உண்மை கணக்கு!
உறங்கினாய்! நாளைநீ
விழித்திடுவாயா?
உறுதியாய்ச் சொல்லடா எனக்கு! - உலக
அரங்கத்தில் என்றேனும்
அழிந்திடுவாயே
அறிந்திடு வாழ்க்கையோர் விளக்கு!
பிறத்தலும் இறத்தலும்
உன்வசம்தானா?
பிதற்றலும் பீற்றலும் எதற்கு? - நீ
சிறப்பதும் பிறர்தயை
புரிந்ததனாலோ
சிந்தித்து இதயத்தில் நிறுத்து!
வரம்பெனும் ஒன்றைநீ
கொண்டிருந்தாயா?
வகையின்றி நீள்வதுன் இழக்கு!- எது
நிரந்தர மானதோ
கண்டிடுவாயேல்
நிம்மதி உன்விதி விலக்கு!
அறம்பொருள் இன்பமாம், வகுத்திருந்தாரே
அறத்திற்கேன் முதல்நிலை சிறப்பு? - நீ
இரக்கத்தின் சிகரமாய்
திகழ்ந்திடத்தானே
இன்னுமா உணர்ந்திட மறுப்பு?
பிறப்பவர் யாவரும்
இறப்பவர்தானே
பிறகென்ன ஆயிரம் பிணக்கு?- உன்
இறப்பையும் தாண்டி
நிலைப்பவைதானே
இருப்பவர் பார்த்திடும் கணக்கு!
தமிழணங்கு
முருகனெனும் அழகனவன் உறவை
வென்றாள் - என்
மூச்சியக்கிப் பேச்சுருவில் ஒலித்து வந்தாள்!
அருமைமிகு பொருட்செறிவால்
தனித்து நின்றாள் - சொல்
ஆட்சியிலே வேற்றுமொழிக்(கு) உருவம் தந்தாள்!
பெருகிவரும்
தொழில்நுட்பம் பழகிக் கொண்டாள் - புதுப்
படிவத்திற்கும் பேர்புகன்று மகிழ்வு கண்டாள்!
திருப்பம்தரும் உலகமய
திசையில் சென்றாள் - மிகச்
சிறப்புடனே இணையத்தளம் நிறைந்து நின்றாள் !
குறுகல்மனம் மிக்கவரைக்
கடிந்து நொந்தாள் - தாம்
குடியிருக்கத் தமிழ்ப்பள்ளி அணுகிச் சென்றாள்!
விருப்புடைய தக்கவரை
இணைந்து கொண்டாள் அவர்
வரும்படிக்கோர் வழிவகையும் வலிந்து தந்தாள்!
மெருகுடைய நாளிதழ்கள்
பதிப்பில் வந்தாள் - ஒலி
மிதந்து வரும் வானொலியின் படைப்பில் நின்றாள்!
மறுப்பறியா தேன்குறளின்
சிறப்பில் வென்றாள் - நல்ல
மதிபடைத்த சான்றோரின் பிறப்பில் வந்தாள்!
