கவிஞர் ஆதித்தன் மகாமுனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் ஆதித்தன் மகாமுனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் ஆதித்தன் மகாமுனி


 

மனிதநேயம்
 
விஞ்சுபுகழ் வானேறி எல்லை தொட்டோம்
       விசும்புகிற ஏழைக்கு வீதி திட்டம்
தஞ்சமென்றால் கைகொடுக்க யார்தான் உண்டோ
        தரணியிலே அன்புக்கு விடையோ பஞ்சம்
நெஞ்சமில்லார் தன்பையையே நிறைத்து வாழ
       நெறிநின்றோர் வீடுபுகழ் பெற்ற பின்னும்
கொஞ்சுமொழி எங்கிருந்தோ கேட்டு விட்டால்
       குவலயத்தில் இருக்குமொரு மனித நேயம்!
 
ஊற்றுகிற பாலெல்லாம் வீணாய் போக
     ஊர்வீதி தெருக்களிலே பிள்ளை வாடும்
சாற்றுகிற காணிக்கை தீயில் வேக
     சாமிவந்தா வட்டியிலே சோறு போடும்
போற்றுகிற குலதெய்வம் முன்னே நின்றால்
     போற்றிடவா மாந்தரினம் நாடி யோடும்
ஏற்றிடவோ வடலூரின் ஞானி வந்தார்
      இன்றளவும் வாழ்கிறது மனித நேயம்!
 
புள்ளுக்கும் பூண்டுக்கும் தண்ணீர் விட்டுப்
       பூனைக்கும் யானைக்கும் நேயம் வைக்க
பிள்ளைக்கும் பேடிக்கும் வீரம் சொல்லி
       பெற்றவரும் கற்றவரும் மனிதம் காக்க
முள்ளுக்கும் பூவுக்கும் இடையே எங்கோ
        முளைத்திருக்கும் சொல்லாத காதல் போல
எல்லோர்க்கும் அடிநெஞ்சில் ஈரம் பொங்கும்
        ஈகையெனும் அன்பொழுகும் மனித நேயம்!
 
தேயத்தில் சோர்வின்றி உழைத்த அன்னை
      தெரெசாவும் மண்டேலா பலரும்; மண்ணில்
மாயாத கருணையினால் பேதம் விட்டு
       வளையாத நோக்கத்தில் மாண்பு கொண்டு
சாயத்தில் வெளுக்காத வெள்ளை யுள்ளம்
       சளைக்காமல் தொண்டறத்தில் தனையே ஈந்து
தாயாகி நிற்பதனால் உயிர்கள் யாவும்
        தழைக்கிறது சிரிக்கிறது நேயம் கொண்டே!

*************************************************************************************************
தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
 
கவியரங்கம் அரியணையில் வீற்றி ருக்கும்
     கவியமுதே சொல்லமுதே வணக்கம் தாயே
புவியரங்கில் தமிழ்ப்பாக்கள் கொத்தாய் தந்த
     பொன்நிலவர் பாவரங்கில் தலைமை ஏற்க
செவியரங்கை இணையத்தால் இணைத்துக் கட்டி
     செந்தமிழில் கனிந்துவரும் கவிதைக் கேட்டுக்
குவிகரங்கள் ஒலியெழுப்பி வாழ்த்துச் சொல்ல
     குவிந்திருக்கும் யாவர்க்கும் வணக்கம் சொல்வேன்!
 
கற்றறிந்தோர் சபையினிலே பெரியோர் முன்னே
     காலத்திற் கேற்றவொரு கவிதைப் பாட
பொற்றவைக்குத் தலைப்பொன்றை நல்கி இங்கு
     பொதுவினிலே பாடயென்னை அழைத்தார்; நானும்
சிற்றறிவுக் கெட்டியதை துணிந்து சொல்ல
      திறம்பெற்றார் முன்னிலையில் வந்து நின்று
நற்றமிழர் வாழ்வதற்கென் னென்ன வேண்டும்
      நற்றமிழ்தான் வேண்டுமென சொல்ல வந்தேன்.
 
தமிழன்னைக் குடிக்கொண்ட தமிழன் நாவில்
     சரித்திரத்தின் பதிவுகளே வீரம் பேசும்
அமிழ்தென்றும் உயிரென்றும் உரைத்தப் பாவும்
      அமிழ்தெங்கே தமிழெங்கே என்றே கூவும்
உமிழ்கின்ற செயலெல்லாம் அரங்கம் காண
     ஓயாமல் உழைக்கின்ற தமிழர் இங்கே
தமிழுக்கென் றென்னசெய்தார் என்று பார்த்தால்
      தயங்காமல் சொல்லிடலாம் ஒன்றும் இல்லை
 
ஒப்புக்கு மொழிப்பற்றைக் காட்ட வந்தோர்
     உருப்படியாய் மொழிக்காக என்ன செய்தார்
உப்புக்குத் தேவையான சோற்றைக் கொட்டி
      ஒழுங்குசெய்யப் பார்க்கின்றார் என்ன சொல்ல
சப்புக்குச் சிலநிகழ்ச்சி வீம்பாய் செய்வார்
      சல்லிக்கும் ஆகாத புரட்டுக் குப்பை
மப்புக்குக் கூடிநின்று பற்றே என்பார்
    மண்குதிரை மரபுவழி வந்த வர்தான்!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...