ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிச்சுடர் பெருங்குளம் ஹாஜா


 

பண்ணை மலைநாடு

வண்டு மலரூத வசந்தம் மருவிட
            வானத்து வட்டநிலா
வளர்ந்து கவின்கூட்ட வைரமணித் தாரகைகள்
            வார்க்கும் தண்ணொளி

குண்டு மலர்மல்லி குழல்விரித்த நறுமணம்
            குழைந்தே இதழ்காட்ட
கொவ்வைக் கனியமுது கோலக் கருமுகில்
            கூவும் குயிலினத்தைக்

கண்டு விளையாடும் நீலக் கடலொலியில்
            கலைகூட்டும் கயலினம்
      கதிர்வீசும் பவளநிறக் கதிரவன் கீழ்உதயக்
            காட்சி சேர்வைகை

பண்டு சரிதையைப் பரத்தும் பொன்னோடு
            பண்பாடும் புலமையிலே
      பளிச்சிடும் தங்கவயல் பால்ஊற்று ரப்பர், ஈயம்
             பண்ணை மலைநாடு!

*****************************************************************************************
மனச்சிறகுகள்

வானில் சிறகுகள் விரிக்கிறது – மனம்
வட்ட நிலாவில் குளிக்கிறது!
வேனில் கூதல் காய்கிறது – ஒரு
விதையில் விருட்சம் காண்கிறது!
 
உலகம் சுற்றச் செல்கிறது – மனம்
உறவைப் பெருக்கிக் கொள்கிறது!
அழகை நாடிப் போகிறது – அதில்
ஆழம் காட்ட மறுக்கிறது!
 
தடைகள் கடந்தும் நிள்கிறது – மனம்
தாளம் போட்டுக் குதிக்கிறது!
விடைகள் கேட்டுத் தெளிகிறது – பெரும்
வெள்ளம் போலப் பாய்கிறது!

புதுமை நோக்கி நடக்கிறது – மனம்
பொக்கிஷ மாக இருக்கிறது!
பொதுமை தேடித் துடிக்கிறது – மதுப்
புகழில் இன்பம் காண்கிறது!
 
கட்டுப் பாடுகள் உடைக்கிறது – மனம்
கவிதை பாடிக் களிக்கிறது!
எட்டும் வரைகள் இல்லாமல் – அந்த
எட்டாக் கோள்களில் நுழைகிறது!

கவிஞர் எஸ்.பி. செல்லையா


 

இதற்குத்தானா
 
மாலையிலே பூந்தோட்ட மரத்தின் மீது
      மகிழ்வோடு காத்திருப்பீர் மாங்கா யொன்றை
சேலையிலே மறைத்தவா றங்கு நானும்
      தெரியாமல் வந்திடுவேன்! கதிரோன் றன்னைக்
காலையிலே கண்டதொரு கமலம் போலக்
      களிப்போடு குதித்தோடி வருவீர்! அந்த
நாளையிலே நடந்ததெல்லாம் மறந்தீர்! என்றன்
      நலமெல்லாம் உண்டீரே இதற்குத் தானா?
 
கையோடு கைகோத்துக் கடலி னோரம்
        காற்றுமணற் பரப்பதனி லமர்ந்தோ மன்று
“மெய்யெல்லாம் மின்சாரம் தாக்கு துந்தன்
      மேனிதனைத் தொட்டவுடன்” என்று மெல்லக்
“கொய்யாவே! என்னின்பக் குமுதப் பூவே!
      கொல்லாதே” எனஉரைத்து மடியிற் சாய்ந்து
கொய்யாமற் கொய்தணைத்து இன்பஞ் சேர்த்துக்
      கொவ்வைஇதழ் சுவைத்தீரே! இதற்குத் தானா?
 
“காதலுக்குச் சாதியிலை! கலக்கம் வேண்டாம்
      கற்கண்டே! உனைப்பிரியேன்! நீதான் இன்றேல்
நாதமிலா வீணைநரம் பாகும் வாழ்வு
      நம்பிடுவாய்! இதுஉறுதி” என்றே சொல்லி
மோதுதிரை யன்னமனம் குளிரச் செய்து
      முகத்தோடு முகம்புகைத்து முழுமை இன்பப்
போதையெல்லாம் என்றனிடம் புகன்றீர்! பெண்மைப்
        பொருளெல்லாம் துய்த்தீரே! இதற்குத் தானா?
 
“குடித்தஉட னுயிர்போக்கும் விடமோ? இந்தக்
      கோதையவள் வெண்பற்க ளிடையி னூறல்!
தடித்தஉளக் குணமுடையார் பிரித்து வைத்த
       சாதிமதச் சூழ்ச்சியெலாம் பாறை மோதி
வெடித்துநனி சிதறுகின்ற அலையாம்! நந்தம்
        விருப்பந்தான் ஈடேறும்! அமிழ்தே” என்று
பிடித்துஉட லிறுகணைத்து வெறித்துப் பார்த்துப்
           பீடுண்டு சென்றீரே! இதற்குத் தானா?

கவிஞர் எஸ்.முஹம்மது மைதீன்


 

விரைந்தெழுந்தே வாராய்!
 
அச்சமின்றி அவனியிலே ஆண்மையுடன் வாழ்ந்த
      அரும்பேற்றை இழந்துழலும் ஆய்தமிழா! உன்னில்
அச்சமெலாம் குடிகொண்(டு) ஆட்சிசெய்வ தேனோ?
      ஆய்ந்திடுங்கால் உண்மையினை ஆங்குணர்ந்து கொள்வாய்!
இச்சகங்கள் பலபேசி இனபேதம் சொன்ன
        இதயமில்லா இழிஞருடன் இணைந்ததனா லன்றோ?
ஒச்சமிலா ஓரினமாய் உயர்ந்தோங்கி நின்ற
      உன்பேற்றை இழந்திட்டாய்! உளம்நலிந்து விட்டாய்!
 
சாத்திரங்கள் சொன்னதெலாம் சரியென்று நம்பிச்
      சாதியினச் சகதிக்குள் சாய்ந்திட்டாய்; வாழ்வில்
சாத்தியம்சேர் செயலுக்கும் சகுனங்கள் பார்த்துத்
    தன்னம்பிக் கையற்றே தளர்ந்திட்டாய்; உண்மை
நேத்திரமாம் ஆறறிவால் நீளுலகைக் காணா
      நிலையாலே மாட்சியெலாம் நீயிழந்தே, ஓட்டைப்
பாத்திரம்போல் தரமற்றுப் பாழாகிப் பாரோர்
      பரிதாபக் கூற்றுக்கும் பலியாகி விட்டாய்!
 
உடல்நோக உழைத்திட்டாய்! ஊதியமும் பெற்றாய்!
      உற்றதொரு குறைநீக்க உவந்தென்ன செய்தாய்?
உடலோ(டு) உய்யவரும் உளத்தையும் தாக்கி
      உயிர்மாய்க்கும் கள்ளுக்கே உன்செல்வம் ஈந்தாய்!
கடல்தாண்டி அறம்வளர்த்த கருமமெலாம் இன்று
    கடலாடும் துரும்பேபோல் காணுதடா தோழா!
தொடர்ந்திட்ட மடமையினைத் தூரத்தே ஓட்டத்
      துணிந்திலையோ? தமிழா, உன் தொல்வீரம் எங்கே?
 
அஞ்ஞான ஆழியிலே அமிழ்ந்திருந்தோ ரெல்லாம்
      அறிவொளிரும் சாதனையால் அணிபெற்றார்; அன்றே
மெய்ஞ்ஞான நெறிபிறழா மேன்மையுடன் நின்று
      விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்ட நாமோ
எஞ்ஞான்றும் விடிவில்லா இழிமையிலே மூழ்கி
      எதிர்கண்டார் நகைப்பிற்கும் இலக்காகி விட்டோம்
நெஞ்சாரக் கணமேனும் நினைத்திட்டால் உள்ளம்
      நெருப்பாகிக் குமையுதடா நேயமிகு தோழா!
 
ஆண்டஇனம் என்றுதினம் ஆர்ப்பரித்தால் மட்டும்
      ஆகிவரா தெச்செயலும், ஆதலினால் தோழா
ஈண்டுநமைச் சூழ்ந்துறையும் இருளகற்ற ஒன்றாய்
      இணைந்திடுவாய் மொழியின்கீழ் இன்தோழா! வாழ்வை
வீரமிகு செந்தமிழா வினையாற்ற உன்னை
    வேண்டுகிறேன்; குலங்காக்க விரைந்திடுவாய்! கொண்ட
வேதனைகள் போதுமினி விரைந்தெழுந்தே வாராய்!

கவிஞர் எம்.எஸ். அமிர்தவல்லி, பத்துப்பகாட்டு


 

இட்ட முத்தம் காயுதையா
 
போய்வருவே வொன்று சொல்லி
      போன திங்கள் போன மச்சான்
தேய் நிலவாய் நான் உருகி
      தினந்தினமும் எலும்பானேன்
 
நின்று நின்றுநிலை குலைந்தேன்
      நிம்மதியை நானிழந்தேன்
அன்றாடம் உம் நினைப்பு
      அலைக்கழிக்கத் துரும்பானேன்
 
கல்ல மலர் தொடுத்தெடுத்தேன்
      நறுமணமும் வீசவில்லை
உன்னமதில் உம்மையன்றி
      ஓருருவம் தெரியவில்லை
 
நம்பியிங்கு இருக்கின்றேன்
      நாளுந்தான் செல்கிறது
தெம்பின்றி தேம்புகின்றேன்
      தேற்றுதற்கு யாருமில்லை
 
பஞ்சணையும் காத்திருக்க
      பாவையுடல் வாடுதையா
எஞ்சிய நன்னாட்களெல்லாம்
      ஏக்கத்தால் தேயுதையா
 
கன்னத்தில் இட்ட முத்தம்
      காற்றிவிலே காயுதையா
எண்ணத்தை எழுதிவிட்டேன்
       எனைத்தேடி வாருமையா

************************************************************************************

நேரு வாழ்வே நிலையான காவியம்!
 
மனிதகுலப் பிணிமூப்பு இறப்பைக் கண்டு
      மாற்றும்வழி அன்பென்று உரைத்த புத்தன்,
இனியதோர் அன்புநெறி உரைத்தும் தீயோர்
      இன்னலினால் உயிர்நீக்க இயேசு நாதர்,
புனிதமுடன் மக்கட்குலம் வாழ எண்ணிப்
      புல்லர்களால் அல்லலுற்ற நபிகன் மற்றும்
மனிதகுலத் தெய்வங்கள் பெயரைப் போல
      மண்ணுலகில் நேருபுகழ் அழியாச் செல்வம்!
 
முல்லைக்குத் தேர்கொடுத்து மக்கள் நெஞ்சில்
      முறையாக இடம்பிடித்த பாரி போல,
பொல்லாத குனிராலே மயிலும் ஆடப்
      போர்வைதனைப் போர்த்திவிட்ட பேகன் போல
நல்லதொரு கருநெல்லி கிடைக்கப் பெற்றும்
      நற்றமிழ்த்தாய்க் குவந்தளித்த அதிக மான்போல்
எல்லையற்ற காலம்வரை நேரு வாழ்வை
      இலக்கியத்தின் வரிசையிலே உலகம் ஏற்கும்!
 
உணர்வுக்கு விழிப்பூட்டி மக்கள் வாழ
      உயிர்மாய்க்கும் நஞ்சுண்ட சாக்ர டீசும்
இனவெறியின் கொடுமைதனை அழிக்க வெண்ணி
      இறப்புலகிற் கேகிவிட்ட லிங்கன் மற்றும்
மனமகிழத் தன்னாட்டில் அன்பைப் பாய்ச்சி
      மரணத்தை அரவணைத்த காந்தி வாழ்வும்
உரைக்கின்ற காவியமாய் உலகம் ஏற்கும்!
 
தன்னலத்தை உதறிவிட்டு மக்கட் காகத்
      தரணிதனில் வாழ்ந்துவந்த நல்லோன் வாழ்வும்
எண்ணத்தை எழுத்தாக்கி மக்கன் நெஞ்சில்
      இடம்பிடித்து வள்ளுவன்போல் இருந்த பேரும்
பொன்னான நன்னெறியை பேணிக் காத்துப்
      புதுமைநெறி காத்திங்கு வாழ்ந்த தூயோர்
தன்னுடலைத் தன்பொருளை உயிரை இந்தத்
        தரணிக்கே அளித்தவர்க்கு இறப்பே இல்லை!

கவிஞர் உ.க. அப்துல் ரஹ்மான்


 

பாருள்ளவரை வாழ்வாய்
 
பொதிகை மலையில் பிறந்து
      பூவுல கெல்லாம் பரந்து
மதுரைப் பதியில் இருந்து
      மன்னர் பலரால் வளர்ந்து
மதிபோல் உலகில் ஒளிர்ந்து
      மாறா இளமை கொண்டு
சதியால் அழியா உருவாய்த்
      தனித்தே இயங்கு கின்றாய்
 
உலகில் மொழியின் முதலாய்
      உதித்தாய் உன்னின் பெருமை
அழகில் எழிலில் உயர்ந்தாய்!
      அழிய கலைகள் தந்தாய்!
பலனில் பயனில் சிறந்தாய்
      பாரில் மேலும் மிளிர்ந்தாய்
நிலத்தில் நீதி தந்தாய்
      நெஞ்சில் ஓவிய மானாய்
 
உடலும் உயிரு மானாய்
      உள்ளும் புறமும் ஆனாய்
கடல்சூழ் உலகம் போற்றும்
      கவின்மிகு குறளா மானாய்
மடலும் மணமும் போல
      மணியும் சிலம்பும் தந்தாய்
அடைவைத் தந்தாய் மேலும்
      அறிஞர் பலரை ஈந்தாய்
 
அன்னியர் நின்னெழில் கண்டே
      அன்புடன் அரவணைத் துன்னைப்
பொன்னெனப் புகழ்ந்து போற்றிப்
      புகுத்தினர் தம்மின் மொழியில்
கன்னியே நின்றன் உயர்வைக்
      காசினி புகழு தம்மா!
உன்னிலும் உயர்ந்து காணும்
      ஒருமொழி கண்டா ருண்டோ?
 
நந்தா ஒளியை வீசும்
    நற்றமி ழேயென் தாயே!
உன்றன் பெருமை கூற
      உயர்வில் சிறியேன் யானே!
சிந்தை மகிழ்ந்தே உந்தன்
      சீர்மிகு தாளைப் பணிந்தேன்
பைந்தமிழ்த் தாயே நீஇப்
       பாருள் ளவரை வாழ்வாய்!

*************************************************************************************

சித்திரக் கலையே! யாண்டும் வாழ்கவே!
 
ஆசைக் கரும்பே அல்லிப் பூவே
      அழகுத் தமிழே அன்பின் வடிவே
வீசும் காற்றே விளையும் பயிரே
      வித்தக மணியே இரத்தினச் சுடரே
பாசம் பொங்கும் ‘ஹாரூன்’ மகனே
      பச்சைக் கிளியே பனிமலர்த் தேனே
நேச அன்னை ரமலான் அஜினா
      நித்தம் முத்தும் ‘சமருதீன்’ கனியே
 
பாண்டியன் நாட்டில் பிறப்பை விடுத்தே
      மலையக மண்ணில் பாதம் பதித்தாய்
காண்போர் வியக்கக் கண்ணைப் பறித்தே
      கைகள் கொட்டிக் கவினிதழ் விரித்தாய்
ஆண்டும் ஒன்றாய் அகவை செல்ல
      அகமே நிறைந்தோம் ஆருயிர்க் கோவே
தேன்மழை பெருகும் திருவாய் சிந்தித்
      திகழும் உருவே! சித்திரக் கலையே!
 
உயர்ந்து வளர்ந்து ஒண்கலை பயின்று
      ஓதும் ‘குருஆன்’ உண்மை உணர்ந்து
நியமம் அறிந்து நேர்மை புரிந்து
      நித்தம் ‘கலிமா’ சத்தில் மிதந்து
பயன்தரும் ‘மார்க்கம்’ இசுலாம் காத்து
      பாரத மெங்கும் தீன்னெறி விதைத்து
இயக்கும் அன்னை தந்தைசொல் கேட்டு
      இறையருள் பெற்று யாண்டும் வாழ்கவே!  

கவிஞர் இரா. வீரப்பன்


 

தமிழ்த்தொண்டு

தென்றல்
தென்றலே! நீயும் சுகத்தினை யூட்டத் தென்றிசையில் நின்று வருவதேன் நித்தமும் அன்புடன் நீள்புவிக்கு? என்றும் தமிழமு துண்டிடின் இன்பென, இப்புவியில் கண்டனைக் கொல்லோ களிப்புடன் தென்றிசை கொண்டனையோ!
 
மலர்
சித்திரப் பூவே! சிரிப்பொடு நின்றுநீ தென்றலிலே நித்தமும் ஆடி மகிழ்ந்திடும் வேளையில், நின்மணத்தை இத்தரை மீதினில் எங்கும் பரப்பிடும் எண்ணமுமேன்? தித்திக்கும் செந்தமிழ் சேர்ந்திட்ட நன்மணம் செப்புதற்கோ!
 
வண்டு
வண்ண மலரினைத் தேடியே சென்றிடும் வண்டினங்காள்! சின்னஞ் சிறிய சிறகை விரித்துமே செல்வதெல்லாம் வண்ண மிகுமலர்ச் சோலையில் வந்துறை காதலர்க்குப் பண்ணும் இசைத்துப் பழந்தமிழ் மாண்பைப் பகருதற்கோ!
 
மாலை
மண்ணிசை தோன்றிநல் வானுற வோங்கிய மாமலையே விண்ணைக் கிழித்திடும் தன்மையில் நின்றுமே மேதினியில் கண்ணைக் கவர்ந்திடும் மேகத் திரளினைக் காலடியில் கொண்டு குவித்தலும் தண்டமிழ்த் தன்திறன் கூறுதற்கோ!
 
கடல்
அல்லும் பகலும் அலுப்பு மிலாமலே அம்புவிக்குச் சொல்லும் மொழியாதோ? சொல்லிடு வாய்நீ திரைக்கடலே! கல்லும் கவிதைகள் பாடும் பெருமையைக் கற்றுமேநீ வல்ல தமிழ்மொழி மாண்பினைச் சொல்லும் வளர்பணியோ
 
குயில்
கங்குற் கருங்குயி லே! தமிழ் கற்றுக் களிப்புடனே சங்க இலக்கியம் தந்திடும் இன்பினைச் சாற்றிடவும் எங்கும் பறந்துநீ இப்புவி தன்னில் இசைத்தமிழைப் பொங்கிடும் ஆவலால் நிண்றுப் பணிசெயப் போந்தனையோ!
 
மயில்

மயிலே! வளர்தமிழ் மாண்புறக் கற்றுநீ, மாநிலத்தில் ஒயிலாய் நடந்திட ஒண்டமிழ்க் கூத்தும் ஒழுங்குடனே பயின்று நடமிடும் பண்பினில் தேரிய பான்மையினால் இயலிசை விட்டுநீ இன்றமிழ்க் கூத்துக் கிசைந்தனையோ!
 
கிளி
‘மங்காத் தமிழ்மொழி மாசறக் கற்றுநீ வையகத்தில் எங்கும் பரப்பிட ஏற்றம் பெறவிலே’ என்றுபலர் ‘பங்கம் அடைந்திடும் பைந்தமிழ்’ என்றுமே பைங்கிளியே! சங்கப் புலவரும் சாற்றினர் ஆயினும், தாழ்ந்தனையோ!
 
மங்கை
வண்டமிழ் வாழ்வு வளமுடன் கண்டு மகிழ்வுறவே கொண்ட இயலிசை கூத்தெனும் முத்தமிழ் கூட்டுவிக்கும் கெண்டை விழிநிகர் மாதர் அணைப்பிலே ஆடவரும் கண்டு மகிழ்ந்திடச் செய்வதும்; மாத்தமிழ் காட்டுதற்கோ!

சமுதாயக் கவிஞர் ம.அ. சந்திரன், தாசேக்கு குளுகோர்


 

வாசிப்போம் நேசிப்போம்!
 
பத்திரிகை வாசிப்போம்! தமிழினவீ ரத்தை
    பறைசாற்றும் கவிதைகள் நேசிப்போம்! ஏற்ற
புத்தகங்கள் வாசிப்போம்! பழுதுறாமல் மின்னும்
    பொற்றமிழை உயிராக நேசிப்போம்! புதுமைச்
சித்திரத்தை வாசிப்போம்! அறியாமை கொன்றெம்
    சீருயர்த்தும் பகுத்தறிவை நேசிப்போம்! குறளை
பற்றுடனே வாசிப்போம்! அறிவுக்கு நல்ல
    பாதையிடும் அறிவியலை நேசிப்போம்! வாரீர்!
 
புகழ்வானை நேசிப்போம்! பொழுதெல்லா மங்கே
    பூக்கின்ற கவிதைகளை வாசிப்போம்! காதல்
அகத்தாளை நேசிப்போம்! புதிராகப் பேசி
    ஆடுகிற மழலைகளை வாசிப்போம்! நட்பு
முகத்தானை நேசிப்போம்! மூடத்தைக் கொல்லும்
    முற்போக்கு நடப்புகளை வாசிப்போம்! நேர்மை
சகவாசம் நேசிப்போம் விழிப்புணர்வை ஊட்டும்
    சத்தான மீட்சிகளை வாசிப்போம்! வாரீர்!
 
 
வாசிப்போம்! வாசிப்போம்! தமிழன்னை வாரி
    வழங்குகிற புதுமைகளை சோம்பலன்றி நாளும்!
நேசிப்போம்! நேசிப்போம்! காதல்தரும் மங்கை
    நீள்விழியில் மலர்கின்ற அன்பென்னும் பூவை!
வாசிப்போம்! வாசிப்போம்! இயற்கையென்னும் கைகள்
    வரைகின்ற காட்சிகளை மிகுவிருப்பங் கொண்டு!
நேசிப்போம்! நேசிப்போம்! மனிதநேயம் காட்டும்
    நெஞ்சத்தை நெஞ்சிருக்கும் வரைவாழ்த்தி! வாரீர்!

****************************************************************************************

கருப்புச் சட்டை

கருப்புச் சட்டை பதவிச் சண்டைக்
      கத்தியால் கிழிந்ததே! – கண்டு
குருட்டு மடமைக் கூட்டம் கையைக்
      கொட்டிச் சிரிக்குதே!
 
சடங்கும் சாதியும் சுனாமி போல
      தலைவிரித் தெம்புதே! – இதை
அடக்கப் பாயும் கைகள் வலிமை
      யற்றுத் தொங்குதே!
 
திருந்திய தமிழ்மணம் புரியும் வழக்கம்
      தேய்பிறை யாச்சுதே! – இந்தக்
குறையினைப் போக்கும் பகுத்தறி வாளர்
      கொள்கை தூங்குதே?
 
போலிச் சாமியார் கொட்டம் வான்போல்
      போகுது நீண்டுதான்! -  இதுக்கு
வேலி போடு வார்கள் வல்லமை
      வீழ்ந்ததே ஈங்குதான்!
 
ஆரிய தந்திர மந்திர ஆளுமை
      அகல மானதே! – இதை
வீரிய உணர்வால் வீழ்த்துவார் பேச்சு
      வேகம் போனதே!
 
மூட இராணுவம் வீட்டைச் சுற்றி
      முற்றுகை இட்டதே! – இதை
ஓட விரட்டி உதைத்திடும் கால்கள்
      ஒடிந்து நொண்டுதே!
 
மடமை விளம்பரம் ஊடக மெங்கும
      மல்கித் துள்ளுதே! -  இதை
உடைக்க எழுதுகோல் தூக்கும் கூட்டம்
      ஒடுங்கிப் பம்முதே.!
 
புரட்சி யாளர்கள் முகத்தை மறந்ததே
      புதிய தலைமுறை! – இந்த
வறட்சிப் போக்கை மாற்றணும் பெரியார்
       வளர்த்த பரம்பரை!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...