காத்திருப்பேன்
இயற்கை வனப்பை அழகூட்டி
இன்பம் அளிக்கும் இனியவளே
செயற்கை எதற்கு சேயிழைநீ
செல்லா துநில் சுடரொளியே
மயக்க மூட்டும் மதிமுகமே
மதுவின் குடமே செந்தேனே
கயற்கண் காட்டி மறைகின்ற
காத லுனையே தேடுகின்றேன்
இன்பம் சிலநாள் நீடிக்கும்
இன்னல் அதனைச் சீரழிக்கும்
துன்பம் கழிய துணைநிற்கும்
தூய வள்நீ வாராயோ
என்பி லதனைக் காய்வதனை
எழுப்பி நடக்க விசையூட்டும்
என்றன் அன்புக் காதலியே
எழிலே எழும்பி வாராயோ
நெஞ்சம் என்றும் உன்வரவை
நினைந்து ருகியே காத்திருக்கும்
வஞ்ச மில்லா திருமுகத்தை
வடிவ ழகேநீ காட்டாயோ
துஞ்ச மனமோ விரும்பவில்லை
தூய வளுன்னைக் காணாமல்
எஞ்சி இருக்கும் காலமெல்லாம்
எனைத்த ழுவிட விரைந்துவாராய்
பனியில் நனைந்த வெண்ணிலவே
பார்க்க இதயம் பாய்கிறதே
கனியூ றியநல் கற்கண்டே
கடித்தே உண்ண விரும்புகிறேன்
நுனியும் மோகம் தணியவில்லை
நூபு ரம்காட் டிவருவாயோ
இனியும் மேகத் திரைபின்னே
இருப்பது உனக்கே சரியாமோ?
****************************************************************************
மாய்த்திட முனைவோம்
கொன்றிடுவே னெனமிரட்டும்
கொரோனா கிருமியுனை
நின்றெதிர் போராடி
நிலைகுலையச் செய்திடுவோம்
என்றைக்கும் நம்வாசல்
ஏறிவர வழிமறிப்போம்
வென்றிடவே நடத்திடுவோம்
வேள்வியுடன் யாகத்தை
கத்தியின்றி சத்தமின்றி
கரைகளை உடைத்திடவே
நத்தியேபி ழைத்திடுமுன்
நமன்போன்ற நச்சினை
புத்தியோடே ஒறுத்திடவே
புதுவழிதான் கொணருவோமே
பத்திரமாய் நன்மருந்தைப்
படைத்திடதி னம்முயல்வோம்
காற்றினிலே ஏறிடுமே
கைகளைநன்றாய் தழுவிவிடும்
சோற்றுக்கு நம்முடலைச்
சொந்தம்கொண் டாடிவிடும்
ஊற்றுக்கண் நீராக
உடைப்பெடுத்து வந்திடும்
நாற்றக்க ழிவுதனையே
நசுக்கியதை மாய்த்திடுவோம்
அல்லாடும் மக்கள்தம்
அல்லல்கள் போக்கிடவே
உள்ளாரும் இல்லாரும்
உறவுடனே உற்றாரும்
எல்லாரும் ஒருசேர
ஏற்புடைய வழிமுறையை
தள்ளாமல் நாடோறும்
தயக்கமின்றி பழகிடுவோம்
வல்லவர்க்கு வல்லவர்
வையகமேதான் கண்டதுபோல்
நல்லறிஞர் விரைவாக
நன்மருந்தைத் தந்திடுவர்
எள்ளளவும் சோராமல்
எதிரியினை வீழ்த்திடுவோம்
வள்ளலவன் கருணையினால்
வாழ்ந்திடலாம் வளமாக
உலகமென்றும் நிலைத்திடவே
உயர்வழியே கண்டிருவோம்
கலகமினி வேண்டாமே
கடமையைத்தான் செய்வோமே
பழகும்நல் மனிதரினம்
பயமின்றி பிழைத்திடவே
விலகவழி சொல்லிதினம்
வியாதியைத்தான் விரட்டிடுவோம்!