பணிந்தோம்
சீர்மேவுந் தண்ணீர்மா மலைவாழும் தீரா
தினம்போற்றும் அடியாருள் இனிக்கின்ற வீரா
தேர்மேவி தைப்பூசத் திருநாளில் சூழும்
தீதொழிய அருளாட்சி செய்கின்ற சூரா
கார்மேவும் மழையெங்கும் உனதாட்சி கண்டோம்
கண்ணியத்தின் காவலாநின் புகழ்பாடக் கேட்டோம்
தார்மேவும் கடபாவுன் அருள்அமுதம் நாடித்
தண்மலரின் அடி தொட்டுச் சந்ததமும் பணிந்தோம்
திருப்பெற்ற திகழ்தண்ணீர் மலைவாழும் அழகா
தெளிந்தார்பொன் னுளம்மேவி ஒளிர்கின்ற குழுகா
உருப்பெற்ற நாள்முதலாய் உனைப்பற்றி நின்றோம்
உளம்பற்றும் பக்தியினால் உன்கோவிற் கண்டோம்
கருப்பெற்ற உயிரெல்லாம் உனைப்போற்று மிங்கே
கரம்பெற்ற பாக்கியமும் உனைவணங்கத் தானே
மருப்பற்ற திண்டோளார் மன்னவனே நாங்கள்
வளம்பெற்று வாழ்வேதற்கே உனதடியைப் பணிந்தோம்
வெற்றிக்கு வித்தான வெற்றிவடி வேலா
வித்தாரச் சிலம்பனுனைப் பாடுகின்றோம் 'ஐயா'
தொற்றுகின்ற வேதனைகள் தொடராமை வேண்டும்.
துதிக்கின்றார் தவசகிளுன் மெய்ப்புகழைக் காண
சுற்றிவரும் பசுப்போலத் தொடர்ந்தெம்மைக் காக்கும்
தோகைமயில் வாகனனே மனக்கோயில் வாசா
முற்றிவரும் பழவினையின் மாசகல வேண்டி
முத்தையன் சிலம்படி யே துணையென்று
பணிந்தோம்,