நல்மழையே நில்!
வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ?
உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே!
கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணுற்றுக் கலங்கிட்டோம்!
படும்பாட்டை வெல்வதற்கோ பலவழிகள் வேண்டிநின்றோம்!
கண்ணுறக்கம் போக்கிவிட்டாய்க் காண்திசையில் நீர்பரப்பி!
விண்ணவளே நீபுரியும் வேடிக்கை விட்டிடுவாய்!
இயற்கைமகள் நீநடத்தும் இவ்வேலை எதுவரைக்கும்?
செயற்கைமிகு சிந்தனையின் செயல்பாட்டின் விளைவிதுவோ?
எப்பிழைதான் மனிதர்கள் இயற்கைக்குச் செய்தாலும்
அப்பிழையைப் பொறுப்பதன்றோ அன்னையவள் அடையாளம்!
செல்வழியும் தெரியாமல் சேய்கள்தாம் தவிக்கின்றோம்!
நல்வழியும் நீகாட்டி நன்மைமிகச் செய்திடுவாய்!
இனியுமென்ன சோதனைகள் எங்களுக்குத் தரவுள்ளாய்?
இனிமைமிகு நல்வாழ்வை ஏன்பறித்துக் கொள்கின்றாய்?
மரம்வளர்க்கத் தவறிட்டோம் மலைமகளே மன்னிப்பாய்!
தரமுயர்த்த இயற்கையினைத் தாழ்த்திடவே இனிமாட்டோம்!
குலங்காத்த குலமகளே குடியமர வகைச்செய்வாய்!
நலங்காக்கும் நல்மழையே
நகர்!
**********************************************************************************************
எது கவிதை ?புதுக்கவிதை எழுதிவரும் புதுமையுளம் படைத்தோரே;
எதுகவிதை என்றறிய இலக்கணமுங் கற்றீரோ?
முதுக்கவிதை படைத்திட்ட முன்னோர்தாள் பற்றீரோ?
மதுக்கவிதை எழுதிவரும் மரபுவழி மறந்தீரோ?
புதுமைகளை ஏற்பதிலே பொதுவுணர்வு மிங்கிருக்கு!
புதுக்கவிதை பழைமையிலே பூத்துவந்த புதுவழக்கு!
பதுமையல்ல பழைமையதும் பதுங்கிடவே அறிந்திடுக!
புதுநெறிதான் உயர்ந்ததென்ற போக்கதனை மாற்றிடுக!
விதிவகுத்த நம்முன்னோர் வீணரல்லர் விளங்கிடுக!
சதிவலையைப் பின்னிவைக்கும் சதிராட்டம் நிறுத்திடுக!
புதுக்கவிதை எனும்வழக்கைப் புறந்தள்ளி வைத்திடுக!
மதிப்பளித்துப் பழைமைவழி மகிழ்ந்துடனே நடந்திடுக!
மரபதனைக் காப்பதொன்றே மதிப்பளிக்கும் நல்முறையாம்!
கரமதனைக் கோத்துநின்றால் கறையாவும் நீங்கிடுமாம்!
உரமதனை இட்டுவைத்தால் உளமதுவும் தெளிவுறுமாம்!
தரம்நிறைந்த முதுக்கவிதை தரணியிலே நிலைத்திடுமாம்!
உரைவீச்சைக் கவிதையென உரைப்பதையே தவிர்த்திடுக!
கரையோரம் நின்றுகொண்டு கடலாழம் எண்ணாதீர்!
கரைதாண்டி கடல்வந்தால் கவிமுத்தும் எடுத்திடலாம்!
உரைவீச்சைக்
கடந்துவந்தால் உயர்கவிதை படைத்திடலாம்!