கயமை வாழ்வு
பொய்மையும் புரட்டும் செய்வான் போலியர் உலகில் வாழ்வான்!
மெய்மையைப் பழித்தும் மெல்வான் மெனக்கெடக் குடியைக் கொல்வான்
மய்யலில் மோகம் கொள்வான் மயங்கிட பழிகள் சூழ்வான்!
மெய்தனில் வினைகள் ஏற்பான் மெலிந்திட இயற்கை ஆவான்!
மொழிதனில் கட்சி சேர்ப்பான் மடிதனை மனத்தில் வைப்பான்!
இழிதகை இருண்மை யாள்வான் இனிப்பாய்ப் பேசி வெல்வான்!
கழிவுகள் கறையாய் வாய்ப்பான் கசடுகள் கணத்தில் கோர்ப்பான்!
சுழிவுகள் கொண்ட வாழ்வில் சூனியம் கொண்டு மாய்வான்!
பழிகளை மனத்தில் வைத்துப் பதடியாய்ப் பழகி வாழ்வான்!
பிழைகளைச் செய்து நாளும் பிறப்பினைத் தாழ்த்தி வீழ்வான்!
கழிச்சடை கயமை வாழ்க்கை காரிருள் பொதிந்து சூழும்!
விழியதும் விழிப்புக்
கொள்ளா வீம்பு டன் விண்ணி லேகும்!
************************************************************************************************
உழவர்தம் திருநாளே உலகோர்க்குப் பெருநாளே !
உழைவர்தன் உன்னதத்தை உலகத்தார் வியந்தாரே !
பழந்தமிழர் மாண்பதனை மன்பதையில் காண்பதனால்
பல்லூழி பழக்கம்தான் பயின்றநல் வழக்கம்தான் !
பிழைத்திடும் பூமியிலே புவியோர்கள் ஏற்றிடுதல்
பிழையின்றிப் போற்றிடுதல் பண்பாட்டு ஒழுகல்தான் !
இழையோடும் பழக்கம்தான் இறைமையின் அழகும்தான்
இல்லத்தார் மகிழ்ந்திடவும் இன்னொளியும் கூடுங்கால் !
உலகமாந்தர் உயிர்வாழ ஊனினையும் உழைப்பாக்கி
உயிர்ப்பித்து நிலத்திடையே உய்யவழி கண்டிடுவார்
விலகிடுமே இன்னல்களும் வறுமைகளும் வாழ்வதனில்
விவசாயம்நல் வாழ்வாகி வளமாக்கும் வண்ணமுமாய்!
குலமாண்பு குறையாமல் குத்துண்டும் மிதிபட்டும்
குவலயத்தில் பரிதவித்துப் பலகாலம் இடருற்றும்
உலன்றநின் வாழ்வதனும் பூமியிலே புதைந்தாலும்
புத்தாக்கம் கொண்டிங்கு புதுவாழ்வும் பெறவேண்டும்!
ஏறுழவன் பூமிதனிலே ஏற்றமுடன் வாழ்வதனை
ஏழ்மையையும் போக்கிடவே எழில்கொண்டு வாழ்ந்திடவும்
அறுவடையும் பெருகிடவும் அறவாழ்வும் மிளிர்ந்திடவும்
ஆகாயம் உயர்ந்திடவே ஆண்டவனின் அருள்வேண்டும்
மறுவாழ்வு பெற்றிங்கு மாணாக்கம் கொண்டிடவே!
மலர்ந்திடவும் மணந்திடவும் மகிழ்ந்திடவும் இகவாழ்வும்
சிறுமதியும் போக்கிடவே சிறந்தெழுவார் உழவரினியே!
சிறுவாழ்வும் சீர்பெறவே சிங்கம்போல் முழங்கிடுமே!
தொல்லுலகில் தோன்றியநல் தொன்தொழிலாம் விவசாயம்
திருமையையும் அருமையையும் திருநாளில் தந்திடுமாம்
சில்லறைகள் பெருகிடவும் சிறுமைகளும் அகன்றிடவும்
சிறந்தோங்கி பயிர்த்தொழிலும் சுகத்தினிலே நிலைத்திடவும்
கல்லறைகள் கனக்கின்ற கருமைகளும் விலகிடுவே!
கழனியிலே உழவுப்பணி காலமெல்லாம் பெருகவேண்டும்
புல்லுணர்வார் புவிதனிலே புறமேகி ஓடிடவே!
பல்லாண்டுப் பசுந்தொழிலும் பாரெல்லாம்
குலுங்கவேண்டும்!