தாயுள்ளம்
ஒருகணம்
பள்ளிக்குச் சென்றுவந்த மூத்த பிள்ளை
பசிக்குதம்மா சோறென்று வயிற்றைக் காட்டும்
கொல்லையிலே ஒருபின்னை அப்பாவைப் போல்
கொத்துதற்கு முனைந்துதன் காலை வெட்டும்
இல்லாத ஒருபொருளுக் காசை வைத்தே
எனக்கென்று ஒருபிள்ளை அடம் பிடிக்கும்
வள்ளுவர்க்குப் பிள்ளையில்லை அதனா லவரும்
வாயாரப் புகழ்ந்துவிட்டார்; இதுவா செல்வம்?
மூத்தவளை இளயவளும் பிடித் திழுத்து
முதுகினாலே அடிகொடுத்த அழுகைக் கோலம்
சாத்திவைத்த நிலைப்பேழை திறக்க வெண்ணி
தன்மேலே நடுட்பிள்ளை சாய்த்துக் கொள்ளும்
பார்த்திருந்து நான்வைக்கும் பொருளை யெல்லாம்
பங்கிட்டு நாலைந்து தினியா யுண்ணும்
ஊரடக்கி வாழ்ந்திடலாம் குறும்புப் பருவம்
உருவெடுத்தால் பெருந்தொல்லை; இதுவா செல்வம்?
மறுகணம்
சோறென்று சொல்லுதற்குத் தெரிய வில்லை
‘சோச்சிதா’ என்றுஒரு மகவு சொல்லும்
பாரம்மா ஆசிரியர் எனக்குச் சொன்ன
பாடலென ஒருபிள்ளை பண் ணிசைக்கும்
ஊர்மக்கள் ஒருமுகமாய்ப் போற்றி வாழ்ந்த
ஒருசெல்வம் மேடையிலே முழக்கஞ் செய்யும்
பாரீனிலே குழந்தையைப்போல் செல்வ மில்லை
பட்டுடலீன் கிள்ளைமொழி கொள்ளை இன்பம்
சிறுநடையால் ஒருபிள்ளை அழகு கூட்டும்
சிரிப்பாலே மற்றொன்று கொஞ்சை யள்ளும்
அருஞ்செயலால் ஒருசேயும் அன்பைச் சேர்க்கும்
அணைப்பாலே சிறுமழலை இனிமை யூட்டும்
நரைபடிந்த அப்பாவைப் போல ஒன்று
நடித்தென்றன் முகத்தோடு முகம் பதிக்கும்
கருவிழியால் வையத்தை எனக்குக் காட்டும்
கலைச்செல்வம் என்சேய்கன் கொள்ளை இன்பம்
******************************************************************************************
அலைகடல்கள் முத்தமிடும் அழகுமலை நாடு – நல்ல
அரசுபல இணைந்ததெங்கள் அருமைமலை நாடு
மலைகளும் கடல்தழுவும் மாண்புமலை நாடு – பல
மக்களொன்றாப்க் குரலெழுப்பு இன்பமலை நாடு.
பன்மொழிக்கு உரமளிக்கு பசுமைமலை நாடு - இந்தப்
பார்புகழத் துலங்குகின்ற பான்மைமிகும் நாடு
வன்செயற்கு இடமளிக்கா வன்மைமலை நாடு – எழில்
வான்சிரித்து மழையுதிரும் வறுமையிலா நாடு
வீரர்பலர் வாழ்ந்திருந்த வேங்கைமலை நாடு – தீப
வேற்றுமைகள் சிறிதுமிலா விரிந்தமன நாடு
திரமுடன் பகையொழிக்கும் திண்மைமிகும் நாடு – பல
தேசமக்கள் புகழ்ந்துரைக்கும் சிந்தைகவர் நாடு.
நாட்டுப்பற்று நிறைந்ததிந்த நல்லமலை நாடு – வெளி
நாட்டவர்க்கும் வாழ்த்துரைக்கும் நாகரீக நாடு
தீட்டும்நல்ல திட்டமெல்லாம் செயல்படுத்தும் நாடு – உயிர்
தேசப்பற்றில் தலைசிறந்த தெய்வீக நாடு.
மதபேதம் சிறிதுமின்றி மகிழ்ச்சிபொங்கும் நாடு – நல்ல
மக்களினால் ஆளப்படும் மாட்சிமிகும் நாடு
இதமுடனே கோயில்பல எழும்பும்திரு நாடு – தூய
எழுச்சிமிக்க அமைச்சர்களை ஏந்திநிற்கும் நாடு.
பள்ளிபல கட்டுகின்ற பரந்தமலை நாடு – நீயும்
படித்தறிந்து நாடுயரப் பாடுபட நாடு
உள்ளமதில் நல்லசெயல் உயர்ந்திடவே நாடு – அருள்
உத்தமர்கள் நிறைந்துதான் உண்மையான நாடு.