தமிழ்த்தோற்றம்
தீய்ந்த கதிர்ப்பிழம்பின்
திரிந்த நிலவுலகில்
தோய்ந்த தமிழினத்தின்
தொன்மம் பறைசாற்றும்
வேய்ந்தர் வளர்த்ததமிழ்
வெம்புலவோர் ஆண்டதமிழ்
ஆய்ந்து திறம்போற்றும்
அரங்கிற் றிருவேற்றம் !
சாய்ந்த தமிழினத்தைச்
சற்றே நிமிரவைக்கும்
பாய்ந்த தமிழ்வெள்ளம்
பருகப் பயிர்சிரிக்கும்
தேய்ந்த பழம்பெருமை
திரும்பத் தலைதூக்கும்
பாய்ந்து வருகுதெனப்
பகரும் தமிழ்த்தோற்றம்!
*****************************************************************************************
விழா எடுத்தோம்!
முத்தமிழ் வளர்த்த நாட்டை
அப்புறக் கடல் புறக்கி
அணிமலை நாடு வந்தும்
தப்புறக் கலைக ளோடு
தமிழறம் வளர்த்த மாந்தர்
ஒப்புற உயர்ந்து நின்றார்
உழைப்பினில் உலகை வென்றார்!
வெற்றியைத் தொடர்வ தற்கும்
வீழ்ந்தவர் மீள்வ தற்கும்
நெற்றி நீர் நிலத்திற் சிந்த
நேர்வழி சென்ற வர்க்கும்
பெற்றியைத் தந்த மேன்மைப்
பேறுரு தமிழை வாழ்த்த
உற்றதோர் விழாவெ டுத்தோம்
உயர்த்திட வருக! வாழ்க!