எம் கொள்கை வேறு!
பச்சைவாழை மட்டைதனில் நெருப்புண் டாக்கிப்
பகலவனை உலகின்முன் கண்ம றைத்தே
அச்சாணி இரண்டுமின்றித் தேர்ந டத்தி
ஆவின்முன் புலிவீழ்ந்தே அரளச் செய்து
மொச்சைக்குள் துரியானைப் பழுக்க வைத்து
முட்டைக்குள் கருவின்றி உலர விட்டால்
இச்சைக்குப் பேர்போன தமிழன் இங்கே
இணைந்துமனம் ஒருமுகமாய்க் கூடு வானே!
கட்சிக்கு மேல்கட்சி வளர்த்த தல்லால்
காட்டுப்பூப் போற்கொள்கை வளர்த்த தல்லால்
உட்சிக்கல் மேன்மேலும் உறைந்த தல்லால்
உள்ளொன்று புறமொன்று நிறைந்த தல்லால்
முட்சிக்கிச் சேலையெனக் கிழிந்த தல்லால்
மூடகமும் வீணகமும் மூண்ட தல்லால்
எச்சிக்கல் இக்காலை தீர்ந்த துண்டு?
இடைச்செருகல் வேலையன்றி என்ன உண்டு?
கடல்வற்றிக் கருவாடு தின்போம் என்று
கரையோரம் கால்மாற்றி நின்று நின்று
குடல்வற்றிச் செத்தவொரு கொக்கைப் போலக்
கோமாளிக் கொள்கைகளும் உயிர்ப்ப துண்டோ
மடல்பற்றி ஏறிமர உச்சி நின்று
மார்தட்டி முழக்குமுரை ஒன்று மட்டும்
இடல்வெற்றி என்பதுவாய்க் கணித்துக் கொண்டே
இயங்குவரேல் அளியரவர் இரங்கு வோமே!
மொழியினத்தைச் சிற்சிலவாய்ச் சொல்லிச் சொல்லி
மூலைமுடுக் கெல்லாமும் வாய்பி தற்றி
விழிபிதுங்கச் சிலப்பாக்கள் வடித்துக் காட்டி
வெற்றார்ப்பு மதர்ப்போடு வேய்ந் துலாவித்
தெளிவின்றி உள்ளதையும் சிதறச் செய்யும்
செயலெங்கே நெறியாகும்? அமைவாய் ஓர்ந்து
வழியொன்று யாம்கொள்வோம் தமிழு ணர்வால்
வயப்படுவோம் மருக்கொழுந்தாய் மணம்விரிப்போம்!