மரபு தூறலின் குறிஞ்சி மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபு தூறலின் குறிஞ்சி மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் க. மணியம்


 

கவிஞன்

ஆழ்கடலில் முத்தெடுத்தல் போன்றே எண்ண
      ஆழ்கடலில் கருத்தென்னும் முத்தெ டுத்துக்
தாழ்வின்றி யழகோடு முத்துக் கோக்கும்
      தன்மையாளர் போல்கருத்து முத்தை முன்னோர்
ஆழ்ந்தறிந்(து) அமைத்திட்ட மரபு மாறா
      அமைப்பினிலே பாவாகக் கோத்து மாந்தர்
வாழ்க்கைக்(கு) ஏற்றபடி ஞாலத் தார்க்கு
      வழங்கிவரும் தொண்டனவன் கவிஞன் என்பான்!
 
பொன்தன்னைப் பலவிதமாய் அமைத்த மைத்து
      புதுப்புதுநல் உருவினிலே நகைகள் செய்து
பெண்ணுலகு போற்றிடவே நல்கும் மாந்தர்
      பொற்கொல்லர் போன்றேதன் கருத்துப் பொன்னை
வண்ணமுடன் புதுப்புதுநல் தன்மை சேர்த்து
    வான்புகழ்கொள் இலக்கியமாய் உருவொன் றாக்கி
மண்ணில்வாழ் மாந்தர்க்கு இன்பங் கூட்ட
      மாளாமல் உழைக்குமவன் கவிஞன் என்பான்
 
சீரான கரும்பரைத்துச் சாறு சேர்க்கும்
    திறத்தார்போல் சிந்தையெனுங் கரும்ப ரைத்துப்
பேருடைய கருத்துப்பா கொடுத்தே அச்சுப்
      பிழையறவே நன்காக்கி நல்கு மன்னான்
ஊருக்கு மத்தியிலே உடைய கேணி
      ஊற்றுப்போல் எஞ்ஞான்றும் பயனை நல்க
பாருக்காய் நற்பாக்கள் படைத்த ளித்துப்
      பண்பமைதி கொள்ளுமவன் கவிஞன் என்பான்
 
குடியோம்பும் நல்லரசன் செங்கோல் போன்றும்
      குழந்தைக்குத் தாயணைப்புக் குளிர்மை போன்றும்
செடிவளர வேண்டும்நல் உரத்தைப் போன்றும்
      சேயிழைக்குத் தன்னாளன் துணையைப் போன்றும்
கொடியோங்க உதவும்நல் மரத்தைப் போன்றும்
      குவலயத்தில் கிழவர்க்குக் கோலைப் போன்றும்
இடர்சூழந்த இவ்வுலக மாந்த ருக்கே
      இலக்கியத்தைத் தருந்தொண்டன் கவிஞன் என்பான்

கவிஞர் எஸ்.பி. செல்லையா


 

இதற்குத்தானா
 
மாலையிலே பூந்தோட்ட மரத்தின் மீது
      மகிழ்வோடு காத்திருப்பீர் மாங்கா யொன்றை
சேலையிலே மறைத்தவா றங்கு நானும்
      தெரியாமல் வந்திடுவேன்! கதிரோன் றன்னைக்
காலையிலே கண்டதொரு கமலம் போலக்
      களிப்போடு குதித்தோடி வருவீர்! அந்த
நாளையிலே நடந்ததெல்லாம் மறந்தீர்! என்றன்
      நலமெல்லாம் உண்டீரே இதற்குத் தானா?
 
கையோடு கைகோத்துக் கடலி னோரம்
        காற்றுமணற் பரப்பதனி லமர்ந்தோ மன்று
“மெய்யெல்லாம் மின்சாரம் தாக்கு துந்தன்
      மேனிதனைத் தொட்டவுடன்” என்று மெல்லக்
“கொய்யாவே! என்னின்பக் குமுதப் பூவே!
      கொல்லாதே” எனஉரைத்து மடியிற் சாய்ந்து
கொய்யாமற் கொய்தணைத்து இன்பஞ் சேர்த்துக்
      கொவ்வைஇதழ் சுவைத்தீரே! இதற்குத் தானா?
 
“காதலுக்குச் சாதியிலை! கலக்கம் வேண்டாம்
      கற்கண்டே! உனைப்பிரியேன்! நீதான் இன்றேல்
நாதமிலா வீணைநரம் பாகும் வாழ்வு
      நம்பிடுவாய்! இதுஉறுதி” என்றே சொல்லி
மோதுதிரை யன்னமனம் குளிரச் செய்து
      முகத்தோடு முகம்புகைத்து முழுமை இன்பப்
போதையெல்லாம் என்றனிடம் புகன்றீர்! பெண்மைப்
        பொருளெல்லாம் துய்த்தீரே! இதற்குத் தானா?
 
“குடித்தஉட னுயிர்போக்கும் விடமோ? இந்தக்
      கோதையவள் வெண்பற்க ளிடையி னூறல்!
தடித்தஉளக் குணமுடையார் பிரித்து வைத்த
       சாதிமதச் சூழ்ச்சியெலாம் பாறை மோதி
வெடித்துநனி சிதறுகின்ற அலையாம்! நந்தம்
        விருப்பந்தான் ஈடேறும்! அமிழ்தே” என்று
பிடித்துஉட லிறுகணைத்து வெறித்துப் பார்த்துப்
           பீடுண்டு சென்றீரே! இதற்குத் தானா?

கவிஞர் எம்.எஸ். அமிர்தவல்லி, பத்துப்பகாட்டு


 

இட்ட முத்தம் காயுதையா
 
போய்வருவே வொன்று சொல்லி
      போன திங்கள் போன மச்சான்
தேய் நிலவாய் நான் உருகி
      தினந்தினமும் எலும்பானேன்
 
நின்று நின்றுநிலை குலைந்தேன்
      நிம்மதியை நானிழந்தேன்
அன்றாடம் உம் நினைப்பு
      அலைக்கழிக்கத் துரும்பானேன்
 
கல்ல மலர் தொடுத்தெடுத்தேன்
      நறுமணமும் வீசவில்லை
உன்னமதில் உம்மையன்றி
      ஓருருவம் தெரியவில்லை
 
நம்பியிங்கு இருக்கின்றேன்
      நாளுந்தான் செல்கிறது
தெம்பின்றி தேம்புகின்றேன்
      தேற்றுதற்கு யாருமில்லை
 
பஞ்சணையும் காத்திருக்க
      பாவையுடல் வாடுதையா
எஞ்சிய நன்னாட்களெல்லாம்
      ஏக்கத்தால் தேயுதையா
 
கன்னத்தில் இட்ட முத்தம்
      காற்றிவிலே காயுதையா
எண்ணத்தை எழுதிவிட்டேன்
       எனைத்தேடி வாருமையா

************************************************************************************

நேரு வாழ்வே நிலையான காவியம்!
 
மனிதகுலப் பிணிமூப்பு இறப்பைக் கண்டு
      மாற்றும்வழி அன்பென்று உரைத்த புத்தன்,
இனியதோர் அன்புநெறி உரைத்தும் தீயோர்
      இன்னலினால் உயிர்நீக்க இயேசு நாதர்,
புனிதமுடன் மக்கட்குலம் வாழ எண்ணிப்
      புல்லர்களால் அல்லலுற்ற நபிகன் மற்றும்
மனிதகுலத் தெய்வங்கள் பெயரைப் போல
      மண்ணுலகில் நேருபுகழ் அழியாச் செல்வம்!
 
முல்லைக்குத் தேர்கொடுத்து மக்கள் நெஞ்சில்
      முறையாக இடம்பிடித்த பாரி போல,
பொல்லாத குனிராலே மயிலும் ஆடப்
      போர்வைதனைப் போர்த்திவிட்ட பேகன் போல
நல்லதொரு கருநெல்லி கிடைக்கப் பெற்றும்
      நற்றமிழ்த்தாய்க் குவந்தளித்த அதிக மான்போல்
எல்லையற்ற காலம்வரை நேரு வாழ்வை
      இலக்கியத்தின் வரிசையிலே உலகம் ஏற்கும்!
 
உணர்வுக்கு விழிப்பூட்டி மக்கள் வாழ
      உயிர்மாய்க்கும் நஞ்சுண்ட சாக்ர டீசும்
இனவெறியின் கொடுமைதனை அழிக்க வெண்ணி
      இறப்புலகிற் கேகிவிட்ட லிங்கன் மற்றும்
மனமகிழத் தன்னாட்டில் அன்பைப் பாய்ச்சி
      மரணத்தை அரவணைத்த காந்தி வாழ்வும்
உரைக்கின்ற காவியமாய் உலகம் ஏற்கும்!
 
தன்னலத்தை உதறிவிட்டு மக்கட் காகத்
      தரணிதனில் வாழ்ந்துவந்த நல்லோன் வாழ்வும்
எண்ணத்தை எழுத்தாக்கி மக்கன் நெஞ்சில்
      இடம்பிடித்து வள்ளுவன்போல் இருந்த பேரும்
பொன்னான நன்னெறியை பேணிக் காத்துப்
      புதுமைநெறி காத்திங்கு வாழ்ந்த தூயோர்
தன்னுடலைத் தன்பொருளை உயிரை இந்தத்
        தரணிக்கே அளித்தவர்க்கு இறப்பே இல்லை!

கவிஞர் உ.க. அப்துல் ரஹ்மான்


 

பாருள்ளவரை வாழ்வாய்
 
பொதிகை மலையில் பிறந்து
      பூவுல கெல்லாம் பரந்து
மதுரைப் பதியில் இருந்து
      மன்னர் பலரால் வளர்ந்து
மதிபோல் உலகில் ஒளிர்ந்து
      மாறா இளமை கொண்டு
சதியால் அழியா உருவாய்த்
      தனித்தே இயங்கு கின்றாய்
 
உலகில் மொழியின் முதலாய்
      உதித்தாய் உன்னின் பெருமை
அழகில் எழிலில் உயர்ந்தாய்!
      அழிய கலைகள் தந்தாய்!
பலனில் பயனில் சிறந்தாய்
      பாரில் மேலும் மிளிர்ந்தாய்
நிலத்தில் நீதி தந்தாய்
      நெஞ்சில் ஓவிய மானாய்
 
உடலும் உயிரு மானாய்
      உள்ளும் புறமும் ஆனாய்
கடல்சூழ் உலகம் போற்றும்
      கவின்மிகு குறளா மானாய்
மடலும் மணமும் போல
      மணியும் சிலம்பும் தந்தாய்
அடைவைத் தந்தாய் மேலும்
      அறிஞர் பலரை ஈந்தாய்
 
அன்னியர் நின்னெழில் கண்டே
      அன்புடன் அரவணைத் துன்னைப்
பொன்னெனப் புகழ்ந்து போற்றிப்
      புகுத்தினர் தம்மின் மொழியில்
கன்னியே நின்றன் உயர்வைக்
      காசினி புகழு தம்மா!
உன்னிலும் உயர்ந்து காணும்
      ஒருமொழி கண்டா ருண்டோ?
 
நந்தா ஒளியை வீசும்
    நற்றமி ழேயென் தாயே!
உன்றன் பெருமை கூற
      உயர்வில் சிறியேன் யானே!
சிந்தை மகிழ்ந்தே உந்தன்
      சீர்மிகு தாளைப் பணிந்தேன்
பைந்தமிழ்த் தாயே நீஇப்
       பாருள் ளவரை வாழ்வாய்!

*************************************************************************************

சித்திரக் கலையே! யாண்டும் வாழ்கவே!
 
ஆசைக் கரும்பே அல்லிப் பூவே
      அழகுத் தமிழே அன்பின் வடிவே
வீசும் காற்றே விளையும் பயிரே
      வித்தக மணியே இரத்தினச் சுடரே
பாசம் பொங்கும் ‘ஹாரூன்’ மகனே
      பச்சைக் கிளியே பனிமலர்த் தேனே
நேச அன்னை ரமலான் அஜினா
      நித்தம் முத்தும் ‘சமருதீன்’ கனியே
 
பாண்டியன் நாட்டில் பிறப்பை விடுத்தே
      மலையக மண்ணில் பாதம் பதித்தாய்
காண்போர் வியக்கக் கண்ணைப் பறித்தே
      கைகள் கொட்டிக் கவினிதழ் விரித்தாய்
ஆண்டும் ஒன்றாய் அகவை செல்ல
      அகமே நிறைந்தோம் ஆருயிர்க் கோவே
தேன்மழை பெருகும் திருவாய் சிந்தித்
      திகழும் உருவே! சித்திரக் கலையே!
 
உயர்ந்து வளர்ந்து ஒண்கலை பயின்று
      ஓதும் ‘குருஆன்’ உண்மை உணர்ந்து
நியமம் அறிந்து நேர்மை புரிந்து
      நித்தம் ‘கலிமா’ சத்தில் மிதந்து
பயன்தரும் ‘மார்க்கம்’ இசுலாம் காத்து
      பாரத மெங்கும் தீன்னெறி விதைத்து
இயக்கும் அன்னை தந்தைசொல் கேட்டு
      இறையருள் பெற்று யாண்டும் வாழ்கவே!  

கவிஞர் இரா. வீரப்பன்


 

தமிழ்த்தொண்டு

தென்றல்
தென்றலே! நீயும் சுகத்தினை யூட்டத் தென்றிசையில் நின்று வருவதேன் நித்தமும் அன்புடன் நீள்புவிக்கு? என்றும் தமிழமு துண்டிடின் இன்பென, இப்புவியில் கண்டனைக் கொல்லோ களிப்புடன் தென்றிசை கொண்டனையோ!
 
மலர்
சித்திரப் பூவே! சிரிப்பொடு நின்றுநீ தென்றலிலே நித்தமும் ஆடி மகிழ்ந்திடும் வேளையில், நின்மணத்தை இத்தரை மீதினில் எங்கும் பரப்பிடும் எண்ணமுமேன்? தித்திக்கும் செந்தமிழ் சேர்ந்திட்ட நன்மணம் செப்புதற்கோ!
 
வண்டு
வண்ண மலரினைத் தேடியே சென்றிடும் வண்டினங்காள்! சின்னஞ் சிறிய சிறகை விரித்துமே செல்வதெல்லாம் வண்ண மிகுமலர்ச் சோலையில் வந்துறை காதலர்க்குப் பண்ணும் இசைத்துப் பழந்தமிழ் மாண்பைப் பகருதற்கோ!
 
மாலை
மண்ணிசை தோன்றிநல் வானுற வோங்கிய மாமலையே விண்ணைக் கிழித்திடும் தன்மையில் நின்றுமே மேதினியில் கண்ணைக் கவர்ந்திடும் மேகத் திரளினைக் காலடியில் கொண்டு குவித்தலும் தண்டமிழ்த் தன்திறன் கூறுதற்கோ!
 
கடல்
அல்லும் பகலும் அலுப்பு மிலாமலே அம்புவிக்குச் சொல்லும் மொழியாதோ? சொல்லிடு வாய்நீ திரைக்கடலே! கல்லும் கவிதைகள் பாடும் பெருமையைக் கற்றுமேநீ வல்ல தமிழ்மொழி மாண்பினைச் சொல்லும் வளர்பணியோ
 
குயில்
கங்குற் கருங்குயி லே! தமிழ் கற்றுக் களிப்புடனே சங்க இலக்கியம் தந்திடும் இன்பினைச் சாற்றிடவும் எங்கும் பறந்துநீ இப்புவி தன்னில் இசைத்தமிழைப் பொங்கிடும் ஆவலால் நிண்றுப் பணிசெயப் போந்தனையோ!
 
மயில்

மயிலே! வளர்தமிழ் மாண்புறக் கற்றுநீ, மாநிலத்தில் ஒயிலாய் நடந்திட ஒண்டமிழ்க் கூத்தும் ஒழுங்குடனே பயின்று நடமிடும் பண்பினில் தேரிய பான்மையினால் இயலிசை விட்டுநீ இன்றமிழ்க் கூத்துக் கிசைந்தனையோ!
 
கிளி
‘மங்காத் தமிழ்மொழி மாசறக் கற்றுநீ வையகத்தில் எங்கும் பரப்பிட ஏற்றம் பெறவிலே’ என்றுபலர் ‘பங்கம் அடைந்திடும் பைந்தமிழ்’ என்றுமே பைங்கிளியே! சங்கப் புலவரும் சாற்றினர் ஆயினும், தாழ்ந்தனையோ!
 
மங்கை
வண்டமிழ் வாழ்வு வளமுடன் கண்டு மகிழ்வுறவே கொண்ட இயலிசை கூத்தெனும் முத்தமிழ் கூட்டுவிக்கும் கெண்டை விழிநிகர் மாதர் அணைப்பிலே ஆடவரும் கண்டு மகிழ்ந்திடச் செய்வதும்; மாத்தமிழ் காட்டுதற்கோ!

கவிஞர் ச. கணேசன்


 

கவிதைப் பெண்

செங்கதிரும் ஆழ்கடலும் சேருகின்றநேரம்
    தித்திக்கும் ‘பா’கேட்டேன் செந்தமிழின் சாரம்
பொங்கிவரும் கடலிடையே பூமடந்தைப் பெண்ணாள்
    பொருதிவந்தாள் வீணையோடு காவிபடர் கண்ணாள்!
 
குங்குமத்து நிறமுடையாள் குமரியவள் வீணை
     கூட்டிவரும் கிறுகிறுப்பால் கூறிவிட்டேன் ஆணை!
எங்கடிநீ கற்றுவந்தாய் இத்தனையு மென்னை
     விஞ்சியது தழுவிடடி ஏந்நெஞ்சு தன்னை
 
நெஞ்சினிக்கக் கருத்துணர்த்தும் நெரிழையாள் பேச்சு
     நாளெல்லாம் கேட்டிருப்ப தென்வேலை ஆச்சு
கொஞ்சுதமிழ் நற்கவிதை கூறுமுறை கண்டேன்
     கூறுமொழி கேட்டஅன்றே குலஉறவு கொண்டேன்!
 
அஞ்சலில்லை செங்கதிரோன் ஆழ்கடலில் மாய்ந்து
      அடையுமிருள் கவ்விடினும் அறிவொளியிற் பாய்ந்து
வஞ்சமற்ற நீதியூட்டும் பைந்தமிழை யாத்து
      வளர்கதமிழ் மக்களென வாழ்த்திடுவோம் வாழ்ந்து!

கவிஞர் செ. சடாச்சரம்


 

அன்னை

அன்புடனே வாஞ்சையுட னழகு செய்வார்
    அயலார்’கண்’ பட்டுவிட்டா லய்ந்து போவார்
கண்ணுறங்கத் தாய்மொழியில் கவியி சைத்துக்
    கவினழகுத் தாலாட்டால் கற்றுக் கொடுப்பார்
மன்பதையில் அவர்காட்டும் வாஞ்சை யன்பை
     மறந்துவிட முடியாது; நிலைத்து நிற்கும்!
தன்சுகத்தைத் துறப்பதற்குத் தயங்கி டாது
    தன்னுழைப்பைப் பிறர்க்களிப்போர் அன்னை யன்றோ!
 
தாய்பிரிந்த பசுக்கன்று தனித்துச் சென்று
    தன்தாயின் நிலைபற்றி யெண்ணிப் பார்க்கும்
தாய்பிரிக்கும் மனுக்குலமோ தனியே போகும்!
     தரங்கெட்டே அன்னையரைத் தாழ்த்திப் பேசும்!
வாய்வீரம் மிகவுண்டு பயன்தா னில்லை
     வளர்த்துவிட்ட தாய்தன்னைப் பழிக்கும் தாழ்த்தும்
தாய்போலும் மாசுகளைச் சகிப்பா ருண்டோ?
      சமத்துவத்தைப் புசுட்டுபவர் அன்னை யன்றோ!
 
நதிபோலும் தாயன்பு நன்றே செய்யும்!
    நல்லவராய் வாழவழி நடத்திச் செல்லும்!
மதிபோலும் தாய்ப்பாசம் வளர்ந்து வாழும்
     மதிக்காத மக்களையும் மகிழ்ந்து வாழ்த்தும்!
 நிதிகொடுக்கும் வாழ்க்கைபோல் நீர்மை வாழ்வு
      நிறைசுகமாய் வாழ்வதற்கு நீண்ட ஆயுள்
அதிபதியாய் முன்னின்றே அளித்துக் காக்கும்
      ஆதிமுதல் தேவதைநம் அன்னை யன்றோ!
 
பெற்றெடுத்து நன்முறையில் பேணிக் காத்துப்
    பிள்ளையைநல் லறிஞனாக வீர னாக
கற்றநல்ல புலவனாகக் கவிஞ னாக
     கலைஞனாகத்  தியாகியாக வளர்த்து விட்டே
உற்றார்க்கு மற்றார்க்கும் உதவி செய்தே
     ஊர்புகழப் புதினமான வுலகைக் காணும்
விற்பன்னர் போற்சமைத்து விட்டுச் சென்றார்
    வெற்றிகொண்டோர் தம்பணியில் அன்னை யன்றோ! 

கவிஞர் ப. முகம்மது அபூபக்கர்


 

நிலை என்று மாறும்?

தித்திக்கும் தேனாகத் திகழ்கின்ற நல்ல
    செந்தமிழின் பெருமாண்பு சீர்நிலவு போல
எத்திக்கும் ஒளிவீச இன்னுழைப்பை நல்கி
    இனியபுகழ் சேர்த்திட்ட என்றமிழன் இன்று
தித்திக்கும் தேன்தமிழின் சீர்மைதனை மறந்து
    சிறப்பற்ற வேற்றுமொழித் தோட்டத்தில் மூழ்கி
புத்திக்குப் பொருந்தாத போக்கினிலே ஆழ்ந்து
     பொற்பின்றி வாழ்கின்ற புரைஎன்று மாறும்?
 
இப்பாரில் எங்கணுமே இலங்குகடல் அன்ன
      எத்திசையும் போற்றிடவே எழில்வாழ்வில் மின்னி
ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமே இன்றி
       உலகுதனை ஆண்டிட்ட ஒண்டமிழன் இன்று
செப்பதற்கு முடியாத சீரழிவைப் பெற்றுச்
       சிங்கமெனத் திகழ்ந்திருந்த தீரமெலாம் அற்று
கொப்பற்ற மரம்போலக் கொண்டகளை இழந்து
       கூலிகளாய் வாழ்கின்ற குறைஎன்று மாறும்?
 
நல்லவள மெல்லாமும் நயமாகப் பெற்று
     நலிவேது மில்லாது நன்முகிலைப் போல
அள்ளியள்ளிக் கொடுக்கின்ற அரும்வள்ள லாக
     அவனியிலே வாழ்ந்திருந்த ஆய்தமிழன் இன்று
வல்லமையை இழந்துபெரும் வறுமையினால் இன்ப
     மணமிழந்து, திருவிழந்து, மாண்பிழந்து யாரும்
எள்ளுகின்ற கீழ்நிலையில் எளியோனாய்ச் சற்றும்
    இன்பமின்றி இருக்கின்ற இழிவென்று மாறும்?
 
கண்ணெனவே ஒளிர்கின்ற கல்வியதை நாளும்
     கன்னலது சாறாகக் கருத்தோடு பருகி
மின்னுகின்ற முத்தாக மேதினியில் யார்க்கும்
      மேலாக விளங்கிட்ட மேன்மையுறு தமிழன்
தின்மைதரும் கள்ளருந்தி தேசற்று வாழ்வில்
       தேய்ந்துவிட்ட பித்தளையாய்த் திரிந்துழன்று சற்றும்
வண்மையின்றி, வாய்மையின்றி, மாட்சியின்றி அன்பு
         மனமின்றித் தாழ்ந்திருக்கும் மறுவென்று மாறும்?
 
நாகரிகக் கலைகளது நறுமணத்தை இந்த
     நானிலத்தார் அறியாத நாளினிலே ஞான
சாகரம்போல் தானிருந்த தரணியிலே நல்ல
     சால்புதனை வளர்த்திட்ட தண்டமிழன் இன்று
வாகழிக்கும் தீமைமிகு மடமையிலே ஆழ்ந்த
     மருள்சேர்க்கும் இருளென்னும் வாவியிலே மூழ்கி
நீகமென வெளிஉலகை நினையாதா னாக
     நீர்மையின்றி வாழ்கின்ற நிலைஎன்று மாறும்

கவிஞர் ம. சு. அண்ணாமலை


 

தாயுள்ளம்

ஒருகணம்
பள்ளிக்குச் சென்றுவந்த மூத்த பிள்ளை
    பசிக்குதம்மா சோறென்று வயிற்றைக் காட்டும்
கொல்லையிலே ஒருபின்னை அப்பாவைப் போல்
    கொத்துதற்கு முனைந்துதன் காலை வெட்டும்
இல்லாத ஒருபொருளுக் காசை வைத்தே
    எனக்கென்று ஒருபிள்ளை அடம் பிடிக்கும்
வள்ளுவர்க்குப் பிள்ளையில்லை அதனா லவரும்
    வாயாரப் புகழ்ந்துவிட்டார்; இதுவா செல்வம்?
 
மூத்தவளை இளயவளும் பிடித் திழுத்து
    முதுகினாலே அடிகொடுத்த அழுகைக் கோலம்
சாத்திவைத்த நிலைப்பேழை திறக்க வெண்ணி
     தன்மேலே நடுட்பிள்ளை சாய்த்துக் கொள்ளும்
பார்த்திருந்து நான்வைக்கும் பொருளை யெல்லாம்
     பங்கிட்டு நாலைந்து தினியா யுண்ணும்
ஊரடக்கி வாழ்ந்திடலாம் குறும்புப் பருவம்
     உருவெடுத்தால் பெருந்தொல்லை; இதுவா செல்வம்?
 
                 மறுகணம்
 சோறென்று சொல்லுதற்குத் தெரிய வில்லை
    ‘சோச்சிதா’ என்றுஒரு மகவு சொல்லும்
பாரம்மா ஆசிரியர் எனக்குச் சொன்ன
     பாடலென ஒருபிள்ளை பண் ணிசைக்கும்
ஊர்மக்கள் ஒருமுகமாய்ப் போற்றி வாழ்ந்த
    ஒருசெல்வம் மேடையிலே முழக்கஞ் செய்யும்
பாரீனிலே குழந்தையைப்போல் செல்வ மில்லை
    பட்டுடலீன் கிள்ளைமொழி கொள்ளை இன்பம்
 
சிறுநடையால் ஒருபிள்ளை அழகு கூட்டும்
   சிரிப்பாலே மற்றொன்று கொஞ்சை யள்ளும்
அருஞ்செயலால் ஒருசேயும் அன்பைச் சேர்க்கும்
   அணைப்பாலே சிறுமழலை இனிமை யூட்டும்
நரைபடிந்த அப்பாவைப் போல ஒன்று
    நடித்தென்றன் முகத்தோடு முகம் பதிக்கும்
கருவிழியால் வையத்தை எனக்குக் காட்டும்
    கலைச்செல்வம் என்சேய்கன் கொள்ளை இன்பம்

******************************************************************************************

மலைநாடு

அலைகடல்கள் முத்தமிடும் அழகுமலை நாடு – நல்ல
     அரசுபல இணைந்ததெங்கள் அருமைமலை நாடு
மலைகளும் கடல்தழுவும் மாண்புமலை நாடு – பல
     மக்களொன்றாப்க் குரலெழுப்பு இன்பமலை நாடு.
 
பன்மொழிக்கு உரமளிக்கு பசுமைமலை நாடு  - இந்தப்
     பார்புகழத் துலங்குகின்ற பான்மைமிகும் நாடு
வன்செயற்கு இடமளிக்கா வன்மைமலை நாடு – எழில்
    வான்சிரித்து மழையுதிரும் வறுமையிலா நாடு
 
வீரர்பலர் வாழ்ந்திருந்த வேங்கைமலை நாடு – தீப
    வேற்றுமைகள் சிறிதுமிலா விரிந்தமன நாடு
திரமுடன் பகையொழிக்கும் திண்மைமிகும் நாடு – பல
    தேசமக்கள் புகழ்ந்துரைக்கும் சிந்தைகவர் நாடு.
 
நாட்டுப்பற்று நிறைந்ததிந்த நல்லமலை நாடு – வெளி
    நாட்டவர்க்கும் வாழ்த்துரைக்கும் நாகரீக நாடு
தீட்டும்நல்ல திட்டமெல்லாம் செயல்படுத்தும் நாடு – உயிர்
     தேசப்பற்றில் தலைசிறந்த தெய்வீக நாடு.

மதபேதம் சிறிதுமின்றி மகிழ்ச்சிபொங்கும் நாடு – நல்ல
   மக்களினால் ஆளப்படும் மாட்சிமிகும் நாடு
இதமுடனே கோயில்பல எழும்பும்திரு நாடு – தூய
    எழுச்சிமிக்க அமைச்சர்களை ஏந்திநிற்கும் நாடு.
 
பள்ளிபல கட்டுகின்ற பரந்தமலை நாடு – நீயும்
   படித்தறிந்து நாடுயரப் பாடுபட நாடு
உள்ளமதில் நல்லசெயல் உயர்ந்திடவே நாடு – அருள்
    உத்தமர்கள் நிறைந்துதான் உண்மையான நாடு.   

கவிஞர் மு. இராமன்


 

வென்றிசேர் குமரன் ...விளங்குபுகழ்த் தொண்டன்!
 
செந்தா மரைத்தவிசில் சீரா யமர்ந்தருள்செய் திருமா மகள் அருளினால்
     செழூமைவள மொளிருபிறை நகரிற் பிறந்தனன் செம்மை யறம்புரியவே
பைந்தா துகும்மலரின் மணமா யருட்பணிகள் பண்ணுமுயர் கருணாகரன்
      பண்பாரம் மாக்கண்ணு வுடனென்றிப் புரிந்திட்ட பயன்தவத் துற்றசெழியன்
நந்தாத நெஞ்சோடு கல்வியே கண்ணாக நாடிப் பயின்றபுதல்வன்
      நற்றமிழ் ஆசிரிய னாகியே போதித்த நல்லகுரு நாதனிவன்காண்
கொந்தார் மலர்க்குழலி குணப்பேழை வசந்தாவைக் கோணாது கரம்பற்றியோன்
      குழவுதமிழ்ப் பண்பாளன் குமரனெனும் பெருந்தொண்டன் குவலயந் தனிலுய்கவே! 
 
உதிக்கின்ற செங்கதிரின் ஒளியன்ன துடிப்போடு உயர்பணிக ளாற்று தலைவன்
    ஒப்பற்ற தமிழ்த்தொண்டு புரியுமிவன் அரசியல் உயர்வான நிலவாகியோன்
கதிக்கின்ற தாளாண்மை சமுதாய நுடம்போக்கும் கண்ணியக் கடமையுடையான்
    கவிவாணர் தமக்கெல்லாம் இனிக்கின்ற சுவைப்பாகு கலைக்கொண்டால் தமிழ்த்தென்றலாம்
மதிக்கின்ற பெரும்பண்பு மலையாத தமிழ்நெஞ்சு வைரத்தின் ஒளிபோன்றவன்
     வளையாத நெறியாளன் அரிவாளார்க் குபகாரன் வற்றாத தமிழ்ப்பண்பினன்
நிதிக்குவையை உருவாக்கி இந்தியர்தம் துயர்போக்க நெடுஞ்சேவை யாற்றுதலைவன்
     நெஞ்சாரப் போற்றதும் குமரனெனும் அறத்தென்றல் நீளகவை யுடன்வாழ்கவே!
 
தொண்டர்க்குத் தொண்டனாய் தொழிலாளர் தலைவனாய் சுவைத்தமிழின் ஆசிரியனாய்
    சுயநலந் துறந்தபெருந் தியாகத்தின் செல்வனாய் துய்யதமிழ்ப் பேச்சாளனாய் 
எண்டிசையும் புகழோங்கும் ம.இ.கா. தலைவனாய் எழில்கொஞ்சம் பேராவிலே
    ஏற்றமாய் சட்டமன் றத்திலோர் உறுப்பாகி இசைப்பணிக ளாற்று பொழிலாய்
வென்றிசேர் குமரனாய் விளங்குபுகழ்த் தொண்டனாய் மேவுமுயர் அருளாளனாய்
    மெய்ப்பணிக ளாற்றியே பொன்விழாக் கண்டபெரும் வித்தகச் செழுஞ்செம்மலே
அண்டிவந் தோர்க்குற்ற துணையான வள்ளலாய் அடக்கமுயர் பொறைமிக்கவா
    அண்ணலாய் நீவாழ்க நூறாண்டும் அதன்மேலும் அளப்பரிய புகழ்சூழவே!

கவிஞர் வீ. கே. சுப்பிரமணியன்


 

செம்மைச் சான்றோர்
 
ஆன்றமை நுண்மாண் நுழைபுலத் தறிஞர்
தேன்தமிழ் பெருமொழி சிக்கற வாய்ந்தோர்
ஆங்கில மிந்தி ஆரியந் தெலுங்கொடு
பாங்குசால் மொழிபல பயின்றுணர் பெற்றியர்
தேவதே தாந்த விரிபொருள் அனைத்தும்
ஓதி யுணர்ந்த ஒல்காப் புகழினர்
வில்வாள் வேலொடு சிலம்பு மல்லகம்
தெள்ளறப் பலகலை தேர்ந்த வித்தகர்
வானூல் புவிநூல் மருத்துவக் கலைநூல்
கோணா லறிந்த குரவருட் குரவர்
அன்பும் அமைதியும் அடக்கமும் அருளும்
என்பும் பிறர்க்கீந் துவந்திடும் பெற்றியும்
சான்றோண் மையொடு சால்பும் ஒழுக்கமும்
வான்றோய் மலையென வாய்ந்த வாய்மையர்
தென்னகம் வடவகம் திருமலைத் திருவகம்
முன்னிய பர்மியம் மீப்புக ழீழம்
இன்னும் பலநா டிருந்திடுந் தமிழர்கள்
பொன்போற் போற்றுபு பொருந்திய தொண்டர்
அறிஞர் புலவர் ஆர்பத மற்றோர்
தெரிஞர் தெரியா ரெவர்க்கு முதவுவோர்
தொண்டர் தமக்கெலாந் தொண்டராய் நிற்போர்
தண்டமிழ்ப் புலமைத் தனிச்சிறப் புடையோர்
செந்தமிழ்ச் செல்வச் சிவராம தாசர்
விந்தைகாண் அவர்தம் மேன்மையுந் திறமும்
அந்தணர்க் கந்தணர் ஆருயிர்க் கிரங்கி
செந்தண்மை ஓம்புஞ் செழுந்தவப் பெரியோர்
நலமிகு இறையடி நாளும் நாளும்
உளமகிழ் வோடு உணர்ந்து போற்றுவோர்
மாமலை நாட்டின் மாண்புறு மாமணி
தேமொழி ராம தாசரெங் குருவே!
             வேறு
விண்மிசை இருவரும் உடுத்திர ளிடையே
    விளங்கிடு முழுமதி போலும்
எண்ணருங் கலைசால் இலக்கியத் தூடே
    இணையிலாத் திருகுறள் போலும்
கண்ணினுஞ் சிறந்த தமிழ்நல மோம்பும்
    களிதமிழ்ப் பாவல ரேத்துந்
தண்ணிய குணத்து மாண்புசால் ராம
     தாசரென் றுரைத்திடல் சால்பே!

 கவிஞர் வீ. மாரியப்பன்


 

சாவே வா!

மலர்மலரு மென்றெண்ணி மலர்ச்செடியை நட்டு
   மலரும்வரை நீர்வார்ப்பான்; மலரவிலை யென்றால்
உளமொடிந்தே அச்செடியை உருவழிப்பான்! என்றும்
   உதவிடும்நற் காய்கறிகள் செடிநட்டு வைப்பான்!
உலகினிலே மனிதனாய் உருவெடுத்தேன்; ஆனால்
    ஒன்றுக்கு முதவாத எட்டிக்கா யான
நிலையறிந்தும் ஏனென்னை வாழவிடு கின்றாய்?
    நெருங்கியெனை அணைப்பதற்கே இன்னேவா சாவே!
 
என்னாலும் இவ்வுலகிற் கேதேனும் நன்மை
     ஏற்படலா மென்றெண்ணி விடுத்தாயோ என்னை?
மண்வீடு கட்டிவிளை யாடுஞ்சிறு பிள்ளை 
     மண்வீட்டாற் பயனில்லை என்றறிந்து கலைத்துச்
சென்றிடுமே! அதுபோல மண்வீடாய் என்னைச்
      சீருலகில் ஆக்கிவைத்தாய்! என்னாலே ஏதும்
நன்மையிலை என்றறிந்தால் அழிப்பதுதான் நீதி!
       நானுன்னை விரும்புகிறேன் இன்னேவா சாவே!
 
வறியோரின் நிலையுயர்ந்த வகையில்லை! என்றன்
     வாழ்க்கையினை வளப்படுத்த வழியில்லை! துன்பம்
பெருகியெனைத் தினருந்தினமும் பேய்போல ஆட்டப்
     பித்தனைப்போல் திரிகின்றேன்; பெருக்குகிறேன் கண்ணீர்!
பொருளற்ற பாட்டானேன்! திருவற்ற வாழ்க்கை
      பொங்கியெழும் அலைகடலில் சிறுதுரும்பாம்! உன்னை
விரும்பித்தான் அழைக்கின்றேன்; வேகமுடன் என்றன்
      வேதனையைத் துடைத்துவிட இன்னேவா சாவே!
 
அன்புவழி காட்டியநல் புத்தனைநீ கொண்டாய்!
     அறநெறியைப் பரப்பிட்ட காந்தியைநீ கொண்டாய்!
இன்பவழி காட்டிட்ட ஏசுவையுங் கொண்டாய்!
    இருளகற்றி வாழ்ந்திட்ட நபியினையுங் கொண்டாய்!
நன்னெறியைத் தந்தவராம் வள்ளுவனைக் கொண்டாய்!
     நலிந்தாரின் துயர்துடைத்த லிங்கனையுங் கொண்டாய்!
வன்னெஞ்சக் கூற்றேநீ நல்லாரை விட்டு
     வாழ்வற்ற என்னைக்கொள்ள இன்னேவா சாவே!
 
கனிஈயாத் தருவாகக் காசினியில் வாழ்ந்து
    கடைநிலையில் உழலுமெனைக் கண்ணெடுத்துப் பார்த்துக்
கனிவுடனே உன்கொடிய கைகளினால் என்னைக்
    கணமும்நீ தயங்காது நசுக்கிடுவாய்! அண்டத்
துணிவிலையோ உன்றனுக்கு? தூ! தூ! தூ! வெட்கம்
    துன்பத்தீ வாட்டுவதால் துடிக்கின்ற புழுவாய்
இனியும்நான் இவ்வுலகில் ஏற்றக்கு வாழ?
     என்னாறவை நீகொள்ள இன்னேவா சாவே?

  கவிஞர் வெ. ஆறுமுகம்


 

இயற்கையில் ஏழைமை! 

முகில் 
பஞ்சென்றால் அதன்வண்ணம் வெண்மை நண்பா! 
    பாரறிந்த உண்மையிது! நாமும் கண்டோம் 
பஞ்சினிலும் கரும்பஞ்செ னவொன் றுண்டு 
    பரந்திட்ட வான்வெளியில் பறத்தல் போல
விஞ்சுபுகழ் வான்தவழும் திரளைக் கண்டால் 
    விசும்பென்பாய்! விசும்பன்று! என்னைக் கேட்டால் 
கஞ்சியதும் கிட்டாத தாலே வந்த 
     கடும்பசியால் கருகுகின்றேன் முகந்தா னென்பேன்    
 
இடி 
சிங்கள்கள் பலவெழுந்தே ஒன்றாய்க் கூடிச் 
    சீற்றமுற் றெழுப்புகின்ற முழக்கம் போன்றும் 
கங்குல்நிறப் பெருங்களிற்றுக் கூட்ட மொன்று 
     கடாதிர முழக்குகின்ற பிளிறல் போன்றும்  
எங்கிருந்தோ ஒலிக்கும்பே ரொலியைக் கேட்பின் 
     இடியென்பாய்! இடியன்று! என்னைக் கேட்டால் 
வெங்கனலில் வீழ்ந்துழைத்தும் பொருள்கிட் டாது 
    விம்முகின்ற ஏழையுள்ளக் குமுற லென்பேன் 

மின்னல்
மாற்றாரைக் கொன்றழிக்கக் களத்திற் பாய்ந்து 
    மாவீரன் சுழற்றுகின்ற கூர்வாள் போலும் 
வேற்றோரின் மதிமயக்கும் எண்ணங் கொண்டு 
    வெய்ந்தோளாள் வீசுகின்ற விழிகள் போலும் 
தோற்றுகின்ற வானத்தில் ஒளியைக் கண்டு 
     தோன்றுதடா மின்னலென்பாய்! என்னைக் கேட்டால் 
ஆற்றாத ஏழைதினம் வயிற்றுக் கொன்றே 
      அலைந்ததனால் முகம்பெற்ற கோடே யென்பேன்
 
மழை  
வானமெனும் பேரணையில் பிளவேற் பட்டு 
     வடிகின்ற பெருவெள்ளப் பெருக்கோ என்றும் 
மானமெலாம் இழந்துபட்ட நன்மைக் கண்டு 
      வானத்தாய் சொரியுங்கண் ணீரோ என்றும் 
மாணவரே மகிழவரும் நீரைக் கண்டால் 
       மழையென்பாய்! மழையன்று! என்னைக் கேட்டால்   
பேணாத குழந்தைகளும் பசியால் வாடும் 
       பெருந்துயரால் கலங்குமேழைக் கண்ணீ ரென்பேன்

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...