நன்மைபெறக் குடியுரிமை தரவேண்டும் நாடு !
மலாக்காவில் பிறந்தவரா ; வாழ்பவரா ? அறியோம்!
மாதவிஸ்ரீ சகோதரிக்குக் குடியுரிமை இலையாம் !
மலாக்காவில் பிறந்திருப்பின் குடியுரிமை இயல்பாய்
மாதவிஸ்ரீ பெற்றிருப்பார் !? அதிலென்ன ஐயம் ?
மலாக்காவில் வாழ்ந்தாலும் அவர்பெற்றோர் இந்த
மலேசியத்துக் குடியுரிமை பெற்றவராய் இருந்தும்
அழாக்குறையாய்ச் சொல்கின்றேன் மாதவிஸ்ரீ தனக்கே
அரிதான குடியுரிமை கிடைக்கலையே, கொடுமை !
மாதவிஸ்ரீ பெற்றோர்கள் பிரிந்ததனால் ஐயோ !
மலேசியத்தில் வாழ்வதற்குத் தேவையென என்றும்
ஓதிவரும் குடியுரிமை கிடைக்கவிலை ; பெற்றோர்
உயர்வாழ்க்கை வாழவிலை என்றா அர்த்தம் ?
நாதியிலா அவலமின்று மாதவிஸ்ரீ பெறவே
நலிந்துவிட்ட அவர்பெற்றோர் உறவொன்றே சான்று !
ஏதிலிபோல் மாதவிஸ்ரீ போன்றபலர் நாட்டில்
இருந்துமிலா நிலையினராய் இருந்துழல்கின் றாரே !
பாட்டிவய தாகியதா ? மாதவிஸ்ரீக் கல்ல ;
பத்தொன்ப தாம்வயதில் வரக்கூடாத் துன்பம்
போட்டியிட்டே வந்ததவர்க் கென்றுரைக்க யாரும்
போட்டியிடத் தேவையில்லை ! அப்பெண்ணை இன்றே
ஆட்டிவைக்கும் துயர்தீர ஆனவற்றைச் செய்யப்
போட்டியிட்டே யார்வருவார் என்பதுதான் கேள்வி !
நாட்காட்டி நாள்நகரும் ; அதைமுந்தி உடனே
ஞாயமுடன்
குடியுரிமை தரவேண்டும் நாடு !?
வந்தேறி அல்ல
என்போம்
*****************************************************************************************
காணுங்கால் கலங்குதடா கண்கள் ; உள்ளம்
கசியுதடா ; உடலெல்லாம் எரிச்சல் ஏறிப்
பூணுதடா வியர்வைதனை ஆடை யாக !
பொங்குதடா கோபமெலாம் வியர்வை யாக !
நாணுதடா மலாயாவைத் திருத்தம் செய்து
நாகரிக நாடாக்கி மகிழும் நம்மைக்
காணுமிட மெல்லாம்வந் தேறி என்று
கருதிடுவார் ; கனன்றுரைப்பார் கண்ணி ழந்தே !
தமிழர்களே தொடக்கத்தில் வணிகம், தோட்ட
வடிவமைத்தார் ; சாலை,இரயில் நிருமா ணித்தார் !
அமைதியுடன் வெயில்,வந்த மழையின் போதும்
அயராமல் அமைத்தவராம் ! இதனைச் சில்லோர்
குமைந்தமனத் தோடிங்கே மறுக்கின் றாரே !
கொடுமையடா கொடுமையிந்த உண்மை தன்னை
நமக்கெதிரே கண்பார்க்கப் புதைக்கின் றாரே !
நாமிந்த நாட்டுக்கே நடுகல் ஆவோம் !
நடுகல்லை வணங்குதற்கு மாற்றாய்ச் சாலை
நடுவினிலே போட்டுமிதிக் கின்றார் ஐயோ !?
இடிகல்லில் கல்லிடிக்கும் செயலைப் போன்றே
இடிக்கின்றார் ; அதிலின்பம் காணுகின் றார் !
மிடுக்கோடும் மிளிர்வோடும் வாழ்ந்தே நாமும்
மேன்மக்கள் ; வந்தேறி அல்ல என்போம் !