ஊசி ஊஞ்சல்
தூசி தூற்றலில் தோன்றிய கோளிலே
நேசிக் கும்உயிர் நேர்படக் கண்டிட
வாசி ஏற்றியே வந்திடும் ஆதனும்
ஊசி ஊஞ்சலில் ஆடியே ஓய்ந்திடும்
மறையும் பேதமும் மாற்றமும் மாய்ந்திட
நிறையும் குன்றியே நிற்பவர் ஏதிலார்
குறையும் வாழ்க்கையில் குன்றும் கரைந்திட
மறைவர் கூடவே வந்திடப் போயினர்
சிற்று யிர்கொரு சீர்சிறப் பில்லையே
பற்றி னால்வரப் பார்ப்பவர் தொல்லையே
கற்ற வர்மிகு கண்டது காட்சியே
நற்ற வப்பயன் நாட்டிய கூட்டிலும்
பூக்கள் நம்பிதான் பூக்குமோ ஆவலில்?
மாக்கள் வேற்றிட வாக்கினில் வாழுமோ?
ஈக்கள் வாழ்க்கையை ஈட்டியே பேசினோம்
"ஊக்கம்
தான்தும்பி ஊன்றியே வாழ்ந்திடு"!
***************************************************************************
பாடாத பாட்டொன்று பாங்காய்ப் பாவரங்கில்
நாடாத மொழியின்று ஞானப் புகழ்பரப்ப
வாடாத கலையாக வாணாள் புகழ்தந்தும்
ஓடாத குதிரையை ஊட்டி வளர்க்கின்றார்!
வங்கமொழி அழியாது நால்வர் மாண்டிடவே
பங்கமொழி வாராது பாடம் நடத்திடுவார்
சங்கமொழித் தாய்மொழிக்குச் சாய்ந்தோர் பலராக
தங்கமொழித் தமிழ்மொழியைத் தாங்க யார்வருவார்?
மூத்தமொழித் தாய்மொழியை மூழ்கிப் பயனறியார்
நீத்தமொழிப் பற்றிற்கு நீண்ட சி(ண்)டுமுடிப்பார்
காத்தமொழிப் பண்பாட்டைக் காவற் துணையாக
யாத்தமொழி இனத்துடனே
என்றும் இணைந்திருக்கும்