இயற்கையில் ஏழைமை!
முகில்
பஞ்சென்றால் அதன்வண்ணம் வெண்மை நண்பா!
பாரறிந்த உண்மையிது! நாமும் கண்டோம்
பஞ்சினிலும் கரும்பஞ்செ னவொன் றுண்டு
பரந்திட்ட வான்வெளியில் பறத்தல் போல
விஞ்சுபுகழ் வான்தவழும் திரளைக் கண்டால்
விசும்பென்பாய்! விசும்பன்று! என்னைக் கேட்டால்
கஞ்சியதும் கிட்டாத தாலே வந்த
கடும்பசியால் கருகுகின்றேன் முகந்தா னென்பேன்
இடி
சிங்கள்கள் பலவெழுந்தே ஒன்றாய்க் கூடிச்
சீற்றமுற் றெழுப்புகின்ற முழக்கம் போன்றும்
கங்குல்நிறப் பெருங்களிற்றுக் கூட்ட மொன்று
கடாதிர முழக்குகின்ற பிளிறல் போன்றும்
எங்கிருந்தோ ஒலிக்கும்பே ரொலியைக் கேட்பின்
இடியென்பாய்! இடியன்று! என்னைக் கேட்டால்
வெங்கனலில் வீழ்ந்துழைத்தும் பொருள்கிட் டாது
விம்முகின்ற ஏழையுள்ளக் குமுற லென்பேன்
மின்னல்
மாற்றாரைக் கொன்றழிக்கக் களத்திற் பாய்ந்து
மாவீரன் சுழற்றுகின்ற கூர்வாள் போலும்
வேற்றோரின் மதிமயக்கும் எண்ணங் கொண்டு
வெய்ந்தோளாள் வீசுகின்ற விழிகள் போலும்
தோற்றுகின்ற வானத்தில் ஒளியைக் கண்டு
தோன்றுதடா மின்னலென்பாய்! என்னைக் கேட்டால்
ஆற்றாத ஏழைதினம் வயிற்றுக் கொன்றே
அலைந்ததனால் முகம்பெற்ற கோடே யென்பேன்
மழை
வானமெனும் பேரணையில் பிளவேற் பட்டு
வடிகின்ற பெருவெள்ளப் பெருக்கோ என்றும்
மானமெலாம் இழந்துபட்ட நன்மைக் கண்டு
வானத்தாய் சொரியுங்கண் ணீரோ என்றும்
மாணவரே மகிழவரும் நீரைக் கண்டால்
மழையென்பாய்! மழையன்று! என்னைக் கேட்டால்
பேணாத குழந்தைகளும் பசியால் வாடும்
பெருந்துயரால் கலங்குமேழைக் கண்ணீ ரென்பேன்