இன்ப வழி
அன்பும் அறமும் உலகத்தில்
ஆகப் பெரிய பண்புகளாம்
வன்பும் வெறியும் வெகுண்டோட
வழியைக் காட்டும் நன்மைகளாம்
கண்போல் இவற்றைப் பேணிவந்தால்
கலகம் ஒழியக் கண்டிடலாம்
நன்றாய் நாமும் கைகோத்து
நட்பாய் வாழ லாகும்மே !
ஒன்றே இந்த உலகமென்றும்
ஒன்றே இறைவன் உண்டென்றும்
அன்றே சொன்னார் ஆன்றோர்கள்
அதனை நாமோ எதிர்க்கின்றோம்
நன்றே என்றன வழிமட்டும்
நன்றில் பிறரின் வழியென்று
வன்மம் பேசி அலைகின்றார்
வஞ்சம் கொண்ட நெஞ்சோரே !
இணங்கி வாழ்தல் இன்பவழி
என்றும் அதுவே ஏற்றவழி
பிணங்கி வாழ்தல் துன்பவழி
பேணா திருப்போம் அந்தவழி
உணர்ந்து வாழ்வோம் உண்மைவழி
உலகில் அதுவே நன்மைவழி
வணங்கி உய்வோம் வல்லவனை
வழியில் சிறந்த தவன்வழியே !
**************************************************************************
போரா ளிகளாய்ப் பலரிருந்தும்
போன உயிரோ பெருந்தொகையாம்
போரால் பொதுவில் இழப்புகளைப்
பொருளா தாரச் சரிவுகளை
ஏரா ளம்தான் நாடுகளும்
இன்றும் காணும் கதைகளுண்டு!
தீராச் சிக்கல் இதுநீங்கி
திரும்பி எழுதல் சுலபமில்லை!
மொழிப்போர் என்றே முழங்கிடுவார்
முனைந்தே அதற்கும் உயிர்விடுவார்
விழிப்போர் உணர்வார் உயிர்மதிப்பை
வீணாய் எதற்கும் சாகாரே!
அழிப்பார் இனத்தின் பெயர்கொண்டே
அப்பா விகளை இவரெல்லாம்
குழிக்குள் தள்ளி மதமென்றே
கும்மா ளமிடும் சிலருமுண்டு
இன்றோ உலகில் புதுமைப்போர்
இருட்டாய்ப் பரவும் கோறணியால்
நின்றே நித்தம் அதனோடு
நிசமாய் மனிதர் மோதுகிறார்
என்றோ இப்போர் இறுதியுறும்?
எவர்தான் வெல்வார் காத்திருப்போம்!
கொன்று குவிக்கும் கோரணியா?
கொலைக்கும் அஞ்சா மனிதர்களா?