வாழ்வு என்பது வாழத் தானே
வருந்தி என்றும் வாடிட அல்ல
தாழ்வு நம்மைச் சார்ந்த போதும்
தயக்க மின்றித் தலையையு யர்த்து
வீழ்வ தொன்றும் வெட்க மல்ல
வீரமாய் நின்று வீரியங் காட்டு
மாள்வ தொருநாள் வந்தேத் தீரும்
மகிழ்வா யோற்பாய் மங்கல வாழ்வை!
தோற்ப தொன்றும் தோல்வி இல்லை
துவண்டு நின்றால் வந்திடும் தொல்லை
நாற்ப தாண்டு நன்றாய் வாழ்ந்தும்
நற்பணி செய்யா நானில வாழ்வை
ஏற்ப தென்பது ஏளனந் தானே
ஏழைக் குதவா திருப்பது வீணே
தூற்ப தென்பதைத் தூர நீக்கு
துயரம் போக்கத் தூணாய் நில்லு
*************************************************************************************************
ஐந்து ஆண்டுக் கொருமுறையும் தேர்தல்
வந்து ஆட்சி அமைத்திடுமே!
நன்மை நல்கும் நல்லவரை நாமும்
நயமாய்க் கண்டு போற்றிடுவோம்!
வாக்கு என்பது வரமாகும் நன்கு
நோக்கி அளித்தால் பயனாகும்!
வாக்குத் தவறும் வாதிகளின் பொல்லா
நாக்கை வெட்டி வீசிடுவோம்!
பாக்கு மரமாய் நின்றாலும், மக்கள்
காக்கும் கடமை தவறினாலும்
தூக்கித் தூக்கியாய் உழன்றாலும், நித்தம்
நீக்கிடு அதுதான் மரபாகும்!
வாக்குத் தவறா நல்லோரை, என்றும்
ஊக்கு விப்போம் நாமும்தான்!
பூக்கும் பூவாய் மணம்வீசி, நம்மைக்
காக்கும் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்!