இட்ட முத்தம் காயுதையா
போய்வருவே வொன்று சொல்லி
போன திங்கள் போன மச்சான்
தேய் நிலவாய் நான் உருகி
தினந்தினமும் எலும்பானேன்
நின்று நின்றுநிலை குலைந்தேன்
நிம்மதியை நானிழந்தேன்
அன்றாடம் உம் நினைப்பு
அலைக்கழிக்கத் துரும்பானேன்
கல்ல மலர் தொடுத்தெடுத்தேன்
நறுமணமும் வீசவில்லை
உன்னமதில் உம்மையன்றி
ஓருருவம் தெரியவில்லை
நம்பியிங்கு இருக்கின்றேன்
நாளுந்தான் செல்கிறது
தெம்பின்றி தேம்புகின்றேன்
தேற்றுதற்கு யாருமில்லை
பஞ்சணையும் காத்திருக்க
பாவையுடல் வாடுதையா
எஞ்சிய நன்னாட்களெல்லாம்
ஏக்கத்தால் தேயுதையா
கன்னத்தில் இட்ட முத்தம்
காற்றிவிலே காயுதையா
எண்ணத்தை எழுதிவிட்டேன்
எனைத்தேடி வாருமையா
************************************************************************************
மனிதகுலப் பிணிமூப்பு இறப்பைக் கண்டு
மாற்றும்வழி அன்பென்று உரைத்த புத்தன்,
இனியதோர் அன்புநெறி உரைத்தும் தீயோர்
இன்னலினால் உயிர்நீக்க இயேசு நாதர்,
புனிதமுடன் மக்கட்குலம் வாழ எண்ணிப்
புல்லர்களால் அல்லலுற்ற நபிகன் மற்றும்
மனிதகுலத் தெய்வங்கள் பெயரைப் போல
மண்ணுலகில் நேருபுகழ் அழியாச் செல்வம்!
முல்லைக்குத் தேர்கொடுத்து மக்கள் நெஞ்சில்
முறையாக இடம்பிடித்த பாரி போல,
பொல்லாத குனிராலே மயிலும் ஆடப்
போர்வைதனைப் போர்த்திவிட்ட பேகன் போல
நல்லதொரு கருநெல்லி கிடைக்கப் பெற்றும்
நற்றமிழ்த்தாய்க் குவந்தளித்த அதிக மான்போல்
எல்லையற்ற காலம்வரை நேரு வாழ்வை
இலக்கியத்தின் வரிசையிலே உலகம் ஏற்கும்!
உணர்வுக்கு விழிப்பூட்டி மக்கள் வாழ
உயிர்மாய்க்கும் நஞ்சுண்ட சாக்ர டீசும்
இனவெறியின் கொடுமைதனை அழிக்க வெண்ணி
இறப்புலகிற் கேகிவிட்ட லிங்கன் மற்றும்
மனமகிழத் தன்னாட்டில் அன்பைப் பாய்ச்சி
மரணத்தை அரவணைத்த காந்தி வாழ்வும்
உரைக்கின்ற காவியமாய் உலகம் ஏற்கும்!
தன்னலத்தை உதறிவிட்டு மக்கட் காகத்
தரணிதனில் வாழ்ந்துவந்த நல்லோன் வாழ்வும்
எண்ணத்தை எழுத்தாக்கி மக்கன் நெஞ்சில்
இடம்பிடித்து வள்ளுவன்போல் இருந்த பேரும்
பொன்னான நன்னெறியை பேணிக் காத்துப்
புதுமைநெறி காத்திங்கு வாழ்ந்த தூயோர்
தன்னுடலைத் தன்பொருளை உயிரை இந்தத்
தரணிக்கே அளித்தவர்க்கு இறப்பே இல்லை!