ஆசைவிடு நெஞ்சே!
பொய்யாகத் தலமிருக்கும் புல்லார்;
நெஞ்சில் புழுவைத்த வஞ்சகத்தின் குத்த கையர்;
கையாகத் தோள்மீது போட்டு, தூக்குக்
கயிறாக அதைமாற்றும் கொலையர்; சற்றும்
உய்யாத தீவினையர்; உலுத்தர்; பெற்ற
உள்ளமெங்கும் கலகத்தி உற்ற நோயர்;
செய்யாத தவறேஇல் லாத வாறு
செய்துவரும் தீயரிவர் திருந்து வாரோ!
சத்தியத்தைச் சாகடிக்கும் சழக்கர்; வெல்லும்
சத்தியத்தைத் தடுத்துவிடும் வழக்கர்; நாட்டில்
நித்திய தரித்திரரை வளர்க்க, இன்னார்
நேசித்துச் செய்தொழிலே பதுக்கல், நல்ல
புத்தியுரைக் கும்கருத்தை மறுப்பர், ஏற்றிப்
பொய்யரிசிப் பொங்கலிடும் நெருப்பர்: இங்கே
அத்தியைப்போல் பூப்பூத்து மணக்க வேண்டும்!
அகம்திருந்தி அந்தமலர் அரும்பு வாரோ!
மாசுபடச் சேர்த்துவைத்த செல்வப் பேற்றை
மாதலைவன் இறைவனிடம் இறக்கி வைத்தே
ஆசையிட நினைத்தவரும், அவன்தாள் பற்றி
அமுதமுது துறவுநிலை ஆன பேரும்
பேசுவது பெருங்கதைகள் மாந்தர் வாழ்வில்!
பிறப்பென்றே இறப்புக்கும் நாள்கு றித்தான்!
காசுகதை, மனை, மக்கள், சுற்றம், வீடும்
கதைதானே! இதைஇவர்கள் கருது வாரோ!
எல்லாமும் வல்லவனால் எடுத்த மேனி
இற்றுவிழக் கூடியது தானே! கால்கள்
நில்லாமல் ஆடியது போதும் என்று
நினைக்காத மானிடனும் இருக்கின் றானே!
நல்லாரின் உரைகேட்டு நடக்க மாட்டான்!
நாம்என்ற பன்மையிலே ஒருமை கெட்டான்!
பொல்லாத செயல்ஒழிந்து, நெறிகள் சார்ந்து
புலனைந்தும் அறிவாறும் போற்று வாரோ!
சுடர்கனலைத் தொட்டெடுத்து நுகர்ந்து பார்த்தல்
துணிவில்லை; பேதமைதான்! தோன்றி மாயும்
கடல்அலையைக் கைக்குள்ளே அடக்கிக் கொள்ள
கருதுவதும் அறிவல்ல; மடமையேதான்
படர்தோகை மயிலாக வான்கோ ழிக்குப்
பாடம் நடத்தியொரு பயனில் லைதான்!
உடல்பிறிது! உயிர்பிறிது! தன்னு டைமை
உணர்வுதலை விரித்தாடிச் செய்தல் யாது?
பானைக்குள் யானைதனைப் படுக்க வைக்கும்
படுமுட்டாள் தனமான புத்தி என்ன?
தூணைத் துணைவனெனத் தழுவிக தோகை
சுகங்காணும் மாதிரியாய்ச் செயல்கள் என்ன?
வீணைக்கு நரம்பாலே வாழ்வு மாந்தன்
வெற்றிக்கு வரம்பாலே தானே வாழ்வு!
பூனைக்கும் வயிற்றுக்குள் புனுகு செல்வம்!
புகழ்தானே நிலையான மனிதன் செல்வம்!
"பெருமைக்கோர் உதாரணமாய்த் துன்புற் றாரைப்
பேணுவது செல்வந்தர் குணமாய் ஆனால்
மறுமையிலும் வாழ்வமையப் பெறுவர்" என்று
மறைபலவும் நன்வெறிகள் வகுத்து ரைத்தும்
இருசெவியும் கேளாதார்க் கிடைத்த பாட்டாய்
இருவிழியும் பாராதார் முன்னே வைத்த
திருகவியும் ஓவியமாய் அந்த நிதி
திரைமூடிக் கிடக்கவகை செய்கின் றாரே!
இழிகுணத்துக் கயவருக்கோ இனிது ரைக்க?
எச்சிலிலோ இன்னமுது சேர்க்க சுத்தக்
கழிசடைக்கோ அறிவுரைகள் சொல்லிக் காக்க?
கழுதைக்கோ கற்பூரம் மணக்க? பாவம்
பழிகளுக்கே பசிகொண்டு அலையும் இந்தப்
பாதகர்க்கோ உபதேசம் பண்ணிப் பார்க்க?
மொழி கலைக்கு விகற்பவிகா ரங்கள் ஆன
வீணருக்கு யார்பணியும் விரையம் தாளோ!
பெருந்துயரை உள்ளத்தால் ஏற்றுக் கொண்டும்
பெறும்மகிழ்வைக் காட்டாமல் அமைதி கொண்டும்
இருந்துவரும் இயல்புநிலை எவர்க்கும் வேண்டும்!
இருக்கையிலே ஆடுவதும் இல்லாப் போதில்
வருந்துவதும் மானிடனின் வாழ்க்கைப் போக்காய்
வளர்ந்துவரக் கூடாது! யாரைச் சேர்ந்தும்
வெறுந்துயரே அழுந்துவதும் இல்லை! யார்க்கும்
வெற்றிகளே தொடர்ந்துவரும் என்றும் இல்லை!
மண்ணுயிர்கள் அத்தனைக்கும் பசிதீர்க் காத
வரைமாந்தன் செயலேதும் கிழித்தான் இல்லை!
எண்ணிஎண்ணி அறிவியலை வளர்த்தான்; இன்னும்
ஏழ்மையின் பெருங்கறையை அழித்தான் இல்லை!
பண்ணியவை ஏராளம்! எனினும் காலைப்
பாம்பாகப் பின்னியவை அதனில் நீளம்!
முன்னியல்பும் மாறியது; கொடைமை அற்றோம்!
மூன்றுநெறி
கற்றோம்; பின் மறந்து விட்டேம்!
***********************************************************************************************
மேற்கில் பொழுதுசென் றோயும் அந்த
வேளையில் புள்ளினம் கூட்டில் அடையும்!
பாற்கடல் போலுமாய்ப் பொங்கும் - சுகப்
பாங்கெழில் பூக்களில் வண்டுகள் தங்கும்!
பள்ளங்கண் டோடிநீர் பாயும்! - அது
பாயும் இசைத்தேன் செவிகளில் தோயும்!
உள்ளங்கொண்டாளை நினைப்பேன்! – அந்த
ஒருத்தி நினைப்பில் உயிரை நனைப்பேன்!
அவளை மறக்கலா காதோ! – அவன்
அல்லாம லே.இந்த வாழ்வுபோ காதோ!
கவலை பெருஞ்சுமை யாச்சே! – அவள்
கால்சுற்றி நிற்பதுமூ என்றுயிர் மூச்சே!
எண்ணச் சிறகடிக்கின்றாய்! அவள்
ஏகும் இடம் சுற்றிச் சுற்றியே நின்றாய்!
என்ன இதுமட நெஞ்சே! - இந்த
இன்னல் தவிர்த்தொரு நாழிகை துஞ்சே!
காதல் மறக்க மருந்து –இன்னுங்
கண்டிலர் ஆதலால் நீயுந் திருந்து!
மாதர் படைக்கலம் வீழ்த்தி –இந்த
மண்ணில் தொலைத்தனர் மன்னரும் கீர்த்தி!
தோப்புத் துரவுக்கு வந்தால் - துரு
துருக்கும் விழிகளால் பார்த்துக் கவர்ந்தாள்!
காப்புக்கும் தென்றற் கரத்தால்- எனைக்
கட்டி யணைத்தும்ஏன் எட்டிப் பெயர்ந்தாள்!
வானின் முழுமதிப் பெண்ணே! - உன்
வட்ட எழில்முகம் பெற்றவள் தன்னை
காணின் வரச்சொல்லு வாயே! – என்றன்
கண்ணில் நிறைந்தவன் போன்றவள் நீயே!
ஓடி மறைந்தவன் தன்னை - என்
உள்ளம் மறக்கா திருப்பதும் என்னே!
தேடித் திரிகிறேன் நானே! அந்தச்
சேயிழை யானை நினைந்தினைத் தேனே!'
ஏதும்ஆ காதவன் போல்வேன்!
இல்லையென் றால்இனி எப்படி வாழ்வேன்?
பாதக் கொலுசும் சிரிக்கும்! – பண்ணிப்
பண்ணி யசைந்திடை பின்னல் தெறிக்கும்!
நகர்ப்புற எல்லையைத் தாண்டி- தினம்
நானலை கின்றேன் அமைதியை வேண்டி!
விகற்பம் தருவதே யாக -மண்ணும்
விண்ணும் சிரிப்பதேன் என்மனம் நோக?
சின்ன நதிப்பக்கம் சென்றால் - அவள்
சித்திரக் கெண்டை விழிகட்டும் துள்ளும்!
வண்ணச்செந் தாமரை கண்டால்- அந்த
மங்கை முகந்தான் அதில்பள்ளி கொள்ளும்!
விரிந்த கடலின் அலைகள் - தன்னில்
மேடுபள் எங்கள் எடுத்து நெளிந்தால்
தெரிந்துகொள் வேன்அவள் மேனி!- எனின்
தெரிவதே இல்வை முழுமை அதனில்!
நேரில் அவர்வரும் போதே- முழு
நிறைவை மனம்பெற ஏற்படும் தோதே!
வேரில் பழுத்த பலாவை – கை
விட்டு நழுவ விடுத்தேன் நிலாவே!
கண்டால் அவளை வரச்சொல்! - இல்லை
கண்டே அவளை வரச்சொல் நிலாவே!
திண்டோள் மெலிந்துநிற் கின்றேன்! - என்
சிந்தை கவர்ந்தாளைத் தேடி உலாவே!