வெற்றிக்கு முயற்சி வித்து…!
பிறந்த போதே, வென்று விட்டோம்
பின்னே ஏனோ அச்சம்! – முயற்சிப்
பிள்ளை அதைநம் சேர்த்துக் கொண்டால்
பெருகும் வாழ்வில் உச்சம்! – பாலைக்
கறக்கக் கரங்கள் முன்னே நீண்டால்
கையில் கிடைக்கும் பாலே! – சோம்பல்
கனிவாய் நம்மை அணைத்துக் கொண்டால்
கவரும் துன்ப நாளே!
தன்னை என்றும் தாழ்வாய் எண்ண
தழுவும் என்றும் தோல்வி! – தோல்வி
தழுவும் போதும் துணிந்தே எதிர்த்தால்
வருவாள் வெற்றி தேவி! – முயற்சி
என்னை உன்னை ஏற்ற மாக்கும்
இதுவே உலக நீதி! – இதனை
ஏற்கா மாந்தன் விழிகள் இல்லா
இழிந்தோர் வகுப்பில் பாதி!
விதையை விதைக்க செடியும் முளைக்கும்
விந்தை இல்லை இயற்கை! – இந்த
விதியை மாற்ற முயன்றே தோற்றால்
விம்மி அழுமே வலக்கை! – தோல்விக்
கதையை கேட்கும் உள்ளம் யாவும்
கனலில் வீழும் நாளும்! – வெல்லும்
கரத்தின் பின்னே துணையாய்ச் சென்றால்
கவரும் வெற்றி பாரும்!
நேர்மறை எண்ண முயற்சிகள் யாவும்
நிம்மதி நிழலில் சாய்க்கும்! – எண்ணம்
நீரில் ஆடும் காகித மானால்
நெருப்பைக் கக்கி மாய்க்கும்! மண்ணில்
யார்இதைச் செய்தும் உயர்ந்திடா வாழ்வு
ஆமை போல ஊறும்! – முயற்சி
ஆக்கத் துக்கு வழிதிறந் திட்டால்
ஆவ தனைத்தும் தேறும்!
கொள்ளும் எண்ணம் கொடுக்கும் வெற்றி
கொஞ்சம் முயற்சி தேவை! – உள்ளம்
கோழை யானால் வாழ்வோ நரகம்
கொடுக்கா தங்கே தீர்வை! – நாவால்
சொல்லும் சொற்கள் நன்மை தீமை
சொல்லிக் கொடுக்கும் பாரீர்! – முயன்றே
சோக நிகழ்வை ஒதுக்கி வந்தால்
சூழும் நன்மை! வாரீர்!
***********************************************************************************************
நாட்டுக் குள்ளே நடப்பதையே
நாளும் பேசி நோகுறோமே
வீட்டுக் குள்ளே நாறுறாங்க சிலபேரு! – அதற்கு
வேலி போட என்னஉண்டு பதில்கூறு!
வேலை வெட்டி இல்லாமல்
வெட்டிப் பேச்சைப் பேசுறதே
வேலை என்றே அலையுறாங்க சிலபேரு! – இந்த
வேத னையைத் தீர்ப்பதற்கு வழிகூறு!
அப்பன் சேர்த்த சொத்தழிச்சு
அடுத்த வங்க வாழ்வழிச்சே
தப்பாத் திரிஞ்சுச் சாகுறாங்க சிலபேரு! – அந்தத்
தரித்தி ரத்தைப் போக்குதற்குப் பதில்கூறு!
உப்பில் போட்ட ஊறுகாயாய்
உறவுக் குள்ளே ஊடாடி
குப்புறத் தள்ளிச் சிரிக்கிறாங்க சிலபேரு! – அற்ப
குணத்தை விரட்டித் திருத்துதற்கு வழிகூறு!
நட்புக் குள்ளே வேட்டுவச்சு
நாவால் பெரிய ஆப்புவச்சு
கட்டிக் கடலில் தள்ளுறாங்க சிலபேரு! – அந்தக்
கர்மம் தீர என்னஉண்டு பதில்கூறு!
வாயால் இனிக்க பாயாசம்
வார்த்து நம்மை மகிழ்வித்தே
ஆயா சத்தில் ஆழ்த்துகிறார் சிலபேரு! – அந்த
ஐந்த டிக்கும் அறிவூட்ட வழிகூறு!
தேஞ்சு போன செருப்புக்குச்
சிம்மா சனமே வழங்குகின்ற
மூஞ்சி களையே வணங்குகிறார் சிலபேரு! – அந்த
முட்டாள் தனத்தை முடமாக்க பதில்கூறு!
வந்த வேலை பார்ப்பதற்கு
வாயைப் பிளந்தே ஓடுகிறார்
சொந்தத் தொழிலை நாடவில்லை சிலபேரு!– அந்தச்
சோரம் போன மனம்மாற வழிகூறு!
பெண்ணும் ஆணும் சரிசமமே
பெருமைப் பேச்சோ நிறைகுடமே
இன்னும் இதனை ஏற்கவில்லை சிலபேரு! அந்த
இறுமாப் பகற்றும் முறைஎன்ன பதில்கூறு!
இந்தப் பொங்கல் சபதமாக
இதனை ஏற்போம் திருத்தமாக
வந்த நாளை மறந்திருப்போம் ஒன்றாக!– இணைந்தே
வாழ்க்கை ஒளிர
ஒன்றிணைவோம் தெம்பாக!