கவிஞர் இராசமோகன் நாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் இராசமோகன் நாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் இராசமோகன் நாதன்

 


வாழ்க அம்மா

யாப்பதனைக் கற்பதற்குத் தூண்டு கோலாய் ,
      இங்கிருவர் வந்துதித்தார் தெய்வம் போல !
பாப்புனையும் பரம்பரையைப் பெருக்க நாளும்
       பணிச்சுமையைக் கனிச்சுமையாய் தோளில் ஏற்றி,
பூப்போலப் புல்லரும்புப் பனியைப் போல,
        போதிப்பார், சாதிப்பார், சிகரம் செல்வார் !
காப்பதற்கும் கவிதைவெள்ளம் பாய்வ தற்கும் ,
       காலமெல்லாம் துணையிருப்பார் முனைவர் இங்கே !
 
நாட்டினிலே தோய்ந்திருக்கும் மரபு வேரை,
       நலிந்திருக்கும் நிலைமாறி செழிப்ப தற்கே ,
வீட்டினிலே கற்றிடவே வாய்ப்ப ளித்தார்,
      விளங்கிடவும் எளிதான வழிகள் செய்தார் !
ஏட்டினிலே அச்சேற்றி மகிழ வைத்தார் !
      இளையோரைப் பண்படுத்தி உயர வைத்தார் !
போட்டியிலும் பங்கெடுத்தே வெல்ல வைத்தார்!
      போர்க்களத்தில் வீரனைப்போல் பாயச் செய்தார் !
 
கற்றவர்கள் எத்தனையோ நமக்குள் இருக்க,
      கருதாதப் போக்கினையே கண்டு வந்தோம் !
பெற்றவர்கள் பேணுகின்ற பிள்ளைப் போல,
      பெருந்தவத்தால் எங்களுக்கே தாயாய் வந்தீர் !
நற்றமிழின் வித்தையெல்லாம் கற்கச் செய்து ,
      நற்பணியாய் நாளெல்லாம் செய்யும் நன்மை !
உற்றதொரு இறைக்கவிஞர் சீனி அய்யா
    உயிர்ப்பெற்று வந்ததுபோல் வாழ்க அம்மா !

********************************************************************************************

மலேசியமே

தேசியத்தின் முழக்கமின்று
திசையெங்கும் ஒலிக்கட்டும்
ஆசியத்தின் முகமென்றே
அகிலத்தில் விளங்கட்டும்
 
வந்தேறி , குடியேறி
வசைபாடிக் களிப்போரும்
சிந்தித்திங்(கு) அடங்கட்டும்
சிந்தனையில் மாறட்டும்
 
இனமென்றும் மதமென்றும்
இழிநாவால் சுடுகின்ற
மனமெல்லாம் மாயட்டும் ;
மனிதத்தைப் போற்றட்டும்
 
ஓரினம்தான் ஆளுமென்ற
ஓலங்கள் அடங்கட்டும் !
பாரினங்கள் வாழுகின்ற
பாதையெங்கும் விரியட்டும்
 
பேசுவதைச் செய்யட்டும்
பிரிவினைகள் ஒழியட்டும்
காசுபணம் குறிகொண்ட
கள்வர்களும் சாகட்டும் !
 
தடுமாறும் தர்மங்கள்
தடம்மாறிப் போகாது !
நடுநிலையாம் மனுநீதி
நடக்கட்டும் இங்கெவர்க்கும் !
 
உழைத்தவர்கள் நம்மவர்கள்
உரிமையினைப் பெற்றிடுவோம் !
தழைத்துநின்று தொழில்வளத்தில்
தன்மானம் காத்திடுவோம் !
 
மலேசியமே ஒருமையென்ற
மாண்புமிகு நிலையிங்கு
வலம்வந்தே நிலைக்கட்டும் !
வளமெல்லாம் பெருகட்டும் !

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...