விழித்திடு தமிழா
கதிரொளியைக் காணாத நாடுப் போல,
கதைத்திரித்த சரித்திரமும் ஏற்றி விட்டார்.
மதிவியக்க கீழ்திசையை ஆண்டச் சோழன்,
மகத்தான செய்திகளை விட்டு விட்டார்
நதியடையும் கடல்தீரம் முகாம்கள் கொண்டு
நல்விதமாய் வர்த்தகமும் நடத்தி ஓங்கி
புதியதொரு அரசாட்சி இங்கே தோற்றிப்
புதுமையதைத் தான்செய்தார் தமிழர் அன்று!
சஞ்சியிலே கூலியென்றுக் கப்பல் ஏறி,
சாப்பிடலாம் வயிறார என்று நம்பி,
மிஞ்சிபணம் காய்க்குதடா மரத்தில் என்ற,
மிகுபொய்யன் கங்காணி பின்னே வந்தார்
அஞ்சிவிலங் கோடு,வண்ணம் காட ழித்தார்
ஆயிரமா யிரநொய்வ மரங்கள் நட்டார்
புன்சிரிப்பு மாறாதுப் பாதை யிட்டார்
புதுநாடாய் மாற்றிவைத்தார் தமிழர் அன்று!
தமிழனவன் உழைப்பறிந்த ஜப்பான் வீரர்
தம்போர்க்குச் செல்லவழி தண்ட வாளம்
அமைப்பதற்கே அடிமைகளாய் இழுத்துச் சென்றார்
அங்கிங்கும் பிரித்தேற்றித் தாய்லாந் தின்பால்
குமித்தவரை வதைவதைக்க சில்லோர் மாண்டார்
கொடியமலே ரிய;நோயால், பல்லோர் மாய்ந்தார்
அமைதிதொகை தீர்வெனவே ஜப்பான் நாட்டார்
அளித்தபணம் சேரவில்லை, யாரோ கேட்பார்?
சாதி,மதப் பிரிவுகளால் கண்ட தென்ன?
சாதனைகள் புரிந்தோமா? வாழ்வில் ஏற்றம்
மேதினியில் பெற்றோமா? ஒருமைக் கொண்டு,
மேன்மைகொள்ள நெறிகாட்டும் தலைவர் உண்டோ?
ஆதியிலே வந்தகுடி நாம்தான் என்று
ஆதாரம் இருந்தாலும் ஏற்க மாட்டார்
மீதியுள்ள உரிமையதும் போகும் முன்ன
விரைந்தே,நம்
வழிகாண்போம் திட்டம் தீட்டி!
**************************************************************************************
தமிழ்ப்
பெயரிடுவோம்.தமிழினத்தார் தமிழ்ப்பெயரை மறுத்து விட்டால்
தரணியிலே தமிழனென எவர்தான் காண்பார்?
தமிழ்பெயரால் தலைக்குனிவே ஆகும் என்றே,
தள்ளிவிட்டுப் பெயர்புனைவார் இச்சைக் கொண்டு
இமியளவும் பொருளில்லா திருந்த போதும்
இட்டப்பெயர்; நாகரிகம் பொருத்த மென்பார்
சிமிட்டுதலாய் இதுகுறித்து விளக்கம் கேட்டால்
சினங்கொள்வார் "என்னுரிமை" வைப்பேன் என்பார்.
பெரியவர்கள் அறிவுரையாய் எடுத்துச் சொன்னால்
பெருங்கருத்தைச் செவிகளிலே ஏற்க மாட்டார்
திருத்தமுடன் தமிழ்பெயராய் மாற்றி வைத்தால்
திருவோங்கத் தமிழ்மணமும் புகழைக் கூட்டும்
உரிமையுடன் இடுமருந்தாய் இதனைச் சொன்னேன்
உணர்வுடனே உண்மையதை ஆய்ந்து காணே
நெறிவகுத்தே மேன்மைகண்ட இனத்தோர் பாங்கை
நெஞ்சமதில்
கொண்டுசென்று நிலைக்கச் செய்வோம்.