கவிச்சித்தர் பெ.கோ மலையரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிச்சித்தர் பெ.கோ மலையரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிச்சித்தர் பெ.கோ மலையரசன்


 
அழுவோம் வா தோழா!
 
வெம்போரில் களிறாய், ஆண்மை
     வேங்கையாய்க் களம்புகுந்து
தம்போரில் பகையை வென்ற
     தமிழினத் தகைமை கொன்று,
வம்பாளர் பின்னே வாழ்வின்
     வாய்ப்புக்காய்த் தாழ்ந்து நிற்கும்,
நலம்போலும் கவிஞர்க் காக
     நாணியே அழுவோம் தோழா!
 
வஞ்சகர் கூட்டம் சேர்ந்து
    வயத்தமிழ் புதைத்தற் கென்றே
நெஞ்சிலே நஞ்சை வைத்து
     நெடுகிலும் இனத்தின் வாழ்வைத்
துஞ்சிடச் செய்து வாழும்
     துப்பிலார்க் கீழ்ப்படிந்தே
அஞ்சிவாழ் கவிஞர்க் காக
     அரைநொடி அழுவோம் தோழா!
 
மனச்சான்றைப் புதைத்து விட்டு
     மானத்தை மன்றில் விற்று
நிணச்சோற்றுக் காக முன்னோர்
     நெறிப்பாடும் மறந்தே இற்றைப்
பணச்சேற்றில் மிதப்பார் பாதம்
     பற்றியே வாழும் நம்மின்
இனச்சோற்றுக் கவிஞர்க் காக
     இரங்கியே அழுவோம் தோழா!
 
வல்லில்லின் ஓரி என்பான்
     வாய்த்தகைக் கணையைப் பாய்ச்சிக்
கொல்கின்ற பகையை நூறு
     கூறாக்கும் மரபைச் சார்ந்து
வெல்கின்ற கவிஞர் சில்லோர்
     வீறெல்லாம் ஒடுங்கிச் சோர்ந்து
செல்கின்ற இழிவைக் கண்டு
     சிறிதுநாம் அழுவோம் தோழா!
 
தமிழ்மகன் தோற்ப துண்டா!
     தமிழ்க்கவி இரப்ப துண்டா!
கமழ்கின்ற தமிழில் வெற்றிக்
     கவிபுனை ஆற்றல் வாய்ந்தும்
குவிபொருள் படைத்தோர் முன்னே
     குற்றேவல் செய்யும் முன்னாள்
தமிழ்க்கவிக் கூட்டம் எண்ணிச்
     சற்றேநாம் அழுவோம் தோழா!
 
இனமானம் பேணி நம்மின்
     இருந்தமிழ் மரபைப் பேணித்
தனிமேன்மை கருதா இன்பத்
     தமிழ்பாடும் பெருமை விட்டு,
பணம்நாடி மொழியை விற்கும்
     பகட்டரைப் பணிந்து வாழும்
மனம்மாண்ட கவிஞர்க் காக
     வாகொஞ்சம் அழுவோம் தோழா!
 
தேவாரப் பாட்டை நல்ல
     செழுந்தமிழ் இசையின் கூட்டை
நாவாரப் பாடிப் பாடி
     நம்மினம் உயர்த்தல் விட்டுச்
சாவாத கவிதைப் பண்பைச்
     சாடியே மகிழ்வார் பின்னே
போவாரின் கேட்டைச் சொல்லிப்
     புலம்பியே அழுவோம் தோழா!

எத்தனை அரங்கில், ஏட்டில்
     எழுச்சிகொள் கவிதை பாடி
முத்தமிழ் வளர்த்தோம், ஒன்றாய்
     முனைப்புடன் மரபு காத்தோம்!
அத்தனை சிறப்பும் கெட்டே
     ஆசையின் சேற்றில் வீழ்ந்தோர்
பித்தராய்ப் போனோர் என்றே 
    பேர்சொல்லி அழுவோம் தோழா!
*********************************************************************************************

தென்றலே வாழி!
 
மழலையரின் சுரிகுழலில் ஊஞ்ச லாடி
     மலர்விழியைச் சுடர்நுதலைத் தழுவிச் செந்தேன்
வழியிதழில் முகம்பதித்துச் செவியில் பாடி
    வளர்நிலவாய்ச் சேய்துயிலக் கவரி வீசி
அலைகடலின் சேற்சுழன்று கரை யோரத்தில்
     அலைமணலில் நுரைப்பூவை மெல்லப் புய்த்துக்
குலைவாழைக் குருத்துகளில் கமுகம் பூவில்
     கொஞ்சுகிறாய் தென்றலேயுடன் தேடல் யாதோ!
 
அருவிகளில் குதித்தாடிச் சிலிர்ப்புண் டாக்கி
     ஆற்றிலெழும் புனற்பெருக்கில் சுழித்துக் கூடிக்
குருவிகளின் இணைச்சிறகைக் கோதி மெல்லக்
     கொடியலர்ந்த மலர்புகுந்து வாசம் அள்ளித்
தருவிருந்தாய் எண்டிசையும் கமழ வீசி
     தளராமல் மனங்களிலே எழுச்சி கூட்டிப்
பெருவிருந்தைப் பொதுநடத்தி அருந்தொண் டாற்றும்
     பெற்றியினைப் பெற்றதெங்கே தென்ற லேநீ!
 
கரும்பாடும் சொல்லூற்றுக் கன்னிப் பெண்கள்
     கருங்குழலில் சதிராடிக் கன்னம் தீண்டிக்
குறும்பாடும் அவர்விழியின் படப டப்பில்
     கொஞ்சுகின்ற வளையாடும் தந்தக் கையில்
விருந்தாடிப் பசியதளிர் மேனி யெங்கும்
     விளையாடிச் சிறுநகைப்பே ஒலிபரப்பி
இறும்பூது விளைக்கின்றாய் என்றும் மாறா
    இளமைதிகழ் தென்றலேநீ நீடு வாழி!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...