சாவே வா!
மலர்மலரு மென்றெண்ணி மலர்ச்செடியை நட்டு
மலரும்வரை நீர்வார்ப்பான்; மலரவிலை யென்றால்
உளமொடிந்தே அச்செடியை உருவழிப்பான்! என்றும்
உதவிடும்நற் காய்கறிகள் செடிநட்டு வைப்பான்!
உலகினிலே மனிதனாய் உருவெடுத்தேன்; ஆனால்
ஒன்றுக்கு முதவாத எட்டிக்கா யான
நிலையறிந்தும் ஏனென்னை வாழவிடு கின்றாய்?
நெருங்கியெனை அணைப்பதற்கே இன்னேவா சாவே!
என்னாலும் இவ்வுலகிற் கேதேனும் நன்மை
ஏற்படலா மென்றெண்ணி விடுத்தாயோ என்னை?
மண்வீடு கட்டிவிளை யாடுஞ்சிறு பிள்ளை
மண்வீட்டாற் பயனில்லை என்றறிந்து கலைத்துச்
சென்றிடுமே! அதுபோல மண்வீடாய் என்னைச்
சீருலகில் ஆக்கிவைத்தாய்! என்னாலே ஏதும்
நன்மையிலை என்றறிந்தால் அழிப்பதுதான் நீதி!
நானுன்னை விரும்புகிறேன் இன்னேவா சாவே!
வறியோரின் நிலையுயர்ந்த வகையில்லை! என்றன்
வாழ்க்கையினை வளப்படுத்த வழியில்லை! துன்பம்
பெருகியெனைத் தினருந்தினமும் பேய்போல ஆட்டப்
பித்தனைப்போல் திரிகின்றேன்; பெருக்குகிறேன் கண்ணீர்!
பொருளற்ற பாட்டானேன்! திருவற்ற வாழ்க்கை
பொங்கியெழும் அலைகடலில் சிறுதுரும்பாம்! உன்னை
விரும்பித்தான் அழைக்கின்றேன்; வேகமுடன் என்றன்
வேதனையைத் துடைத்துவிட இன்னேவா சாவே!
அன்புவழி காட்டியநல் புத்தனைநீ கொண்டாய்!
அறநெறியைப் பரப்பிட்ட காந்தியைநீ கொண்டாய்!
இன்பவழி காட்டிட்ட ஏசுவையுங் கொண்டாய்!
இருளகற்றி வாழ்ந்திட்ட நபியினையுங் கொண்டாய்!
நன்னெறியைத் தந்தவராம் வள்ளுவனைக் கொண்டாய்!
நலிந்தாரின் துயர்துடைத்த லிங்கனையுங் கொண்டாய்!
வன்னெஞ்சக் கூற்றேநீ நல்லாரை விட்டு
வாழ்வற்ற என்னைக்கொள்ள இன்னேவா சாவே!
கனிஈயாத் தருவாகக் காசினியில் வாழ்ந்து
கடைநிலையில் உழலுமெனைக் கண்ணெடுத்துப் பார்த்துக்
கனிவுடனே உன்கொடிய கைகளினால் என்னைக்
கணமும்நீ தயங்காது நசுக்கிடுவாய்! அண்டத்
துணிவிலையோ உன்றனுக்கு? தூ! தூ! தூ! வெட்கம்
துன்பத்தீ வாட்டுவதால் துடிக்கின்ற புழுவாய்
இனியும்நான் இவ்வுலகில் ஏற்றக்கு வாழ?
என்னாறவை
நீகொள்ள இன்னேவா சாவே?