சேவைக்கு ஒரு பணிமனை
இதயம் சீர்பெற உதவும் தனிமனை
எவரும் வாழ்த்திடும் நனிமனை- அதில்
உதய மாகுமோர் புதிய வாழ்வதால்
உயர்ந்த சேவையின் பணிமனை
எண்ணில் அடங்கிலார் இதய நோயுளார்
ஏற்ற மருத்துவம் காண்கிறார்- அவர்
மண்ணில் நீண்டநாள் வாழ மீண்டும்தம்
மனத்தில் நம்பிக்கை பூண்கிறார்
திடமும் கல்வியும் திறமும் வாய்ந்தவர்
தேர்ந்த மருத்துவம் வழங்குவார்- அங்குக்
கடமை உடையிலே கனிந்த நகையிலே
கருணைத் தாதியர் இலங்குவார்
நல்ல மனங்களால் தோன்றுமே- அங்கு
மாட மாளிகை மட்டும் போதுமோ
மக்கள் உடல்நலம் வேண்டுமே!
ஏழை உடம்பிலும் இதய நோய்வரும்
என்ப துணர்ந்துநம் நாட்டிலே- அவர்
வாழ மருத்துவம் வழங்கும் நல்லவர்
வாழ்க வளர்தமிழ்ப் பாட்டிலே!
***************************************************************************************
இரட்டைக் கோபுரம்
ஏற்றத்தைக் காட்டுது
இவனை இன்னமும்
ஏழைமை வாட்டுது
பரட்டைத் தலையுடன்
பாதைகள் போட்டவன்
பங்குக்கு இழிவுதான்
பரிசாய் வாய்க்குது
கூட்டணி போலிவன்
குடும்பமே உழைக்குது
கொள்கையின் கோணலில்
குழம்பியே தவிக்குது
காட்டிய பாதையில்
கால்தினம் நடக்குது
கனவுகள் தொடர்ந்திடக்
காலமும் கடக்குது
பாட்டிலும் படத்திலும்
பாதிநாள் கழியுது
பையவே மொழிவுடன்
பண்பாடும் அழியுது
வாட்டத்தில் முதியோர்
வாழ்நாள் உருளுது
வளர்ந்திடும் தலைமுறை
வன்முறை பயலுதே!