விரைந்தெழுந்தே வாராய்!
அச்சமின்றி அவனியிலே ஆண்மையுடன் வாழ்ந்த
அரும்பேற்றை இழந்துழலும் ஆய்தமிழா! உன்னில்
அச்சமெலாம் குடிகொண்(டு) ஆட்சிசெய்வ தேனோ?
ஆய்ந்திடுங்கால் உண்மையினை ஆங்குணர்ந்து கொள்வாய்!
இச்சகங்கள் பலபேசி இனபேதம் சொன்ன
இதயமில்லா இழிஞருடன் இணைந்ததனா லன்றோ?
ஒச்சமிலா ஓரினமாய் உயர்ந்தோங்கி நின்ற
உன்பேற்றை இழந்திட்டாய்! உளம்நலிந்து விட்டாய்!
சாத்திரங்கள் சொன்னதெலாம் சரியென்று நம்பிச்
சாதியினச் சகதிக்குள் சாய்ந்திட்டாய்; வாழ்வில்
சாத்தியம்சேர் செயலுக்கும் சகுனங்கள் பார்த்துத்
தன்னம்பிக் கையற்றே தளர்ந்திட்டாய்; உண்மை
நேத்திரமாம் ஆறறிவால் நீளுலகைக் காணா
நிலையாலே மாட்சியெலாம் நீயிழந்தே, ஓட்டைப்
பாத்திரம்போல் தரமற்றுப் பாழாகிப் பாரோர்
பரிதாபக் கூற்றுக்கும் பலியாகி விட்டாய்!
உடல்நோக உழைத்திட்டாய்! ஊதியமும் பெற்றாய்!
உற்றதொரு குறைநீக்க உவந்தென்ன செய்தாய்?
உடலோ(டு) உய்யவரும் உளத்தையும் தாக்கி
உயிர்மாய்க்கும் கள்ளுக்கே உன்செல்வம் ஈந்தாய்!
கடல்தாண்டி அறம்வளர்த்த கருமமெலாம் இன்று
கடலாடும் துரும்பேபோல் காணுதடா தோழா!
தொடர்ந்திட்ட மடமையினைத் தூரத்தே ஓட்டத்
துணிந்திலையோ? தமிழா, உன் தொல்வீரம் எங்கே?
அஞ்ஞான ஆழியிலே அமிழ்ந்திருந்தோ ரெல்லாம்
அறிவொளிரும் சாதனையால் அணிபெற்றார்; அன்றே
மெய்ஞ்ஞான நெறிபிறழா மேன்மையுடன் நின்று
விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்ட நாமோ
எஞ்ஞான்றும் விடிவில்லா இழிமையிலே மூழ்கி
எதிர்கண்டார் நகைப்பிற்கும் இலக்காகி விட்டோம்
நெஞ்சாரக் கணமேனும் நினைத்திட்டால் உள்ளம்
நெருப்பாகிக் குமையுதடா நேயமிகு தோழா!
ஆண்டஇனம் என்றுதினம் ஆர்ப்பரித்தால் மட்டும்
ஆகிவரா தெச்செயலும், ஆதலினால் தோழா
ஈண்டுநமைச் சூழ்ந்துறையும் இருளகற்ற ஒன்றாய்
இணைந்திடுவாய் மொழியின்கீழ் இன்தோழா! வாழ்வை
வீரமிகு செந்தமிழா வினையாற்ற உன்னை
வேண்டுகிறேன்; குலங்காக்க விரைந்திடுவாய்! கொண்ட
வேதனைகள் போதுமினி விரைந்தெழுந்தே வாராய்!