எட்டென்றால் இளப்பமா தீய எண்ணா?
ஓரெட்டில் எட்டுவதை விட்டு விட்டு
ஓயாமல் எட்டுபவர் தமிழர்; பேற்றை
ஈரெட்டில் வைத்தார்கள் அறியா மையால்
இனப்பெருக்கில் அக்கணக்கைச் சேர்த்துக் கொண்டார்
மூவெட்டில் தொடங்கிவரும் வாழ்க்கை முற்றும்
முன்னேற்றம் எட்டாமற் சோர்வார்: வாயில்
நாலெட்டுப் பற்களையும் தெரியக் காட்டி
நாளெல்லாம் நடப்பதுதான் இவர்கள் வாழ்க்கை.
ஐயெட்டு நாற்பதுதான் அதிலுங் கூட
ஐயங்கள் வரலாமா? வருமி வர்க்கு
ஆறெட்டு என்றாலும் ஒன்ப தென்று
அடுத்தெண்ணத் தவறாதார்; தமக்குள் மட்டும்
ஏழெட்டுக் கூறாகக் கிடப்பார்; கேட்டால்
எண்ணிக்கைக் கடங்காமல் எடுத்து வைப்பார்
எட்டெட்டு முன்னேற்றங் காணு மட்டும்
எட்டுவதே இலக்கென்றால் ஒட்ட மாட்டார்.
ஒன்பதுக்கு பின்வருமா எட்டு ? தூய
உண்மையின் முன் வருமா பொய்மை? கணித
எண்ணுக்குள் சுழிகண்ட தமிழ் மாந்தர்
எட்டோடு சுழிசேர எண்ப தென்றார்
கண்ணுக்குள் உருள்கின்ற விழியைப் போல
கண்டெடுத்த சுழியின்மேல் சுழியும் ஏற
உண்டான ஓரெண்ணே எண்க ளுக்குள்
உயர்ந்ததெனச் சொல்லாமற் சொல்லத் தானே?
***************************************************************************************
இப்பூ வுலகமெலாம் இருண்டிருந்த வேளையிலே
எங்கும் பேச்சறியா திருந்தகற் காலத்தே
கப்பிக் கருத்திருந்த காரிருளில் உலகமெலாம்
கலங்கித் தவித்திருந்த காலத்தே சீலத்தால்
செப்பும் மொழியாகிச் சிந்தை உறவாகி
செந்தமிழர் நாவெல்லாம் தேன்மணக்கச் செய்பவளே
உப்பில் உணவாக உலகிருந்த வேளையிலே
உப்பாகி உயிர்வளர்த்த ஒப்பரிய தமிழம்மா!
சிப்பிக் குள்ளிருந்து சிதறாமல் வெளிப்பட்டு
சித்தங் கவர்கின்ற செந்தமிழ்நீ முத்தம்மா!
வாழ்க எனச்சொல்லி வணங்குகின்ற வேளையிலே
வாழ்வை எமக்களிக்க வல்லவளாய் இருப்பவளே
சூழ்க புகழென்றும் சொல்லுகின்ற வேளையிலே
சுடர்பரப்பும் புகழெமக்குச் சொந்தமெனச் செய்பவளே
ஏழ்கடலின் வைப்பாக இருக்கின்ற உன்பெருமை
எடுத்தியம்பும் ஆற்றலினை எமக்களிக்க வேண்டுமம்மா
ஆழ்ந்திருக்கும் பொருளையெல்லாம் அறியவைத்து
எமைக்காக்க அருந்துணையே தமிழம்மா அடிவணக்கம் ஏற்பாயே!