
நன்றாக நறுந்தமிழைக் கற்றுத் தேர்ந்தான்!
செந்தமிழின் வார்த்தைகளால் மக்கள் நெஞ்சில்
சேர்ந்தொன்றாய் வாழ்ந்திருக்கும் சீர்மை யாளன்!
முந்துதமிழ் கவிபாட முனைந்த போதும்
முத்தமிழர் எழுச்சிக்காய் முடுக்கி வைப்பான்!
செந்தமிழைச் செந்நாவால் காக்கும் வண்ணம்
சிறப்பாக சங்கநூல்கள் ஆய்வைச் செய்தான்!
தொல்காப்பி யம்சொல்லும் தொடரில் மன்னன்
ஒல்காப்பெ ரும்புகழைத் துய்க்க வென்றே
மல்கிவரும் மாணவர்கள் மயங்கா வாறு
மாத்தமிழைத் தொடர்ந்திங்கே மாந்தச் செய்தான்!
பல்பொருள்கள் கொண்டிலங்கும் தொல்காப் பியத்தை
பழக்குவதில் சீனிதானே முதன்மை பெற்றான்!
வெல்லுகின்ற தமிழ்மொழியை விரும்பு மாறு
விளக்குகின்ற உரைநடையில் சிறப்பைப் பெற்றான்!
புரவலர்கள் என்றாலே பாது காத்துப்
பொருளீயும் வள்ளலென வாழ்வர் செல்வர்!
புரவலாய் மொழித்துறைக்குக் கிடைத்த வர்தாம்
புரக்கின்ற தமிழாற்றல் போற்றி நின்றார்!
உரம்பெய்த தமிழுக்கு நேரு கின்ற
ஒழுங்கில்லா நிலைமைகளை ஒழித்துக் கட்டும்
தரம்மிக்கத் தமிழன்தான் சீனி நைனா
தகைமையாளன் புகழன்றும் ஓங்கும் நன்றே!